ETV Bharat / state

கல்குவாரி குட்டையில் தவறி விழுந்த மாற்றுத்திறனாளி: 30 மணி நேரத்திற்குப் பின் சடலம் மீட்பு !

author img

By

Published : Sep 9, 2020, 10:13 AM IST

திருப்பத்தூர்: வாணியம்பாடியில் கல்குவாரி குட்டையில் தவறி விழுந்து தந்தை கண்முன்னே மூழ்கி உயிரிழந்த மாற்றுத்திறனாளியின் சடலத்தை 30 மணி நேரமாகப் போராடி மீட்டனர்.

கல்குவாரி குட்டையில் தவறி விழுந்த மாற்றுத்திறனாளி: சடலத்தை 30 மணி நேரத்திற்குப் பிறகு மீட்பு!
Physically challenged person fell down into pond

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியடுத்த பாரத் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் தெருத்தெருவாகச் சென்று பட்டாணி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் மாற்றுத்திறனாளியான தமிழ்ச்செல்வன், இவருக்கு ஒரு கால் இழந்து செயற்கைக் கால் பொருத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த வாரம் இவரது பாட்டி இறந்து விடவே, நேற்று ஆலங்காயம் சாலையில் உள்ள ஊசி தோப்புப் பகுதியில் கல்குவாரி அருகே திதி கொடுப்பதற்காக சென்றுள்ளனர். அந்த இடத்தில் கல்குவாரி குட்டையில் தேங்கியிருந்த மழை நீரில் குளிப்பதற்காக மாற்றுத்திறனாளி தமிழ்ச்செல்வன் தனது செயற்கை காலினை கரையில் கழற்றி வைத்துவிட்டுத் தண்ணீரில் இறங்கி குளிக்கச்சென்றுள்ளார்.

அப்போது, ஆழமான பகுதியில் சிக்கி தமிழ்ச்செல்வன் சத்தமிடவே அவரது தந்தை அவசர அவசரமாகச் சென்று உதவ முயலும் முன்பே மாற்றுத்திறனாளியான தமிழ்ச்செல்வன் நீரில் மூழ்கியுள்ளார். பதறிப்போன அவரது தந்தை ராஜா உடனடியாக வாணியம்பாடி தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தார்.

இந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் நீரில் மூழ்கிய மாற்றுத்திறனாளி தமிழ்ச்செல்வன் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சடலம் கிடைக்காத நிலையில் இரவு நேரம் நெருங்கி விட்டதால் தேடும் பணியை கைவிட்டு மீண்டும் இன்று வாணியம்பாடி, ஆலங்காயம், ஆம்பூர், நாற்றம்பல்லி, வேலூர் உள்ளிட்ட ஐந்து பகுதிகளில் இருந்து நீச்சல் பயிற்சி பெற்ற தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் சுமார் 50 பேர் இன்று காலை முதல் சடலத்தைத் தேடும் பணியை தீவிரப்படுத்தினர்.

மழை நீர் தேங்கிய கல்குவாரியில் 20 அடி ஆழம் வரை தண்ணீர் இருப்பதாலும் ,சடலம் இடிபாடுகளில் சிக்கி இருப்பதால் தேடும் பணியில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் அரக்கோணம் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழு (NDRF ) 4 ஆவது பட்டாலியன் மகாவீர்சிங் தலைமையில் 14 பேர் கொண்ட குழு வரவழைக்கப்பட்டு, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி தலைமையிலான தீயணைப்புத் துறை, நீச்சல் பயிற்சி வீரர்கள், காவல்துறை, வருவாய்த்துறையினர் உதவியுடன் 30 மணி நேரத்துக்கு பின் போராடி சடலமாக மீட்டனர் .

பின்னர், சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த வாணியம்பாடி கிராமிய காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.