ETV Bharat / state

ஜலகாம்பாறை அருவி வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு

author img

By

Published : Oct 23, 2020, 8:24 PM IST

திருப்பத்தூர்: ஜலகாம்பாறை அருவியில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் திட்டங்கள் அமல்படுத்தப்படும் என மாநிலத் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபில் தெரிவித்தார்.

நிலோபர் கபில் ஆய்வு
நிலோபர் கபில் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்துக்குள்பட்ட பெருமாப்பட்டு ஊராட்சியில் ஏலகிரி மலை தென்திசை அடிவாரத்தில் ஜலகாம்பாறை அருவி அமைந்துள்ளது.

இங்கு பிரசித்திப் பெற்ற முருகன் கோயிலும் உள்ளதால் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து வழிபட்டு அருவியில் குளித்துவிட்டுச் செல்கின்றனர்.

இந்த அருவி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தலமாகும். தற்சமயம் மழைக்காலம் என்பதால் ஜலகாம்பாறை அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

அதனால் அருவியைக் கண்டு குளித்துவிட்டுச் செல்ல சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களிலிருந்துகூட சுற்றுலாப் பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர்.

இந்த அருவியில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மேம்படுத்தும் பணிகளையும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளைக் குறித்து அமைச்சர் நிலோபர் கபில், மாவட்ட ஆட்சியர் சிவனருள், வனத் துறை அலுவலர்கள் உள்பட அரசு அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வுசெய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிலோபர் கபில், "ஏற்கனவே மூன்று ஆண்டுகளுக்கு முன்பே ஆய்வுசெய்தோம். இந்தப் பகுதி வனத் துறை சார்ந்திருப்பதால் அவர்களிடமிருந்து அனுமதிக்காக காத்திருந்தோம்.

தற்போது மாவட்ட வனத் துறை அலுவலரும் மாவட்ட ஆட்சியர்கூட வந்திருக்கிறார்கள். அவர்களுடன் கலந்து ஆலோசித்து போதுமான ஏற்பாடுகள் செய்து தருவோம். ஜலகாம்பாறை அருவி பகுதியில் பெண்களுக்காகத் தனியாக ஒரு அருவி பகுதியை ஒதுக்கி அவர்கள் பாதுகாப்பாக குளிக்க ஏற்பாடு செய்வோம்.

ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி
ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி
பல்வேறு அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் திருப்பத்தூர் மாவட்டம் பெரிய சுற்றுலாத் தலமாக இந்த அருவி அமையும்" என்று கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.