ETV Bharat / state

திருச்செந்தூரில் கடத்தப்பட்ட ஒன்றரை வயது குழந்தை மீட்பு.. ஆனந்தக் கண்ணீரில் பெற்றோர்..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 11, 2023, 7:20 PM IST

Tiruchendur child kidnap case: திருச்செந்தூர் கோயிலில் கடத்தப்பட்ட ஒன்றரை வயது குழந்தையை மீட்ட காவல் துறையினருக்குக் கண்ணீர் மல்க பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.

Kidnapped child in Tiruchendur rescued by police and handed over to parents
திருச்செந்தூரில் கடத்தப்பட்ட ஒன்றரை வயது குழந்தை மீட்பு

திருச்செந்தூரில் கடத்தப்பட்ட குழந்தை பெற்றோரிடம் ஒப்படைப்பு

தூத்துக்குடி: கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் அருகே மணவாளபுரம் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர்கள் முத்துராஜ் - ராஜேஸ்வரி தம்பதி. இவர்கள் கடந்த அக்.5-ஆம் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தங்களது ஒன்றரை வயது மகனுடன் சாமி தரிசனம் செய்யச் சென்றனர். அப்போது அங்கு வைத்து அவர்களது ஒன்றரை வயது குழந்தை காணாமல் போனது. பின்னர், இது குறித்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் காவல் துறையினர் அங்கிருந்த கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அப்போது, ஒரு பெண் அந்த குழந்தையைக் கடத்திச் சென்றது தெரியவந்தது. பின்னர், திருச்செந்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் வசந்தராஜ் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைத்து குழந்தையைத் தீவிரமாகத் தேடி வந்தனர். பின்னர், அந்த பெண் சேலத்தில் இருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின்படி, காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று அப்பெண்ணையும் அவரது கணவரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அப்பெண் திலகவதி மற்றும் கணவர் பாண்டியன் ஆகியோர் சேர்ந்து குழந்தை கடத்தியது தெரியவந்தது.

தொடர்ந்து விசாரணைக்காக இருவரையும் காவல் துறையினர், காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அங்கு விசாரணையின்போது கழிவறைக்குச் சென்ற திலகவதி அங்கு மயங்கிவிழுந்து உயிரிழந்தார். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து அவரது கணவர் பாண்டியனிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், திருச்செந்தூரில் கடத்தப்பட்ட ஒன்றரை வயது குழந்தையை, சேலம் மாவட்ட காவல் துறையினர் மீட்டெடுத்து நேற்று (அக்.10) மாலை திருச்செந்தூருக்கு கொண்டு வந்தனர். அப்போது, அங்கிருந்த குழந்தையின் பெற்றோர், குழந்தையைக் கண்ட உடன் கண்ணீர் மல்க ஆரத்தழுவிக் கட்டியணைத்துக்கொண்டு, ‘என் தங்க மகனே, செல்ல மகனே’ எனக் கதறி அழுதனர்.

இது குறித்து குழந்தையின் தாயார் ரதி கூறுகையில், “காவல்துறையினர் இல்லை என்றால் இன்று என்னுடைய குழந்தை கிடைத்திருக்க வாய்ப்பே இல்லை. காவல்துறையினர் 100 கடவுளுக்குச் சமம்” என கண்ணீர் மல்க கூறினார். தந்தை முத்துராஜ் கூறும்போது, “யாரை நம்பியும் குழந்தையை விடாதீர்கள். நாங்கள் மிகவும் சிரமப்பட்டு விட்டோம். குழந்தை இல்லாமல் மிகவும் தவித்து வந்தோம். இன்று எங்கள் குழந்தை கையில் கிடைத்ததால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: திருச்செந்தூர் கோயிலில் குழந்தை கடத்திய விவகாரம்; கைது செய்யப்பட்ட பெண் உயிரிழப்பு - நீதிபதி நேரில் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.