ETV Bharat / state

ரூ. 294 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை முதலமைச்சர் தொடங்கிவைத்தார்!

author img

By

Published : Nov 4, 2020, 5:26 PM IST

சென்னை : தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் 294 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்ட திட்டப்பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்துவைத்தார்.

  ரூ. 294 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!
ரூ. 294 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!

தலைமைச் செயலகத்தில் இன்று (நவ. 04) நடைபெற்ற நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் இந்தத் திட்டப்பணிகளை தொடங்கிவைத்தார். அத்துடன், பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள குறிப்பில், "தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமாக புதிதாக தொடங்கப்படவுள்ள பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள 250 ஊரகக் குடியிருப்புகளுக்கு ரூபாய் 162 கோடியே 43 லட்சம் மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

மேலும், கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த வெலகலஹள்ளியை அடுத்த 39 குடியிருப்புகளுக்கு 9 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

அதேபோல, அம்மாவட்டத்தின் கீழமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ராயக்கோட்டை அடுத்த 28 குடியிருப்புகளுக்கு 8 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பாலசமுத்திரம் பேரூராட்சியில் 9 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள குடிநீர் அபிவிருத்தித் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

நாகப்பட்டினத்தில் உள்ள 893 குடியிருப்புகளுக்கு கூடுதல் நீராதாரம் ஏற்படுத்த 42 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்படவுள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

தஞ்சாவூர் அடுத்த கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 134 குடியிருப்புகளுக்கு 91 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

திருச்சியை அடுத்த வையம்பட்டி, மருங்காபுரி ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 135 குடியிருப்புகளுக்கு 46 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

தஞ்சாவூரை அடுத்த பிள்ளையார்பட்டி கிராமத்தில் உள்ள 1,153 ஊரகக் குடியிருப்புகளுக்கு 6 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

மதுரையை அடுத்த திருமங்கலம் நகராட்சியில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகராட்சி அலுவலகக் கட்டடம்; தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சியில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர் குடியிருப்பு; ஆவடி, மாநகராட்சியில் 197 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 4 சுத்திகரிப்பு நிலையம் என மொத்தம் 255 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் முடிவுற்ற திட்டப் பணிகளை தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட திரு.வி.க. நகர் ஸ்டிரஹான்ஸ் சாலையில் 13 கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய மண்டல அலுவலகக் கட்டடம், துரைப்பாக்கம் ராஜீவ் காந்தி சாலையில் 1 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புர ஆரம்ப சுகாதார மையக் கட்டடம், தேனாம்பேட்டையை அடுத்த கே.பி. தாசன் சாலையில் 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறப்பு காப்பகக் கட்டடம், வில்லிவாக்கம் சிட்கோ நகர், 4ஆவது பிரதான சாலை குடியிருப்புப் பகுதியில் 1 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா என மொத்தம் 39 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பெருநகர சென்னை மாநகராட்சி திட்ட கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்துவைத்தார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், சென்னை மாநகராட்சியின் பயன்பாட்டிற்காக 4 கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குப்பைகளை உறிஞ்சி அகற்றும் உபகரணங்கள் பொருத்தப்பட்ட 15 சிறியவகை வாகனங்களை, பெருநகர வழங்கிடும் விதமாக அவ்வாகனங்களுக்கான சாவிகளை முதலமைச்சர் இன்று 5 ஓட்டுநர்களுக்கு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க. பாண்டியராஜன், தலைமைச் செயலாளர் சண்முகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் கோ. பிரகாஷ், நகராட்சி நிர்வாக ஆணையர் டாக்டர் கே. பாஸ்கரன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் சி.என். மகேஸ்வரன் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.