ETV Bharat / state

வரி ஏய்ப்பு செய்ய திட்டம்.. அரசுக்கு சொந்தம் என கணினி உதிரிபாகங்கள் கடத்தல் முயற்சி! தூத்துக்குடி துறைமுகத்தில் சிக்கிய கண்டெய்னர்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 2, 2023, 1:47 PM IST

Tuticorin VOC Port: தூத்துக்குடியில் உரிய வரி கட்டாமல் இறக்குமதியில் ஈடுபட்டதாக, ரூ.50 லட்சம் மதிப்பிலான கணினி உதிரி பாகங்களை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

Tuticorin VOC Port
உரிய வரி கட்டாமல் இறக்குமதி செய்யப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான கணினி உதிரி பாகங்கள் பறிமுதல்

தூத்துக்குடி: வ.உ.சி துறைமுகம் வழியாக நாள்தோறும் பல்வேறு நாடுகளில் இருந்து கப்பல்கள் மூலம் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டும், வெவ்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டும் வருகின்றன. இந்த செயல்பாடுகள் அனைத்தையும் சுங்கத் துறை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் துபாய் நாட்டு ஜெபல்அலி துறைமுகத்தில் இருந்து தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்திற்கு வந்த கண்டெய்னர் ஒன்றில் நாங்குநேரியில் உள்ள சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு கணினிகள் இறக்குமதி செய்யப்பட்டு இருப்பதாகக் கூறப்பட்டது.

இந்த சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து, அந்த கண்டெய்னா் சோதனைக்கு பின்னர் நாங்குநேரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அங்கிருந்து அந்த கண்டெய்னரை மும்பைக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தூத்துக்குடி சுங்கத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்து உள்ளது.

சுங்கத் துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், தூத்துக்குடி சுங்கத்துறை புலனாய்வு பிரிவு உதவி ஆணையர் ராமகிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள் விரைந்து சென்று அந்த கண்டெய்னரை தூத்துக்குடிக்குக் கொண்டு வந்தனர். இதன் பின்னர் அந்த கண்டெய்னரை ஆய்வு செய்தனர்.

அப்போது, அதில் புதிய கணினிக்குப் பதிலாகப் பழைய கணினி உதிரி பாகங்கள் இருந்தது தெரியவந்தது. மேலும், இவற்றின் மதிப்பு சுமார் 50 லட்சம் ரூபாய் இருக்கும் எனவும், இவற்றை வரிவிலக்கு பெறும் வகையில் போலியாகச் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் பெயரைப் பயன்படுத்திக் கடத்தி வந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து சுங்கத்துறை சிறப்புப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து, அந்த கண்டெய்னரை பறிமுதல் செய்து கடத்தல்காரர்கள் பற்றிய விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: இந்தோனேசியாவில் நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கை?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.