ETV Bharat / state

"பாஜக கூண்டுக் கிளி அல்ல - பறக்கத் தயாராக இருக்கிறது" - அண்ணாமலை!

author img

By

Published : Mar 25, 2023, 10:23 AM IST

தமிழ்நாட்டில் களம் மாறிவிட்டது, புரட்சிக்கான நேரம் வந்துவிட்டது. பல ஆண்டுகளாக கூண்டில் இருந்த கிளி கூண்டை விட்டு வெளியே பறப்பதற்கு தயாராகி விட்டது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

Annamalai
அண்ணாமலை

பல ஆண்டுகளாக கூண்டில் இருந்த கிளி கூண்டை விட்டு வெளியே பறப்பதற்கு தயாராகி விட்டது

தூத்துக்குடி: தனியார் மஹாலில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர் "பிரதமர் நரேந்திர மோடி 9 ஆண்டு கால ஆட்சியை முடித்து பத்தாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறார். மோடியின் 9 ஆண்டு கால ஆட்சி தொடாத இடங்களையும் தொட்டுவிட்டது.

தேர்தலுக்காக மட்டும் வாக்காளர்களை குறி வைத்து ஆட்சி நடந்ததை மாற்றியமைத்து மோடியின் 9 ஆண்டு கால ஆட்சி அனைத்து தரப்பு மக்களுக்கானதாக அமைந்துள்ளது. பெண்கள் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என மோடி தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

மேலும் 75 ஆண்டுகள் இல்லாத அளவில் மோடி தலைமையிலான அரசு பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு அங்கீகாரம் வழங்கி உள்ளது வாக்குக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்ட பட்டியல் இன சமூகத்தை மையப் புள்ளியாக வைத்து ஆட்சி நடந்து வருகிறது. பாஜகவின் வெற்றி வாக்கு இயந்திரத்தை கைப்பற்றி நடந்ததாக 2014 இல் சொல்லி வந்தனர். 2019-ல் அரசுத்துறை அனைத்தையும் கைப்பற்றி பாஜக வெற்றி பெற்றதாக சொன்னார்கள். 2024ல் பாஜக பெரும் வெற்றியை வைத்து மக்களை வசியம் செய்து வெற்றி பெற்றார்கள் என சொல்ல போகிறார்கள்.

தமிழ்நாட்டில் களம் மாறிவிட்டது 30 ஆண்டுகளாக கூண்டில் இருந்து கிளி தற்போது கூண்டை விட்டு வெளியே வர தயாராகி விட்டது, பறப்பதற்கு சக்தி வந்து விட்டது. கிளியால் பறக்க முடியும் என்ற நம்பிக்கையும் மக்களிடத்தில் வந்து விட்டது. பாஜக ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை மக்களிடத்தில் வந்து விட்டது.

தமிழ்நாட்டில் புரட்சிக்கான நேரம் தயாராகிவிட்டது. நமக்கான நேரம் வந்துவிட்டது. பாஜகவினர் கூனி குறுகி வாக்கு கேட்க வேண்டிய நிலை எங்கும் இல்லை, நெஞ்சை நிமிர்த்தி வாக்கு கேட்கலாம். இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சி 45 சதவீதத்திற்கும் அதிகமாகவே அரசு திட்டங்கள் செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் எங்கு சென்றாலும் இந்தியாவின் உதவியால் ஏராளமான பணிகள் நடந்து வருகிறது. இலங்கை நாடு முழுவதும் எங்கு பார்த்தாலும் மக்களுக்கான திட்டத்தை இந்தியா செய்து வருகிறது. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை சுட்டுக் கொல்வதற்காக உதவிகளை காங்கிரஸும், திமுக அரசும் செய்து கொடுத்தது. மோடி அரசு அமைந்த பின்னர் இலங்கையால் ஒரு மீனவர் கூட சுட்டுக் கொல்லும் நிலை உருவாகாதவாறு தற்காத்து வருகிறது. இலங்கை என்பது அண்டை நாடு அல்ல தொப்புள் கொடி உறவு. தற்போது வரை தூத்துக்குடி துறைமுகத்திற்கு பல்வேறு பிரச்னைகள் உள்ளது.

2024-ல் மறுபடியும் மோடி தான் ஆட்சிக்கு வரப்போகிறார். வாக்குக்கு பணம் கொடுக்கும் பார்முலாவை முதலில் ஆரம்பித்தது திருமங்கலத்தில் இல்லை, தூத்துக்குடியில் வஉசி காலத்தில் நடந்த சுதேசி கப்பல் இயக்கத்திற்கு எதிராக அதிகமாக பணத்தை வாரி இறைத்து கிழக்கு இந்திய கம்பெனியினர் செயல்பட்டனர். அதுவே முதல் இலவசம். அப்போது தொடங்கியது இன்று வரை நடைமுறையில் உள்ளது. கிழக்கிந்திய கம்பெனியின் வழித்தோன்றலே திமுக. கிழக்கிந்திய கம்பெனி குடை தான் கொடுத்தது, திமுக கொலுசு வரை கொடுக்கும் நிலை உருவாகிவிட்டது. இப்படி போய்க்கொண்டிருந்தால் ஜனநாயகம் முட்டு சந்துக்கு போய்விடும் என்பதே உண்மை.

