ETV Bharat / state

ஸ்டெர்லைட் ஆலை திறக்க எதிர்ப்பு - கருத்துக்கேட்பு கூட்டத்தால் பரபரப்பான ஆட்சியர் வளாகம்

author img

By

Published : Apr 23, 2021, 11:34 AM IST

Updated : Apr 23, 2021, 11:48 AM IST

தூத்துக்குடி: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது.

sterlite
ஸ்டெர்லைட் ஆலை

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஏப்ரல்.23) காலை 8 மணிக்கு ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி வழங்கலாமா என்பது தொடர்பாக பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தலைமையில் நடைபெற்றது.

இதையொட்டி, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் சுமார் 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் ஆட்சியர் வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மற்றும் ஆதரவு என மொத்தம் 40 பேர் கலந்துகொண்டனர்

கருத்துக்கேட்பு கூட்டத்தில் கூடுதலாக மக்களை அனுமதிக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், மதிமுகவினர், ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், பொதுமக்களையும் கருத்துக்கேட்பு கூட்டத்துக்கு அனுமதிக்கலாம் எனத் தகவல் வந்ததையடுத்து, அமைப்புக்கு தலா 3 பேரை உள்ளே காவல் துறையினர் அனுமதித்தனர்.

கருத்துக்கேட்பு கூட்டத்தில் சலசலப்பு

கூட்டம் தொடங்கியதும் செய்தியாளர்களை வெளியே செல்லுமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டார். இதற்கு சமூக அமைப்பினர், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டவர்கள் அரங்கிலிருந்து வெளியேற்றப்பட்டு அதன் பின்பாக கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், நிச்சயமாக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதிக்காது. இன்று காலை 11 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில் அஃபிடவிட் தாக்கல் செய்ய வேண்டியுள்ளதால், இந்தக் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறுகிறது என்றார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள ஆக்ஸிஜன் பற்றாக்குறையை தீர்க்க ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பதற்கு அனுமதி வழங்கலாமா? என்று மக்களிடம் கேட்டார். இதற்கு, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டாம் என்று பெரும்பாலானவர்கள் தெரிவித்து கூச்சலிட்டனர்.

மேலும், ஸ்டெர்லைட் நிர்வாகம் ஆக்சிஜன் தயாரிப்பதாக கூறி மத்திய அரசுடன் இணைந்து மீண்டும் ஆலையை திறப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது என ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள்,சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டினர்.

ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு மக்கள் எதிர்ப்பு

இதனால் எதிர்ப்பாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே மாவட்ட ஆட்சியரின் முன்னிலையில் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் எல்லை மீறி வாக்குவாதம் கைகலப்பாக மாறும் சூழல் ஏற்பட்டது. அப்போது குறுக்கிட்ட மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், ஆக்சிஜன் தயாரிக்கும் பணியை அரசே ஏற்று நடத்தலாமா என கேட்டதற்கும் கூட்டத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து கூட்டம் இத்துடன் நிறைவு பெறுவதாக அறிவித்து அரங்கை விட்டு வெளியேறினார்.

கூட்டத்தை நிறைவு செய்து வந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியே பரபரப்பாகக் காணப்பட்டது.

இதையும் படிங்க: அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற இளைஞர்களிடையே மோதல்!

Last Updated : Apr 23, 2021, 11:48 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.