ETV Bharat / state

சென்னையில் வீட்டுத் தோட்டத்தில் மறைத்து வைத்திருந்த 55 பழங்கால சிலைகள்.. சிக்கியது எப்படி?

author img

By

Published : Apr 22, 2023, 6:25 PM IST

அமெரிக்காவில் பணிபுரியும் பெண் மென் பொறியாளர் அருங்காட்சியகம் அமைப்பதற்கும் வெளிநாடுகளில் விற்பதற்கும் உரிய ஆவணங்கள் இன்றி மொத்தம் 72 சிலைகள் வாங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

சிலைகள் மீட்பு தொடர்பாக டிஜிபி சைலேந்திர பாபு பேட்டி

சென்னை: ராஜா அண்ணாமலைபுரத்தில் ஒரு பெண் வீட்டில் தொன்மையான சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கடந்த பிப்ரவரி மாதம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் நேரில் சென்று சோதனையில் ஈடுபட்ட போது, வீட்டில் பதுக்கி வைத்திருந்த 17 பழமைவாய்ந்த சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டனர்.

இதனையடுத்து மீண்டும் அதே பெண் வீட்டின் தோட்டத்தில் பழங்கால சிலைகள் மறைத்து வைத்திருப்பதாக தகவல் தெரியவந்ததையடுத்து, அதிர்ச்சியடைந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீண்டும் பெண் வீட்டில் வெள்ளிக்கிழமை(ஏப்ரல் 21) சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது வீட்டின் தோட்டத்தில் மண்ணில் புதைக்கப்பட்டு இருந்த 55 பழங்கால தொன்மையான சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

சிலைகள் பதுக்கி வைத்திருந்த வீட்டின் உரிமையாளர்களான ஷோபா மற்றும் அவரது கணவர் அமெரிக்காவில் உள்ள ஐடி நிறுவனத்தில் மென் பொறியாளர்களாக பணிபுரிந்து வருவது விசாரணையில் தெரியவந்தது. இதில் வீட்டில் அருங்காட்சியகம் வைப்பதற்கும், வெளிநாட்டில் விற்பனை செய்வதற்கும் மென் பொறியாளர் ஷோபா பல்வேறு இடங்களில் உரிய ஆவணங்களின்றி சிலைகள் வாங்கி இருப்பதும் தெரியவந்தது.

குறிப்பாக 76 சென்டிமீட்டர் நீளம் கொண்ட இந்திராணி சிலை, 76 சென்டிமீட்டர் நீளம் கொண்ட வாராஹி அம்மன் சிலை, 97 மீட்டர் வீரம் கொண்ட வீரபத்திரர் சிலை, 89 சென்டிமீட்டர் நீளம் கொண்ட தட்சிணாமூர்த்தி சிலை, 76 சென்டிமீட்டர் நீளம் கொண்ட கிராம தேவதை சிலை, 80 சென்டிமீட்டர் நீளம் கொண்ட சாமுண்டா சிலை, 74 சென்டிமீட்டர் உயரம் கொண்ட அனுமன் கற்சிலை, 24 மீட்டர் நீளம் கொண்ட வைஷ்ணவி கற்சிலை, 66 சென்டிமீட்டர் நீளம் கொண்ட விஷ்ணு கற்சிலை, 60 சென்டிமீட்டர் நீளம் கொண்ட துர்கா சிலை, 65 சென்டிமீட்டர் நீளம் கொண்ட கருடா கற்சிலை, 70 சென்டிமீட்டர் நீளம் கொண்ட விஷ்ணு சிலை, 67 சென்டிமீட்டர் நீளம் கொண்ட கணபதி கற்சிலை, 24 சென்டிமீட்டர் நீளம் கொண்ட பிரம்மா கற்சிலை, நவ கிரக சிலைகள் உட்பட 55 சிலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இவற்றுள் பல சிலைகள் உயிரிழந்த பிரபல சர்வதேச சிலை கடத்தல் மன்னனான மறைந்த தீனதயாளனிடமிருந்து ஷோபா 2010 - 2011 காலகட்டத்தில் வாங்கி இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. சர்வதேச குற்றவாளியான தீனதயாளனிடமிருந்து ஏற்கனவே வாங்கிய பல்வேறு சிலைகள் வெளிநாடுகளுக்கு கொண்டு சென்றதும் தற்போதுள்ள பல சிலைகளை உரிய ஆவணங்கள் இன்றி வெளிநாடுகளுக்கு கடத்த முயற்சித்திருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு செய்தார்.பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழ்நாடு சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு 9 மற்றும் 10 நுற்றாண்டுக்கு முந்தைய பல நூறுகோடி மதிப்புக்கொண்ட 55 சிலைகளை மீட்டுள்ளனர். முக்கியமாக அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து திருடப்பட்ட உலோக அனுமன் சிலை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் இவைகள் அனைத்தும் கோயில்களில் இருந்து திருடப்பட்டவை எனவும் தமிழகம், வட இந்திய கோவில்களில் இருந்து திருடப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தொடர்பாக தமிழகத்தில் 301 வழக்குகள் புலன் விசாரணையில் உள்ளதாகவும், அவற்றுள் 101 வழக்குகள் கண்டுபிடிக்க முடியாத வழக்குகள் உள்ளதாகவும், குறிப்பாக 1983 ஆம் ஆண்டிலிருந்து 576 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் இருந்து மிக சிறப்பான முறையில் சிலைகளை மீட்டு கொண்டு வருகிறோம் என்றார்

மேலும், 1983 ஆம் ஆண்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஆயிரம் சிலைகளில் நூற்றுக்கணக்கான சிலைகளை உரிய கோயில்களில் ஒப்படைத்துள்ளதாகவும், இன்னும் 1,541 பழமையான சிலைகள் கைவசம் உள்ளதாகவும் தெரிவித்தார். அவற்றுள் தற்போது வரை 249 சிலைகள் 3D பரிணாமத்தில் பொதுமக்கள் பார்வைக்காக www.tnidol.com என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 1541 சிலைகளை 3D பரிணாமத்தில் பதிவேற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறோம் எனத் தெரிவித்தார்.

அதோடு கடந்த இரண்டு ஆண்டுகளில்தான் சிறப்பான பழமை வாய்ந்த 307 சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவைகள் உரிய கோவில்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். "வெளிநாடுகளில் இருந்து சிலைகளை மீட்கும் குழு" அமைக்கப்பட்ட பிறகு வெளிநாடு வாழ் இந்தியர்கள் உதவியால் இதுவரை 64 சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை இந்தியா கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாகவும் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். மேலும் 20 ஆண்டுகளுக்கு முன்பு எளிதாக கோயில்களில் இருந்து சிலைகள் திருடப்பட்டு விற்பனை செய்யப்பட்டதாகவும், ஆனால் இனிமேல் கோவில்களில் இருந்து சிலை திருட்டு நிகழாது" என அவர் கூறினார்.

மேலும், தற்போது கைப்பற்றப்பட்டுள்ள 55 சிலைகள் தொடர்பாக சோபாவை கைது செய்வதற்கான முயற்சியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ரூ.3 லட்சத்துக்கு பச்சிளம் சிசு விற்பனை - உண்மையான பெற்றோரை தேடும் போலீஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.