இளைஞர்களை தொழிலதிபராக மாற்றும் முயற்சியில் மோடி அரசு செயல்படுகிறது. இளைஞர்களை போஸ்டர் ஒட்டவைத்து கோபாலபுரத்தில் நாலாவது தலைமுறையும் முதலமைச்சராக்கும் முயற்சியை திராவிட மாடல் அரசு செய்து வருகிறது. தென்காசிக்கும், காசிக்கும் உள்ள சம்பந்தத்தை மோடி அரசு ஏற்படுத்தி வருகிறது, ஆனால் தமிழகத்தில் தனி தமிழ்நாடு என்ற நிலையை பற்றிய பேசி வருகின்றர்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சோமநாதர் கோயிலில் படையெடுப்பு நடந்த போது தப்பித்து வந்தவர்கள் சௌராஷ்டிரா பிரிவினர். அவர்களையும், தமிழர்களையும் சோமநாதர் ஆலயத்தை வைத்து இணைக்கும் முயற்சியை மோடி அரசு செய்து சௌராஷ்ட்ரா தமிழ் சங்க நிகழ்ச்சியை ஏப்ரல் 19-ல் இருந்து நடத்த உள்ளது. தற்போது அதற்கான தொடக்க விழாவில் பிரதமர் கலந்து கொள்கிறார் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், நமக்கான நேரம் வந்துவிட்டது, தமிழ்நாட்டில் பாஜகவிற்கான புதிய பாதை தேவைப்படுகிறது. ஒவ்வொருவரையும் உயர்த்தும் முயற்சியை பாஜக செய்கிறது. திமுக ஒவ்வொருவரையும் தாழ்த்தும் நிகழ்வை செய்து வருகிறது. மக்களை இணைப்பது, உயர்த்துவது தேசிய மாடல்; மக்களை பிரிப்பது தாழ்த்துவது திராவிட மாடல். நம்முடைய பாதை தனிப்பாதையாக இருக்க வேண்டும், அதுவும் சிங்கப் பாதையாக இருக்க வேண்டும். நேர்மையான நெஞ்சுரம் மிக்க பயணமாக இருக்க வேண்டும். சில முக்கிய முடிவுகளை எடுக்க கட்சியின் அடித்தளம் உறுதியாக வேண்டும்.

இந்திய அரசியலில் புரட்சி இயக்கங்கள் பூத் கமிட்டி வைத்து செயல் படவில்லை. பாஜகவிடம் பூத் கமிட்டியும் உள்ளது புரட்சியும் உள்ளது. மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது. பாலும், தண்ணியும் சேராது நம்முடைய பாதை தனி பாதை சிங்கப்பாதை 2024-லும் நடக்கும் 2026-லும் இது நடக்கும். நாம் கூண்டுக்கிளி அல்ல நாம் பறப்பதற்கு தேவையான நேரத்திற்காக காத்திருந்தோம். பறப்பதற்கான நேரம் வந்துவிட்டது, நிச்சயம் மாற்றம் நடக்கும் என தெரிவித்தார்.

மேலும், திமுக அமைச்சர்கள் அனைவரும் ஊழல் அமைச்சர்கள், தூத்துக்குடியை சார்ந்த அமைச்சர் கீதாஜீவன் அழுகிய முட்டை ஊழல் செய்து வருகிறார். திமுகவினர் கட்டப்பஞ்சாயத்து செய்து வருகின்றனர். அண்ணாமலை வந்தால் அவரை ஒரு கை பார்த்து விடுவோம் என்று கூறினார்கள். நான் வந்துள்ளேன் ஏதாவது செய்யுங்கள் பார்ப்போம் என்று கூறினார். அப்பா பெயரை சொல்லி அரசியல் செய்யும் உனக்கே இவ்வளவு இருந்தால் பாரதிய ஜனதா கட்சியை சார்ந்தவர்கள் சுயமாக இருக்கக் கூடியவர்கள், தனியாக போராடி ஜெயிக்க கூடியவர்கள் எங்களுக்கு எவ்வளவு இருக்கும்" என்று கடுமையாக சாடினார்.

இதையும் படிங்க: பொக்ரான் ராணுவ பயிற்சியில் விபத்து - தவறுதலாக வீசப்பட்ட ஏவுகணைகளால் பரபரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.