ETV Bharat / state

இடிந்து விழும் நிலையில் பாலம்; மரண பீதியில் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வரும் உப்பள தொழிலாளர்கள்

author img

By

Published : Jun 13, 2023, 8:10 PM IST

இடிந்து விழும் சூழ்நிலையில் இருக்கும் மச்சாது பாலத்தை போர்கால அடிப்படையில் உடனடியாக சீரமைத்து தருமாரு உப்பள தொழிலாளர்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இடிந்து விழும் நிலையில் பழைமையான மச்சாது பாலம்
இடிந்து விழும் நிலையில் பழைமையான மச்சாது பாலம்

இடிந்து விழும் நிலையில் பழைமையான மச்சாது பாலம்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள மச்சாது பாலமானது 80 வருடங்களுக்கு மேலாக உள்ள மிகவும் தொன்மையான பாலமாகும். அங்கே அருகில் உள்ள உப்பள தொழிலாளர்கள் உப்பு ஏற்றுமதி செய்து கனரக வாகனங்களில் பல்வேறு மாவட்டங்களுக்கு எடுத்து செல்ல இந்த வழியை பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த பாலம் மிகவும் சிதலமடைந்து, கடற்காற்றால் துருப்பிடித்து, மிகவும் மோசமான சூழ்நிலையில் உள்ளது. இதற்கு சம்பந்தமான அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

இந்நிலையில் இத்தொழிலாளர்கள் தற்போது இருக்கும் எரிபொருள் நிலையையும் பொருட்படுத்தாமல் 4, 5 கிலோ மீட்டர் தூரம் மேற்பகுதியில் உள்ள கடற்கரை சாலை வழியாக சுற்றி வருகின்ற அவல நிலை ஏற்படுகின்றது. ஆகவே விபத்துகளை தடுத்து இந்த பாலத்தை போர்கால அடிப்படையில் உடனடியாக சரி செய்ய வேண்டும் என தொழிலாளர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

தூத்துக்குடி, கோரம்பள்ளத்தில் இருந்து வரும் உபரி நீரானது தூத்துக்குடி மாநகரில் இருந்து சத்யா நகர், லயன்ஸ் டவுன் வழியாக, கடற்கரை சாலையில் உள்ள ரோச் பூங்கா அருகே உள்ள மேம்பாலம் வழியாக கடலில் கலக்கிறது. இந்த லயன்ஸ் டவுன் வழியாக உபரிநீர் வருகின்ற காரணத்தினால் அந்த வழியாக உப்பள தொழில் செய்யும் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு கடந்த 80 வருடங்களுக்கு முன்பு பிரிட்டிஷார் ஆட்சி காலத்தில் மச்சாது பர்னாந்து என்ற தனி நபர் மேம்பாலம் ஒன்றை கட்டினார். இதனால் இந்த பாலத்திற்கு மச்சாது பாலம் என்று பெயர் பெற்றது.

உப்பள தொழிலாளர்கள் அந்த வழியை பயன்படுத்தி வந்த நிலையில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இந்த பாலம் மிகவும் சிதலமடைந்து, கடற்காற்றால் துருப்பிடித்துள்ளது. இந்த பாலத்தின் அடிப்பகுதியில் அமைந்துள்ள இரும்பு தூண்கள் மிகப் பழமையானதால் பாதிக்கு மேல் முறிந்து விழுந்துள்ளன. மேலும், பாலத்தில் நடுவே மிக பெரிய ஓட்டை உள்ளதால் இந்த வழியாக செல்பவர்கள் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர். இரவு மின்விளக்கு இல்லாததால் அந்த வழியே நடந்து செல்லும் தொழிலாளர்கள் அதில் விழும் சூழல் உள்ளது.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த உப்பள தொழிலாளி எட்வின் ஜெயராஜ் கூறுகையில், “இந்த மச்சாது பாலம் எட்டு வருடங்களுக்கு மேலாக பழுதடைந்து உள்ளது. இந்த வழியாக கடந்து செல்லும் போது எப்போது உடைந்து விழும் என்று தெரியவில்லை. மின் விளக்கு இல்லாமல் இருட்டடைந்து உள்ளது. உப்பள தொழிலாளர்கள் இந்த பாதையை பயன்படுத்தி வருகின்றனர். ஆகவே, அரசு இந்த பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும்”, என்றார்.

மேலும் இது குறித்து அப்பகுதியை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சகாயம் கூறுகையில், “ பாத்திமா நகர்-லயன்ஸ்டவுன், காந்தி நகருக்கு இடைப்பட்ட சாலையில் அமைந்துள்ள மச்சாது பாலம் மிகவும் தொன்மையான பாலமாகும், இதனை கடந்து சென்றால் தெர்மல் நகர் மற்றும் துறைமுக சாலைக்கு சென்று விடலாம். இந்த பகுதியில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் உப்பு இந்த பாலத்தின் வழியாக தான் பல மாவட்டங்களுக்கு எடுத்து செல்லப்படுகிறது. ஆனால் கடந்த ஏழு, எட்டு வருட காலமாக இந்த பாலம் மிக மோசமான சூழ்நிலையில் உள்ளது.

இந்த பாலத்தில் தூண்கள் மிகவும் பழுதடைந்து, கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும் படி மிக மோசமாக உள்ளது. மேலும், இந்த வழியாக செல்லும் உப்பள தொழில் செய்ய கூடிய பெண்கள் இரவு நேரங்களில் இந்த பாலத்தை கடக்கும் போது மின்விளக்கு இல்லாத காரணத்தினால் விபத்து ஏற்படுகிறது. ஆகவே விபத்துகளை தடுத்து இந்த பாலத்தை போர்கால அடிப்படையில் உடனடியாக சரி செய்ய வேண்டும் ” என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: கேரளாவிற்கு கடத்த முயன்ற 3,900 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள்; தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.