ETV Bharat / state

வல்லநாடு பாலம் சீரமைப்பு பணியால் இதுவரை 11 பேர் உயிரிழப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 15, 2023, 6:34 PM IST

Vallanadu Bridge accidents: வல்லநாடு பாலத்தின் சீரமைப்பு பணியால் 11 உயிரிழப்புகள் நடந்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது.

rehabilitation-of-vallanadu-bridge-shocking-information-under-rti
பாலம் சீரமைப்பு பணியால் 11 பேர் பலி

தூத்துக்குடி: கன்னியாகுமரி- காஷ்மீர் இடையேயான தேசிய நெடுஞ்சாலையுடன் தூத்துக்குடி துறைமுகத்தை இணைக்கும் வகையில் திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி வரை 47.25 கிலோ மீட்டர் தொலைவுக்கு 349.50 கோடியில் நான்குவழிச்சாலை அமைக்கப்பட்டது. கடந்த 2010ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2013இல் முடிவடைந்தது.

கட்டப்பட்ட நாள் முதல் தற்போது வரை பல்வேறு விபத்துகள் ஏற்பட்டுள்ளது. இதற்கு பாலம் கட்டப்பட்ட ஆரம்பம் முதலே பாலம் முறையான கட்டப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ஒரு பக்கம் சீரமைத்தல், மறுபக்கம் சேதமடைந்து விடுவதால் பாலத்தின் ஒரு வழியாக மட்டுமே வாகனங்கள் இயக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து, பாலத்தை முறையாக சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில், சமூக ஆர்வலர் சுகன் கிறிஸ்டோபர் என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு அதிர்ச்சிகரமான பதிகல்கள் தற்போது வெளியாகி உள்ளது. கடந்த 2017 முதல் கடந்த மாதம் வரை திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் முறப்பாட்டில் இருந்து நாணல்காடு வரையில் மொத்தமாக 28 விபத்துக்கள் நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த விபத்துக்களில் மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 41 பேர் காயம் அடைந்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதில் இரவு நேரம் மட்டும் 9 விபத்துக்கள் நடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி நான்கு வழிச்சாலை முறையாக பராமரிக்கப்படவில்லை என்று கூறி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை வாகைக்குளம் டோல்கேட்டில் 50 சதவீதம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று கூறியுள்ள நிலையில், தற்போது இந்த அறிக்கையும் வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.

இது குறித்து பசுமை தமிழ் தலைமுறை அமைப்பின் நிறுவனத் தலைவரும், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல் பெற்றவருமான சுகன் கிறிஸ்டோபர் கூறுகையில், “இந்த ஒரு வழிப்பாதை போக்குவரத்து நடைபெறும் சாலையில் விபத்துக்களை குறைத்து உயிரிழப்புகளை தடுக்க, சாலை நடுவே தண்ணீர் தடுப்பு அரண் (water Barry guard) அமைக்க வேண்டும். ஒரு வழிப்பாதை தொடங்கும் இரு புறங்களிலும் போக்குவரத்து காவலர்களை பணியமர்த்த வேண்டும்.

இரவு நேரங்களில் விபத்து நடைபெறுவதால் போக்குவரத்து மாற்ற மின்னணு எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும். ஒரு வழிப்பாதை தொடங்கும் இரு புறங்களிலும் மின் விளக்குகள் அமைக்க வேண்டும். வல்லநாடு பாலத்தின் சீரமைப்புப் பணியால் 11 உயிரிழப்புகள் நடந்துள்ளதால் மீண்டும் விபத்துக்கள் நடந்து ஒரு உயிர்சேதம் ஏற்படும் முன்பே எந்த விபத்துக்களும் நடக்காத வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் காவல் துறைக்கு கோரிக்கை விடுக்கிறேன்” என கூறினார்.

இதையும் படிங்க:பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க அரசு தயக்கம் காட்டுவது ஏன்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.