ETV Bharat / state

திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஊராட்சி பணியாளர்கள்!

author img

By

Published : Mar 16, 2020, 8:55 PM IST

திருவாரூர்: கிராம ஊராட்சி துப்புரவு தொழிலாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பாக 400க்கும் மேற்பட்ட ஊராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்

ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் 400க்கும் மேற்பட்டோர் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களது கோரிக்கையானது, “மேல்நிலை தொட்டி இயக்குநர் துப்புரவு தொழிலாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். அனைத்து ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச மாத ஊதியமாக 18 ஆயிரம் ரூபாய் நிர்ணயம் செய்திட வேண்டும்.

பணியிலிருந்து ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பணிக்கொடை ஓய்வு ஊதியம் வழங்கிட வேண்டும். தமிழ்நாடு அரசின் ஆறாவது ஊதியக் குழு தலைவரை நடைமுறைப்படுத்தி உயர்த்தப்பட்ட ஊதியம், ஊதிய நிலுவைத் தொகையை கணக்கிட்டு அதனை அனைத்து ஊழியர்களுக்கும் வழங்கிட வேண்டும்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்

ஊராட்சி ஊழியர்களுக்கு பணிப்பதிவேடு உடனடியாக தொடங்க வேண்டும். பழிவாங்கும் நோக்கத்தோடு ஊழியர்கள் பணி விதிமுறைகளுக்கு புறம்பாகப் பணி ஓய்வு என்ற பெயரில் ஊழியர்களை பணியிலிருந்து நிறுத்தும் செயலை கைவிட வேண்டும்.

மேலும், அரசு உத்தரவின்படி ஊராட்சி ஊழியர்களுக்கு உடனடியாக புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டை வழங்கிட வேண்டும். ஊராட்சிகளில் குடிநீர் சுகாதார வசதிகளை மேம்படுத்த தேவையான நிதியை வழங்கிட வேண்டும்.

கோரிக்கைகளை வலியுறுத்திய ஊழியர்கள்

உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கிய நிதியினை காலதாமதமின்றி உடனடியாக அனைத்து ஊராட்சிகளிலும் வழங்கிட வேண்டும்” உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: ஈரானில் தவிக்கும் மீனவர்களை மீட்கக் கோரி குமரியில் ஆர்ப்பாட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.