ETV Bharat / state

ஆழ்வார்திருநகரி கோயிலில் திருமலை நாயக்கரின் செப்புத் தகடுகள் கண்டெடுப்பு!

author img

By

Published : Apr 22, 2023, 10:44 PM IST

தூத்துக்குடி அருகே ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் பராமரிக்கப்பட்டு வந்த சுருணைஏடுகள் மற்றும் நம்மாழ்வாரின் திருவாய்மொழி சுவடிகளுடன் திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்தவைகள் உட்பட நான்கு செப்புப் பட்டயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

Etv Bharat
Etv Bharat

தூத்துக்குடி: திருக்கோயில் ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நூலாக்கத் திட்டத்தின் பணிக்குழுவினர் தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் சுவடிப் பராமரிப்புப் பணியை மேற்கொண்டனர். அப்போது சுருணைஏடுகள் மற்றும் நம்மாழ்வாரின் திருவாய்மொழி சுவடிகளுடன் இந்தக் கோயிலில் பாதுகாக்கப்பட்டு வரும் நான்கு செப்புப் பட்டயங்களையும் அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

தூத்துக்குடி அருகே ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் பராமரிக்கப்பட்டு வந்த சுருணைஏடுகள் மற்றும் நம்மாழ்வாரின் திருவாய்மொழி சுவடிகளுடன் (Tirumala Nayaka) திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்தவகள் உட்பட நான்கு செப்புப் பட்டயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இதுகுறித்து செப்புப் பட்டயங்களை படித்து ஆய்வு செய்த சுவடியியல் அறிஞர் தாமரைப்பாண்டியன் கூறியதாவது; செப்புப் பட்டயங்கள் கி.பி. 17 மற்றும் 19 ஆம் நூற்றாண்டு பட்டயங்கள் ஆகும். இதில் முதல் இரண்டு பட்டயங்கள் மதுரை திருமலை நாயக்கர் காலத்திலும், மற்ற இரண்டு பட்டயங்கள் கோயில் நிர்வாகி மற்றும் முக்கியஸ்தரால் இக்கோயிலுக்கு வழங்கப்பட்டவையும் ஆகும்.

முதல் பட்டயம் 'கி.பி.1637 ஆம் ஆண்டைச் சேர்ந்தது. இது திருமலை நாயக்கர், வடமலையப்பப் பிள்ளை ஆகியோருக்குப் புண்ணியமாக காந்தீசுவரம் இறைவன் ஏகாந்தலிங்கத்துக்கு சிறு காலை சந்திப்பூசையில் அபிசேகமும் நெய்வேத்தியம் செய்யப்பட்ட வழிபாட்டுச் செலவுக்காக இராமப்பய்யனின் ஆணையின்படி, திருவழுதி வளநாட்டைச் சேர்ந்த முனைஞ்சி என்ற மகாராணியின் காணியாளர்களான நாட்டவர்கள் அதே நாட்டைச் சேர்ந்த திருமலைபுரம் என்ற ஊரின் வருவாயினைக் கொடுப்பதாக ஒப்புக்கொண்டு எழுதிக் கொடுத்தது ஆகும்' என்றார். 1944-ல் வெளியிடப்பட்ட "திருமலை நாயக்கர் செப்பேடுகள்" என்ற நூலில் இது பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது பட்டயத்தில் 'கி.பி.1671-இல் காந்தீசுவரம் சுவாமி ஏகாந்தலிங்கத்துக்கு பிரதிநாமமாகவும், மகாஜனங்கள், திருமலை நாயக்கர், வடமலையப்பப் பிள்ளை ஆகியோருக்குப் புண்ணியமாகவும் விளங்க தர்மதானப் பிரமாணம் வழங்க வல்லநாட்டு நாட்டவருக்கு வடமலையப்ப பிள்ளை கட்டளையிட்டமையால் அவர்கள் கோயிலுக்கு வழங்கிய நிலதானம் மற்றும் அதன் எல்லைப் பற்றி' கூறப்பட்டுள்ளது.

