ETV Bharat / state

பக்தர்கள் ஆசைப்பட்டு வரும் ஆன்மீக பூமி, திருவண்ணாமலை - தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி

author img

By

Published : Aug 10, 2023, 9:29 PM IST

'திருவண்ணாமலை ஒரு ஆன்மீக பூமி நினைத்தாலே முக்தி தரும் பூமியாகவும் விளங்குவது திருவண்ணாமலை. பக்தர்கள் ஆசைப்பட்டு வரும் ஆன்மீக பூமியாக திருவண்ணாமலை விளங்குகின்றது' என திருவண்ணாமலையில் சாதுக்கள் உடனான சந்திப்பில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார்.

Etv Bharat
Etv Bharat

தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி

திருவண்ணாமலை: கிரிவலப் பாதையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சாதுக்களுடன் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று உரையாற்றினார். அப்போது, "திருவண்ணாமலை ஒரு ஆன்மீக பூமி, நினைத்தாலே முக்தி தரும் பூமியாகவும் விளங்குவது திருவண்ணாமலை. பல லட்சம் பக்தர்கள் ஆசைப்பட்டு வரும் ஆன்மீக பூமியாக திருவண்ணாமலை விளங்குகின்றது. திருவண்ணாமலைக்கு இது என்னுடைய முதல் பயணம்.

மற்ற நாடுகளைப் போல் இந்தியா இல்லை. மற்ற நாடுகள் எல்லாம் ஆதிக்க சக்திகளால் உருவாக்கப்பட்டவை. ஆனால், இந்தியா ஆன்மீக சக்தியால் உருவாக்கப்பட்டது. சாதுக்களாலும் ரிஷிகளாலும் ஆன்மீகத்தால் உருவாக்கப்பட்ட நாடு நமது பாரத நாடு.

மேலும், பாரம்பரிய இலக்கியத்துடன் தொடர்புடைய நாடு இந்தியா. இந்தியா என்பது சிவனால் உருவாக்கப்பட்டது. நாம் அனைவரும் சிவனின் குழந்தைகள். இதுவே சனாதன மையமாகும்'' என்றும் உரையாற்றினார்.

சனாதன தர்மம் என்பது தனி ஒருவருக்கு உரியது அல்ல நமது சகோதரிகள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்; அனைவரும் வாழ வேண்டும் என்பதே நமது சனாதன தர்மம் ஆகும்; இதில் நாம் நமது என்ற பாகுபாடு இல்லை என்றும் ஆளுநர் உரையாற்றினார்.

இந்தியா பல ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த நாடு என்றும்; இந்தியா 1947இல் பிறந்தது அல்ல.. நாம் அப்போது விடுதலை மட்டுமே அடைந்தோம் என்றும், இந்தியாவில் பல்வேறு இடங்களுக்குச் சென்று இருந்தாலும் இந்தியாவின் ஆன்மீகத் தலைநகரமாக தமிழ்நாடு உள்ளது. ரிஷிகளும், நாயன்மார்களும் தமிழகத்தில் அவதரித்து நாம் யார் என்று உண்மையை உலகிற்கு அறிவித்துள்ளார்கள். அதுவே தமிழகத்துக்கு மிகப்பெரிய பெருமை என்றும் உரையாற்றினார்.

'பயிர் வாடும்போது அதைப் பார்த்து நாம் வாடுகிறோம்; இதுதான் சனாதன தர்மம். இந்தியா என்பது மிகப்பெரிய நாடு, ஆன்மீகத்தைத் தவிர்த்து நாம் வேறு விதத்தில் சிந்தித்தால் இந்தியா மேற்கத்திய நாடாக மாறிவிடும். இந்தியா அனைத்து துறைகளிலும் முழுமையான முன்னேற்றத்தை நோக்கி பயணித்து வருகிறது. இந்தியாவின் ஆன்மீகம் என்பது உலகிற்கு வழிகாட்டும் விதமாக உள்ளது.

மேலும் மனிதனின் எதிர்மறை எண்ணத்தினால் உலகில் இயற்கைச் சீற்றங்கள் அதிக அளவு நடைபெற்று வருகிறது. இதனால், பல்வேறு நாடுகள் மிகப்பெரிய அளவில் பாதிப்படைகிறது. இந்தியாவின் ஆன்மீகம் என்பது உலகம் முழுக்கப் பரந்து விரிந்து செல்ல வேண்டும்.

இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரையும் ஆன்மீக ஆற்றல் உடையவராக மாற்ற வேண்டும். இதுதான் சாதுக்களாக உள்ள நம்முடைய பொறுப்பு மற்றும் கடமை. இதில் சாதுக்களுக்கு மிகப்பெரிய பொறுப்புகள் உள்ளது. குறிப்பாக கிரிவலப் பாதையில் உள்ள அசைவ உணவகங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. அவற்றை அகற்ற வேண்டும் என்பது எனது எண்ணம்; அதற்கு நான் முயற்சி செய்வேன்.

ராஜ் பவனில் பாரதியார் மண்டபம் உருவாக்கப்பட்டது போல் திருவண்ணாமலையில் விவேகானந்தர் மண்டபம் உருவாக்கப்படும். ஆன்மீகத்தை வளர்க்கும் மிகப்பெரிய பொறுப்பு நமக்கு உள்ளது. அதற்கு நாம் அனைவரும் பாடுபட வேண்டும்" என்று ஆளுநர் உரையாற்றினார்.

இதையும் படிங்க: ராகுல் காந்தி பறக்கும் முத்தம் விவகாரம்... ஆதாரமில்லை எனத் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.