ETV Bharat / state

வேளாண் சட்ட முன்வடிவுகள் குறித்த திமுகவின் கேள்விக்கு பதில் என்ன?

author img

By

Published : Sep 23, 2020, 9:53 PM IST

சென்னை : திமுக விவசாயத் தொழிலாளர் அணியால் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு முதலமைச்சர் பழனிசாமியிடம் என்ன பதில் இருக்கிறது? என்று அக்கட்சித் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

வேளாண் சட்ட முன்வடிவுகள் குறித்த திமுக விவசாயத்தொழிலாளர் அணியின் கேள்விக்கு பதில் என்ன ?
வேளாண் சட்ட முன்வடிவுகள் குறித்த திமுக விவசாயத்தொழிலாளர் அணியின் கேள்விக்கு பதில் என்ன ?

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே (செப்டம்பர் 14) மக்களவையில் இதுவரை எட்டிற்கும் மேற்பட்ட சட்ட முன்வடிவுகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

குறிப்பாக, அத்தியாவசிய பொருள்கள் (திருத்த) மசோதா 2020, உழவர் உற்பத்தி வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா 2020, விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு அளித்தல்) விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் மசோதா 2020 ஆகிய மூன்று சட்ட முன்முடிவுகள் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமரால் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மூன்று சட்ட முன்வடிவுகளுக்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட்கள், விசிக, மதிமுக, தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் பாஜக கூட்டணி கட்சியான சிரோமணி அகாலிதளமும் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றன.

நாடாளுமன்றத்தில் இந்த சட்ட முன்வடிவுகளை அதிமுக உறுப்பினர்கள் ஆதரித்ததை அடுத்து தமிழ்நாடு முழுவதும் அதிமுக அரசுக்கு எதிரான மனநிலை அதிகரித்தது.

இந்நிலையில், வேளாண் சட்ட முன்வடிவுகளை ஆதரித்து நேற்று முன்தினம் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டிளித்தார். அதில், "விவசாயம் குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு ஒன்றும் தெரியாது" என காட்டமாக விமர்சித்தார்.

இதற்கு எதிர்வினையாக திமுக விவசாய - விவசாயத் தொழிலாளர் அணி, வேளாண் சட்டமுன்வடிவுகள் குறித்து 10 கேள்விகளை பட்டியலிட்டு முதலமைச்சர் பழனிசாமியை பதிலளிக்கக் கோரியது.

இது குறித்து தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டிருந்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், "விவசாயி என்று தன்னைக் கூறிக் கொள்பவர், விவசாயிகளுக்கு முழுக்க முழுக்க எதிரான வேளாண் சட்டங்களை ஆதரிக்க மாட்டார்.

விவசாயத்தைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது என்று சொல்லியிருக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி. மத்திய அரசின் சட்டங்களைப் பற்றி ஆராய்ந்து கருத்துகளைச் சொல்ல விவசாயியாக இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை; வேளாண்மை பற்றிய அடிப்படை அறிவும், விவசாயிகள் நலனில் அன்பும் அக்கறையும் இருந்தாலே போதுமானது.

இந்தச் சட்டங்களை எதிர்த்து அதிமுக உறுப்பினர் எஸ்.ஆர். பாலசுப்ரமணியன் மாநிலங்கள் அவையில் பேசினாரே; அவருக்கும் விவசாயத்தைப் பற்றி எதுவுமே தெரியாததால்தான் அப்படிப் பேசினாரா?

வடபுலத்தில் லட்சக்கணக்கான விவசாயிகள், இந்தச் சட்டங்களை எதிர்த்து ஆவேசமாகக் குரல் கொடுத்துப் போராடிக் கொண்டிருக்கிறார்களே, அவர்களுக்கு விவசாயத்தைப் பற்றி என்ன தெரியும் என்று கேட்பீர்களா?

“மத்திய பாஜ.க. அரசின் இந்தச் சட்டங்கள், கொள்முதல் கட்டமைப்பை அழித்து விடும்; விவசாயிகளைத் தனியார் கைகளுக்குத் தள்ளிவிடும்; குறைந்தபட்ச ஆதார விலைக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும்" என்று, இந்தச் சட்டங்களை எதிர்க்கும் சிரோமணி அகாலி தளத்தின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் சொல்லியிருக்கிறாரே; அவருக்கும் விவசாயத்தைப்பற்றி எதுவும் தெரியாதா?

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதிக் கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், இடதுசாரிக் கட்சிகள், திமுக உள்ளிட்ட இந்தியாவின் 18 அரசியல் கட்சிகள், இந்தச் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று, இந்தியக் குடியரசுத் தலைவரைக் கேட்டுக் கொண்டுள்ளனவே; அவர்கள் அனைவருக்கும் விவசாயத்தைப் பற்றி எதுவுமே தெரியாதா?

“விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதாரவிலை அளிக்கப்படும் என்ற உறுதிமொழி பொய்யானது" என்று, இந்தச் சட்டங்களை எதிர்த்துக் குற்றம்சாட்டியிருக்கும் அகில இந்திய விவசாயிகளின் ஒருங்கிணைப்புக் குழுவினருக்கு விவசாயம் பற்றி எதுவும் தெரியாதா?

இன்று திமுக விவசாய - விவசாயத் தொழிலாளர் அணியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள முழுப்பக்க விளம்பரத்தில் விவசாயிகளுக்கு என்னென்ன பாதிப்புகள் என்று பட்டியலிடப்பட்டுள்ளது. நாட்டில் ஏராளமானோர் எதிர்க்கும் வேளாண் சட்டங்களை, ஆதரித்த முதல்வர் பழனிசாமி, பட்டியலிடப்பட்டுள்ள பாதிப்புகளுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.