ETV Bharat / state

கோட்சே போல மறை மாவட்ட பங்கு தந்தையர்கள் மாற மாட்டார்கள்: சபாநாயகர் அப்பாவு

author img

By

Published : Jun 11, 2023, 10:13 AM IST

காந்தியைக் கொன்ற கோட்சேவைப் போல் மறை மாவட்ட பங்கு தந்தையர்கள் ஒருபோதும் மாற மாட்டார்கள் என தமிழ்நாடு சட்டப்பேரவையின் சபாநாயகர் கூறியுள்ளார்.

கோட்சே போன்ற ‘இவர்கள்’ கோட்சேவை உருவாக்க மாட்டார்கள் - சபாநாயகர் அப்பாவு
கோட்சே போன்ற ‘இவர்கள்’ கோட்சேவை உருவாக்க மாட்டார்கள் - சபாநாயகர் அப்பாவு

சபாநாயகர் அப்பாவு மேடைப்பேச்சு

தூத்துக்குடி: கத்தோலிக்க மறைமாவட்டம் கடந்த 1923ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி தொடங்கப்பட்டது. தூத்துக்குடி மறை மாவட்டத்தின் கீழ் 118 பங்குகள், 4.75 லட்சம் இறை மக்கள் உள்ளனர். மேலும், மறை மாவட்டத்தின் கீழ் பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை மற்றும் சமூக மேம்பாட்டு பணி ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இத்தகைய சிறப்பு வாய்ந்த தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்டம் தொடங்கப்பட்டதன் நூற்றாண்டு விழா, நேற்று (ஜூன் 10) தூத்துக்குடி வஉசி ரோட்டில் உள்ள சின்னகோவில் வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமை தாங்கினார்.

இதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய அப்பாவு, “இந்தியாவில் பல மாநிலங்களில் என்ன நிலை இருக்கிறது? ஆனால், தமிழ்நாட்டில்தான் அனைத்து சமூகத்தினரும் ஒன்றாக வாழ்கின்ற, அமைதியாக வாழ்கின்ற சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது. நாமெல்லாம் ஒன்றாக பாதுகாப்புடன் வாழ்கிறோம் என்று சொன்னால், இந்த ஆட்சி (திமுக) மிக மிக முக்கியக் காரணம்.

ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் இங்கு இருந்துதான் தொடங்கப்பட்டது. ஆட்சியரிடம் மனு அளிக்கச் சென்றபோது காக்கை குருவியை சுட்டதுபோல் சுட்டு வீழ்த்தினார்கள். எந்த தவறும் செய்யாதவர்களை, போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறைச்சாலை சென்றார்கள்.

கூடங்குளம் அணு உலையில் பல நூறு நாட்கள் போராட்டம் நடைபெற்றது. ஆனால், எந்த அரசு சொத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்தவில்லை. இருப்பினும், அவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கால் யாரும் வெளிநாட்டுக்கோ, அரசுப் பணிக்கோ செல்ல முடியாத நிலையை உருவாக்கினார்கள்.

இந்த இரண்டு சம்பவத்திலும் பாதிக்கப்பட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் சொன்னார். சொன்னபடியே ஆட்சி பொறுப்பை ஏற்ற அடுத்த நிமிடமே, இரண்டு போராட்டத்திலும் கலந்து கொண்டவர்கள் மீது உள்ள வழக்குகளை ரத்து செய்த பெருமை தமிழ்நாடு முதலமைச்சருக்கு உண்டு.

மேலும், வேதனையுடன் சொல்லக் கூடிய விஷயம் என்னவென்றால், இரண்டு போராட்டங்களிலும் வெளிநாட்டில் இருந்து நிதியைப் பெற்று கலவரம் செய்ததாக தமிழ்நாடு ஆளுநர் வெளிப்படையாக சொல்கின்றார். அவருக்கு ஒன்றைச் சொல்கிறேன். உயர் நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் கூறியது என்னவென்றால், வெளிநாட்டு சதியும் இல்லை, வெளிநாட்டு நிதியும் இல்லை என மத்திய அரசினுடைய சிபிஐ அதிகாரிகள் நீதிமன்றத்தில் கூறியிருக்கின்றனர்.

ஆனால், வாய்க்கு வந்தபடி ஆளுநர் கூறியது வேதனையாக இருக்கின்றது. எவ்வளவு துன்பம் வந்தாலும், காந்தியைக் கொன்ற கோட்சேபோல் மறை மாவட்ட பங்கு தந்தையர்கள் ஒருபோதும் மாற மாட்டார்கள். மாறாக, ஏசு கிறிஸ்து போன்று சமூகத்திற்கு தொண்டாற்றுகின்றவர்கள்தான் இவர்களே தவிர, எந்த துயரத்திற்கும் அஞ்சவும் மாட்டார்கள்.

மேலும், ஒரு கோட்சேவைக் கூட உருவாக்க மாட்டார்கள். மாறாக காந்தியைப் போன்று கோடிக்கணக்கான மனிதர்களை அகிம்சை, அன்பு வழியில் உருவாக்கிக் கொண்டிருப்பவர்கள்தான் அருட்தந்தையர்கள், கன்னியாஸ்திரிகள் என மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். சமாதானம் பேச பள்ளி, கல்லூரியை நடத்தவில்லை. சமாதானம் செய்யவே நடத்தி வருகிறார்கள்.

ரேஷன் அரிசி கிலோ ஒரு ரூபாய் என கருணாநிதி அறிவித்தார். இயேசு வழியில் உணவற்றவர்களுக்கு உணவு பெறுவதற்காக இந்த திட்டத்தை அறிவித்ததாக அப்போது கருணாநிதி கூறினார். கிறிஸ்தவ பாதிரியார், கிறிஸ்தவ அருட்சகோதரி மதம் மாறுங்கள் என ஒருபோதும் சொல்ல மாட்டார்.

பாஜகவினர் மைக்கேல்பட்டியில் மதமாற்றம் நடைபெற்று வருவதாக கூறிய நிலையில், மைக்கேல்பட்டியில் மதமாற்றம் செய்யப்படவில்லை. கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இதுபோன்ற செயலை ஒருபோதும் செய்வதில்லை என உச்ச நீதிமன்றத்தில் நிரூபித்தது, இந்த அரசு என்பது பெருமைக்குரியது. ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கூட மதம் மாறுங்கள் என சொல்வதும் இல்லை, ஆதாயத்திற்காக இதுபோன்ற செயல்களையும் ஒருபோதும் செய்வதில்லை” என கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, திமுக துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: பாலியல் புகார் பாதிரியார் மீது மேலும் ஒரு இளம்பெண் புகார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.