இந்த இரு பட்டயங்களிலும் 'வழங்கப்பட்ட தானத்தை கெடுக்க நினைப்பவர்கள் நதிக்கரையில் காராம் பசுவை கொன்ற பாவத்திற்கு ஆளாவார்கள்' என இறுதியில் குறிப்பிடப்படுகிறது. இவற்றை சிதம்பரநாதன், தன்மகுட்டி முதலியார் ஆகியோர் எழுதியுள்ளனர்.

சுவடியியல் அறிஞர் தாமரைப்பாண்டியன்
சுவடியியல் அறிஞர் தாமரைப்பாண்டியன்

மூன்றாவது பட்டயம் 'கி.பி.1866 ஜனவரி 23ஆம் தேதி எழுதப்பட்டுள்ளது. அதில், 'இந்தக் கோயில் தர்மகர்த்தா ஆழ்வார்திருநகர் கோகில சங்கரமூர்த்தி முதலியாரின் மகள்கள் அங்கரத்தையம்மை, ஆவுடையம்மை ஆகிய இருவரும் அவர்களின் சந்ததியினரும் கோயிலில் நடைபெறும் தைப்பூச உற்சவத்தின் நாலாந் திருநாள் மண்டகப்படியை தொடர்ந்து வழங்கி நடத்திட வழிவகை செய்யப்பட்டதையும், அந்தக் குடும்பத்தார் ஏகாந்தலிங்க சுவாமிக்கு வெள்ளித் தகடு பதித்த ரிஷப வாகனம் செய்து கொடுத்ததையும், ரிஷப வாகனம் பாதுகாப்பு அறையின் திறவுகோல் ஒன்று ஆவுடையம்மையின் வளர்ப்பு மகன் தானப்ப முதலியாரென்ற சங்கரமூர்த்தி முதலியாரின் வசம் இருந்தது' பற்றியும் கூறப்பட்டுள்ளது. அந்தப் பட்டயம் 2 படிகள் உருவாக்கப்பட்டதையும், இதை நயினான் ஆசாரி மகன் சுவந்தாதி ஆசாரி எழுதியதையும் தெரிவிக்கிறது.

நான்காவது பட்டயம் 'கி.பி.1868 பிப்ரவரி 3ஆம் தேதி எழுதப்பட்டுள்ளது. அதில், 'காந்தீசுவரம் ஏகாந்தலிங்க சுவாமி கோயிலின் விசாரணை கர்த்தாக்களும், ஊர் மக்களும் ஆழ்வார் திருநகரிலிருக்கும் பிச்சன் செட்டியார் குமாரர் நல்லகண்ணு செட்டியார், சர்க்கரை சுடலைமுத்து செட்டியார் குமாரர் ஆழ்வாரய்யன் செட்டியார் ஆகிய இருவரின் பரம்பரையினர் ஏழாம் திருநாள் முதற்கால மண்டகப்படியை வழங்கி நடத்தவும் பட்டு கட்டும் மரியாதை பெற்றுக் கொள்ளவும் அனுமதியளிக்கப்பட்டது' குறித்து கூறுகிறது.

மேலும், மேற்படி குடும்பத்தார் சபாநாயகர் (இறைவன்) எழுந்தருள சப்பரம் செய்து கொடுத்தது பற்றியும் சப்பரம் நிறுத்தி வைக்கப்பட்ட அறையின் இரண்டு சாவிகள் மேற்படி குடும்பத்தார் வசம் இருந்தது பற்றியும் செப்புப்பட்டயம் குறிப்பிடுகிறது. அதை அச்சு பத்திரமாக எழுதியவர் ஆதிநாதரையர் குமாரர் சுப்பையர் என தாமரைப்பாண்டியன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னையில் வீட்டுத் தோட்டத்தில் மறைத்து வைத்திருந்த 55 பழங்கால சிலைகள்.. சிக்கியது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.