ETV Bharat / state

சேலம் எட்டு வழிச்சாலை: 90% நிலம் கையகப்படுத்தப்பட்டால் மட்டுமே திட்டம் தொடங்கப்படும் - இணையமைச்சர் வி.கே.சிங்

author img

By

Published : Jul 12, 2022, 11:44 AM IST

Updated : Jul 12, 2022, 11:55 AM IST

சேலம் எட்டு வழிச்சாலை திட்டம், 90 சதவிகிதம் நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்தால் மட்டுமே தொடங்கப்படும் என மத்திய தரைவழி போக்குவரத்து துறை இணையமைச்சர் வி.கே. சிங் தெரிவித்தார்.

மைச்சர் வி.கே.சிங்
மைச்சர் வி.கே.சிங்

திருப்பத்தூர்: வேலூர் மாவட்டத்தில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் மாவட்டத்தலைவர் மனோகரன் தலைமையில் நேற்று (ஜூலை 11) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய தரைவழி போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்துதுறை இணை அமைச்சர் வி.கே.சிங் கலந்துகொண்டு பேசினார். மேலும் மாநில பொறுப்பாளர்கள் வெங்கடேசன், காத்தியாயினி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் திரளான நிர்வாகிகளுடன் கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் பாஜக வளர்ச்சி: பின்னர், மத்திய இணை அமைச்சர் வி.கே சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நெடுஞ்சாலை மற்றும் சாலைகள் குறித்து ஆய்வு செய்தேன். பிறகு கட்சியினரையும் சந்தித்தேன். தமிழ்நாட்டில் பாஜக வளர்ச்சி குறித்தும் ஆலோசித்தோம். பெரும்பாலான சாலைப் பணிகளை தமிழ்நாடு பொதுப்பணித்துறை செய்து வருகிறது. மேலும் மத்திய சாலை போக்குவரத்துத்துறை நிதி மூலம் பணிகள் நடந்து வருகிறது.

பசுமை விமான நிலையம்: சென்னை விமான நிலைய பணிகள் நடந்து வருகிறது. விரைவில் விமானம் இயக்கி சோதனை செய்யப்படும். மேலும், பசுமை விமான நிலையமும் அமைக்க உள்ளோம். தமிழ்நாட்டு அரசுதான், இதற்கான இடத்தினை அறிவிக்க வேண்டும். இரண்டு இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது. எந்த இடம் என்பதை தமிழ்நாடு அரசுதான் அறிவிக்க வேண்டும்.

சாலைகளை பாதுகாக்கவே சுங்கச்சாவடிகள்: சுங்கச்சாவடிகளை அகற்ற தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது. ஆனால், 1952ஆம் ஆண்டு முதல் உள்ளது நாங்கள் புதிய சுங்கச்சாவடிகளை தொடங்கவில்லை. சாலைகளை சீரமைக்கவும் பாதுக்காகவுமே சுங்கசாவடிகள் உள்ளது. சாலைகளின் நடுவில் உள்ள சுங்கச்சாவடிகள் இரண்டு ஆண்டுகளில் அகற்றப்பட்டு, அனைத்து ஜிபிஎஸ் வசதியுடன் நவீனமயமாக்கப்பட்டு டிஜிட்டல் மூலம் தானியங்கி கட்டணம் கிலோமீட்டருக்கு ஏற்றவாறு வசூலிக்கப்படும்.

சேலம் எட்டு வழிச்சாலை: 90% நிலம் கையகப்படுத்தப்பட்டால் மட்டுமே திட்டம் தொடங்கப்படும் - இணையமைச்சர் வி.கே.சிங்

மதுரை விமானநிலைய பெயர் மாற்றம்: டெல்லி மும்பை நெடுஞ்சாலை பணிகள் அடுத்தாண்டு முடிவடையும். வேலூர் விமான நிலையம் குறித்து தமிழ்நாடு அரசு ஒன்றும் கூறவில்லை. அதற்கு நிலம் தேவைப்படுகிறது, அதை கையகப்படுத்த வேண்டும்" என்றார். மதுரை விமான நிலையம் முத்துராமலிங்க தேவர் எனப் பெயர் மாற்றம் குறித்து அவரிடம் கேட்டபோது, "தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்றி எங்களுக்கு அனுப்பினால் நாங்கள் பரிசீலிப்போம்" என பதிலளித்தார்.

அக்னிபாத்: தொடர்ந்து பேசிய அவர்,"அக்னிபாத் என்பதை அதிக அளவு பேர் விரும்பி விண்ணப்பித்துள்ளனர். இது நாட்டிற்கு நன்மைகளை உண்டாக்கும். கார்கில் போரின் பிறகு ராணுவத்தில் பல குழுக்கள் உருவாக்கப்பட்டது, அதுபோல் தான் அக்னிபாத் திட்டமும்" என்றார்.

சேலம் எட்டுவழிச் சாலை: பின்னர், சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, "பணிகள் நடக்கிறது. நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது, ஆனால் நிலம் தேவைப்படுகிறது. மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். நிலம் கொடுக்கவில்லை என்றால், சாலை அமைக்க முடியாது. 90 சதவிகிதம் நிலம் கையகப்படுத்தப்பட்டால் மட்டுமே சாலை அமைக்கும் திட்டத்தை தொடங்க முடியும். மக்களுக்கு பிரச்சனை என்றால் திட்டத்தை செயல்படுத்த முடியாது" எனக் கூறினார். பின்னர் வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் அமைச்சர் சிங் சாமி தரிசனம் செய்தார்.

இதையும் படிங்க: எட்டு வழிச்சாலை திட்டம் ஏற்படுத்தப்போகும் பாதகங்கள் என்ன?

Last Updated : Jul 12, 2022, 11:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.