ETV Bharat / state

மருத்துவக் காப்பீட்டு திட்டம் தொடர்பாக ஆவின் நிறுவனத்திற்கு நீதிமன்றம் புதிய உத்தரவு!

author img

By

Published : Nov 21, 2020, 8:17 PM IST

சென்னை : ஆவின் நிறுவனத்தின் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக கருத்துக் கேட்டு, சாத்தியக் கூறுகளை ஆராய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவக் காப்பீட்டு திட்டம் தொடர்பாக ஆவின் நிறுவனத்திற்கு நீதிமன்றம் புதிய உத்தரவு!
மருத்துவக் காப்பீட்டு திட்டம் தொடர்பாக ஆவின் நிறுவனத்திற்கு நீதிமன்றம் புதிய உத்தரவு!

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் இருப்பதை போல தங்களுக்கும் வேண்டுமென ஆவின் நிறுவன ஓய்வு பெற்ற ஊழியரான மோகனரங்கன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி சுரேஷ்குமார் தலைமையிலான அமர்வுக்கு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளீடர் பாலரமேஷ், "அரசு ஊழியர்கள் தங்களது ஊதியத்திலிருந்து மாதாந்திர தவணை செலுத்தி, மருத்துவக் காப்பீடுத் திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர். கூட்டுறவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் இதுவரை காப்பீடு திட்டத்தில் இல்லை. ஆவின் நிறுவன ஊழியர்களும் அது போல் மாதாந்திர சந்தா செலுத்தினால் மட்டுமே அது சாத்தியம்" என தெரிவித்தார்.

இதனையடுத்து மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், மாத சந்தா செலுத்த ஆவின் நிறுவன ஓய்வுப் பெற்ற ஊழியர்கள் பலர் தயாராக இருப்பாத தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், "ஓய்வு பெற்ற ஆவின் ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீடு திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும். இது தொடர்பாக ஆறு மாதங்களுக்குள் ஓய்வுபெற்ற ஊழியர்களிடம் கருத்துக்களை ஆவின் நிறுவனம் கேட்டறிய வேண்டும்.

அவர்களில் 60 விழுக்காட்டும் மேற்பட்டோர் காப்பீட்டுக்கு மாத சந்தா செலுத்த தயாராக இருக்கும் பட்சத்தில், அதனை நடைமுறைப் படுத்துவது குறித்து முடிவெடுக்க வேண்டும்" என ஆவின் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.