ETV Bharat / state

'10 நாள் ஆர்எஸ்எஸ் முகாமிற்கு வந்தால் தான் தமிழன் உருப்படியாகலாம்' - டெய்ஸி பரபரப்பு பேச்சு

author img

By

Published : Feb 19, 2023, 12:30 PM IST

ஒவ்வொரு தமிழனும் 10 நாட்களுக்கு ஆர்எஸ்எஸ் முகாமில் கலந்துகொண்டால் தான் உருப்படியான ஆண்மகனாகவும், பட்டை தீட்டிய வைரமாகவும் மாறலாம் என பாஜக மாநில சிறுபான்மை அணி தலைவர் டெய்ஸி தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

'10 நாள் ஆர்எஸ்எஸ் வந்தால் தமிழன் உருப்படியாகலாம்' - டெய்ஸி பரபரப்பு பேச்சு

திருச்சி: பாஜகவின் சிறுபான்மை அணியின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று (பிப்.19) திருச்சியில் நடந்தது. அதில் பங்கேற்ற மாநில சிறுபான்மை அணி தலைவர் டெய்சி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசும், பாஜக கட்சியும் சிறுபான்மையினருக்கு எதிரானது என்ற பரப்புரையை தமிழ்நாட்டில் வலுவாக செய்து வருவதாகவும் குற்றம்சாட்டினர். திமுகவின் பொய்யான பரப்புரையை உடைத்து மலர்ச்சியுடன் சிறுபான்மை அணியினர் வளர்ந்து கொண்டிருப்பதாகவும்; எனவே கிறிஸ்தவர், இஸ்லாமிய மதத்தினர் அதைப் புரிந்துகொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், சிறுபான்மையின மக்கள் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி வருவதாகவும், இதை தமிழ்நாடு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். திமுக ஆட்சியில் போதைப்பொருட்கள் அதிகமாக புழக்கத்தில் உள்ளதாகவும், இந்த போதை கலாசாரத்தில் மூழ்கிய தமிழ்நாடு இளைஞர்கள் உழைக்காமல், வட இந்தியர்கள் தமிழ்நாட்டில் அதிகரித்து வருவதாகவும் கூறினார். இதனால், தமிழர்களின் நிலை முயல், ஆமை கதையாக மாறி வருவதாகவும்; இதனால், தொழில் முடக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

எனவே, தமிழ்நாடு அரசு புயல் வேக நடவடிக்கையால், மாநிலத்தில் போதை கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார். இஸ்லாமியர்களுக்குள் பெரிய வன்முறைகள் நிகழ்வதாகவும், அவற்றை தவிர்க்க பாஜக சிறுபான்மை அணி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். அதிகமான தற்கொலைக்கு காரணமான ஆன்லைன் விளையாட்டுகளை அரசு தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அப்போது, தமிழ்நாடு அரசு கொண்டுவந்த ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வதற்கான மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் வைத்துள்ளதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டுகளினால் ஏற்படும் உயிரிழப்புகளை காட்டிலும், போதைப்பொருட்கள் உபயோகிக்கும் பழக்கத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள் தான் அதிகம் என்றும்; எனவே, முதலில் ஒழிக்க வேண்டியது போதைப்பழக்கத்தை தான் என்றும் பதில் கூறினார்.

மேலும் பேசிய அவர், தமிழர்கள், அனைத்து மாநிலங்களுக்கும் சென்று தொழில் செய்ய வேண்டுமென்றால், நாம் அனைவரும் இந்தி கற்றுக்கொள்வது அவசியம் என்று தெரிவித்தார். தேசப்பணியில் ஈடுபடும் பிரதமர் மோடியை ஊடகங்கள் ரவுண்டு கட்டி, கிண்டல் செய்வது நல்லதல்ல எனவும் அவர் தெரிவித்தார்.

திமுக ஊடகங்கள் தான், பாஜக கட்சியை பாலியல் சீண்டல் கட்சியாக சித்தரித்து வருவதாகவும்; பாஜக தான் பெண்களுக்கு பாதுகாப்பான கட்சி என்று தெரிவித்தார். ஆர்எஸ்எஸ் பின்னணியில் தான் பாஜக தோன்றியதாகவும்; பிற கட்சியிலிருந்து உள்ளவர்கள் ஒரு 10 நாட்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர்ந்து பார்க்க வேண்டும் எனவும் கூறினார். அதோடு, காயத்ரி ரகுராம் விவகாரத்தில் கட்சியில் உள்ள பிற பெண்களிடம் கட்சி குறித்து கேட்டறிந்து கொள்ளவேண்டும் எனவும்; நூற்றுக்கும் ஒரு சதவீதம் என காயத்ரி ரகுராம் அளித்த புகாரைப் பார்க்காமல், கட்சியில் மீதமுள்ள தொண்ணூற்று ஒன்பது சதவீதம் பெண்களின் நிலையை பாருங்கள் என்று பேசினார்.

மேலும், பிற கட்சிகளில் உள்ள ஒவ்வொரு தமிழ் பேசும் ஆண்களும் ஒரு 10 நாள் ஆர்எஸ்எஸ் முகாமில் கலந்து கொள்ள வேண்டும் எனவும்; ஒரு தமிழன் மிகப்பெரிய ஒழுக்கத்தை கற்றுக்கொள்ள வேண்டும் எனவும்; யோகா, மூச்சு பயிற்சி, உடற்பயிற்சி பண்ண வேண்டும் என்றும் முழுக்கமுழுக்க தேசப்பற்றை கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.

மேலும், பெண்களிடம் எப்படி நடக்கவேண்டும் என்பன உள்ளிட்ட அனைத்து பழக்கங்களையும் கற்றுக்கொள்ள வேண்டுமெனில், ஒவ்வொரு தமிழனும் ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாமிற்கு வர வேண்டும் எனக் கூறினார். 10 நாட்களுக்கு பின் ஒரு உருப்படியான ஆண்மகனாக வெளியே வர வேண்டுமெனில், அதே நேரத்தில் பட்டை தீட்டப்பட்ட வைரமாக வர வேண்டுமெனில், ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாமில் கலந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இனவெறியை தூண்டுவதாக சீமான் மீது புகார்.. வடமாநில தொழிலாளர்கள் அச்சம்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.