ETV Bharat / state

தூத்துக்குடியில் 2 ஏடிஎஸ்பிக்கள் மேற்பார்வையில் 800 போலீசார் பாதுகாப்பு - எஸ்பி பாலாஜி சரவணன் அறிவிப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 11, 2023, 1:13 PM IST

Thoothukudi SP Balaji Saravanan: தீபாவளியை முன்னிட்டு தூத்துக்குடியில் 2 ஏடிஎஸ்பிக்கள் மேற்பார்வையில் 800 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர் என எஸ்பி பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

sp balaji saravanan has said 800 policemen will be engaged in security duty in thoothukudi for diwali festival
எஸ்பி பாலாஜி சரவணன்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் நாளை (நவ. 12) கொண்டாடப்படவுள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பாதுகாப்பையும் நலனையும் கருத்தில் கொண்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி தூத்துக்குடியில் இரண்டு ஏடிஎஸ்பிக்கள் மேற்பார்வையில் 800 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக எஸ்.பி பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தீபாவளி கொண்டாட்டத்தின் போது உயர்நீதிமன்ற உத்தரவின்படி சுற்றுச்சூழலுக்கு கேடு இல்லாத பசுமை பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

பட்டாசு வெடிக்கும் போது குழந்தைகள், பெற்றோர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும். குழந்தைகளைத் தனியாகப் பட்டாசு வெடிக்க விடாமல், பெற்றோர்கள் அருகில் இருந்து கொண்டுதான் வெடிக்கவைக்க வேண்டும். பக்கத்தில் தண்ணீர் நிரம்பிய வாளி மற்றும் மணல் வாளிகளை வைத்திருக்க வேண்டும்.

திறந்த வெளியில் தான் பட்டாசு வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது காலணிகள் அணிந்திருக்க வேண்டும். பாலிஸ்டர் ஆடைகளை அணிந்து பட்டாசு வெடிக்கக் கூடாது. ஏனெனில், அவை எளிதில் தீப்பற்றும் தன்மைகொண்டவை. பாட்டில்களில் வைத்து ராக்கெட் விடுவது, பட்டாசைப் பற்றவைத்து கையால் தூக்கிப்போடுவது போன்றவை மிகப்பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும்.

பொதுமக்கள் அதிகம் உள்ள இடங்கள், கூரை வீடுகள் உள்ள இடங்கள், பட்டாசு விற்பனை கடைகள், மருத்துவமனைகள், பெட்ரோல் பங்குகள் போன்ற இடங்கள் அல்லது அதற்கு மிக அருகாமையில் பட்டாசுகள் வெடிப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். தீபாவளி பண்டிகையின்போது வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் செல்லும் பொதுமக்கள் அவரவர் பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் தகவல் தெரிவித்துவிட்டுச் சென்றால், அந்தப்பகுதிக்குக் காவலர் அதிக அளவில் ரோந்து சென்று கவனிப்பார்கள்.

மேலும், பொது இடங்களில் மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பவர்கள், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள், இரு சக்கர வாகன பந்தயம் வைப்பது (Bike Race), பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பி அதிக வேகத்தில் செல்வது, போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுமட்டும் அல்லாது, பொதுமக்கள் பாதுகாப்பையும் நலனையும் கருத்தில் கொண்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் இரண்டு ஏடிஎஸ்பிக்கள் மேற்பார்வையில் 800 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இணையத்தை தெறிக்கவிடும் தீபாவளி போனஸ் மீம்ஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.