ETV Bharat / state

'கரோனாவும் நிவர் புயலும் முதலமைச்சரை பார்த்து பயந்து ஓடுகிறது' - அமைச்சர் காமராஜ்

author img

By

Published : Nov 29, 2020, 10:24 AM IST

திருவாரூர்: மக்களை அச்சுறுத்துகின்ற எந்த தடைகளாக இருந்தாலும் சரி, குறிப்பாக கரோனாவும் நிவர் புயலும் தமிழ்நாடு முதலமைச்சரை பார்த்து பயந்து ஓடுகிறது என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

Minister
Minister

திருவாரூர் மாவட்டம் குடவாசலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆலோசனை கூட்டம் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "தமிழ்நாடு முதலமைச்சரின் சீரிய நடவடிக்கைகளால் இந்தியாவின் சிறந்த மாநிலமாக மூன்றாவது முறையாக தமிழ்நாடு தேர்வாகியுள்ளது. நான்காவது முறையாக மேட்டூர் அணை 100 அடியை நிரம்பியுள்ளது இது ஒரு வரலாற்று சாதனையாகும்.வருகின்ற 2021ஆம் ஆண்டு அதிமுகதான் ஆட்சி அமைக்கும் அதைத்தான் தமிழ்நாடு மக்கள் உருவாக்கி கொண்டிருக்கின்றார்கள். அதிமுக ஆட்சியில்தான் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருக்கும்.

குடவாசலில் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆலோசனை கூட்டம்

நிவர் புயல் பாதிப்பு காரணமாக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்கள் பெறுவதில் எந்தவிதமான பிரச்சினையும் கிடையாது. உரிய நேரத்தில் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. நிவர் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு கிலோ அரிசி, பருப்பு, ஆயில்,வேஷ்டி சேலை ஆகியவை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்களை அச்சுறுத்துகின்ற எந்த தடைகளாக இருந்தாலும் சரி குறிப்பாக கரோனாவும் நிவர் புயலும் தமிழ்நாடு முதலமைச்சரை பார்த்து பயந்து ஓடுகிறது.மேலும், விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு உறுதுணையாக இருந்து வருகிறது. விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம்" எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.