ETV Bharat / state

பனிமய மாதா ஆலய திருவிழாவில் கட்டுப்பாடு: கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் தகவல்

author img

By

Published : Jul 23, 2020, 9:50 PM IST

தூத்துக்குடி: உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழாவில் இந்தாண்டு பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை என கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

பனிமய மாதா ஆலய திருவிழாவில் கட்டுப்பாடு குறித்து ஆயர் பேட்டி
பனிமய மாதா ஆலய திருவிழாவில் கட்டுப்பாடு குறித்து ஆயர் பேட்டி

தூத்துக்குடி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற பனிமய மாதா ஆலய திருவிழா ஜூலை கடைசி வாரத்தில் தொடங்கி 10 நாள்கள் வெகு விமரிசையாக நடைபெறும்.

இந்தத் திருவிழாவிற்கு வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வருவதுண்டு. லட்சக்கணக்கான பேர் திரளும் திருவிழாவானது கரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் இன்றி நடைபெறும் என பனிமயமாதா ஆலய நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு இன்று(ஜூலை 23) பனிமயமாதா ஆலய நிர்வாக அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மறைமாவட்ட கத்தோலிக்க ஆயர் ஸ்டீபன் ஆண்டகை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார், பனிமயமாதா ஆலய பங்கு தந்தை குமார் ராஜா ஆகியோர் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

பனிமய மாதா ஆலய திருவிழாவில் கட்டுப்பாடு குறித்து ஆயர் பேட்டி
அப்போது கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை தெரிவிக்கையில், "தூத்துக்குடி பனிமயமாதா மக்களின் குலதெய்வம் என்று சொன்னால் அது மிகையாகாது.
ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும், இந்த ஆலய திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் உலகமெங்கிலும் இருந்து வருவார்கள்.
438 ஆண்டுகளாக தடையில்லாமல் தொடர்ந்து நடைபெற்று வந்த பனிமயமாதா ஆலய திருவிழாவானது தற்போதிருக்கும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு பக்தர்களின் அனுமதியின்றி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அரசின் அறிவுரைப்படியும் அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் ஆலய நிர்வாகம் சார்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பனிமய மாதா ஆலய திருவிழா வருகிற 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது.
இதில் ஆலய கொடியேற்றம் தொடங்கி அதைத்தொடர்ந்து நடைபெறும் நற்கருணை ஆசீர்வாதங்கள், பிரார்த்தனைகள் உள்ளிட்டவை அனைத்தும் இணையதளம், யூடியூப் சேனல்கள் வழியாக நேரடி ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே இறை மக்களும், பங்கு மக்களும், பொதுமக்களும் திருவிழா காலத்தில் ஆலயத்தில் கூடுவதை தவிர்த்து அவரவர் வீட்டில் இருந்தபடியே பிரார்த்தனை செய்து ஒத்துழைப்பு வழங்க கேட்டுக்கொள்கிறோம்.

26ஆம் தேதி நடைபெறும் கொடியேற்ற நிகழ்ச்சியில் மட்டும் ஐந்து பேர் முன்னிலையில் கொடிஏற்று நிகழ்ச்சியானது நடைபெறும். அதைத் தொடர்ந்து நடைபெறும் ஒவ்வொரு நாள் திருவிழாவும் ஆலய வளாகத்திற்குள்ளாகவே நடைபெறும்.

இதற்கு பக்தர்கள் எந்த காரணம் கொண்டும் அனுமதிக்கப்படுவதில்லை. எனவே இறைமக்கள் அனைவரும் தங்களது வீடுகளிலேயே இருந்து பனிமயமாதா அன்னையை ஜெபித்து தற்போது உள்ள இந்த கரோனா அச்சுறுத்தலை முழுமையாக அகற்றுவதற்கு வேண்டிக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: குன்றத்திலும் ஏறும் கரோனா: ஆளில்லாமல் ஆடிப்பூர திருவிழா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.