ETV Bharat / state

திருவண்ணாமலையில் சமணர் படுகைகள் கண்டுபிடிப்பு

author img

By

Published : Jan 3, 2022, 4:51 PM IST

திருவண்ணாமலை அடுத்த அய்யம்பாளையம் கிராமத்தில் ஆறு சமணர் படுகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

6 சமணர் படுகைகள் கண்டுபிடிப்பு
6 சமணர் படுகைகள் கண்டுபிடிப்பு

திருவண்ணாமலை: புதிய சமணர் படுகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறித்து சம்புவராயர் ஆய்வு மைய அறக்கட்டளையின் செயலாளர் முனைவர் அமுல்ராஜ், வரலாற்று ஆய்வாளர் விஜயன் ஆகியோர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், “பெரிய அய்யம்பாளையம் கிராமத்தில் உள்ள மலை மீது ஊமைக்கு வாய் கொடுத்த உத்தமராயர் கோயிலுக்குத் தெற்குத் திசையில் இரு பாறைகளுக்கு நடுவே குகை ஒன்று உள்ளது என அந்த கிராமத்தைச் சேர்ந்தவரும் சென்னை, பெரும்பாக்கம் அரசு கல்லூரி தமிழ்த் துறைத் தலைவருமான கவிஞர் பச்சையப்பன் தெரிவித்தார்.

மேலும் அவர், அக்குகையை சாமியார் குகை என அழைக்கப்படுவதாகவும், அதன் உள்ளே சென்றால் கோடையிலும் குளிர்ச்சியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

சமணக் கற்பாழிகள்

அக்குகையை நாங்கள் ஆய்வு செய்தபோது, மூன்று சமணக் கற்பாழிகள் இருப்பது தெரியவந்தது. அந்தக் குகைக்கு மேலே உள்ள பாறை மீதும் மூன்று சமணர் படுகைகள் வெட்டப்பட்டிருப்பது உறுதியானது. இரு பெரிய பாறைகளுக்கு நடுவே உள்ள சமணக் குகையின் நுழைவிடம் ஒரு சிற்றாலயம் போன்ற தோற்றத்தில் உள்ளது.

சமணர் படுகைகள்
சமணர் படுகைகள்

நீளமான கருங்கல் சுவரும், நான்கு அடி உயரம் கொண்ட சிறிய வாயிலும் செதுக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது. வாயிலின் உள்ளே சென்றால், ஒரு பம்பரத்தின் அடியைப் போல, கீழ்ப்புறம் குறுகலாகவும், மேற்புறம் அகன்றும் உள்ள ஒரு பெரிய பாறையைக் காணலாம். இதன் தரைப்பரப்பில் வடக்கு நோக்கி மூன்று படுகைகள் வெட்டப்பட்டிருந்தன.

இந்தச் சமணப் படுகைகள் சற்று ஆழமில்லாமல், செதுக்கப்பட்ட நிலையிலேயே அதன் பழமையை வெளிப்படுத்துகிறது.

16ஆம் நூற்றாண்டின் சுற்றுச்சுவர்

குகையின் கிழக்கிலும் மேற்கிலும் உள்ள சுவர் கனப்பரிமாணம், அதன் வாயிலின் வெளிப்பகுதியில், இரு அனுமன், கருடாழ்வார் சிற்பங்களும், அதன் அருகில் தெளிவின்றி, தொடர்ச்சியற்று காணப்படும் கல்வெட்டுகளும் உள்ளன.

இதன்மூலம் இச்சுற்றுச் சுவரானது கி.பி. 16ஆம் நூற்றாண்டில் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாக கருத முடிகிறது. ஆனால், குகையின் உள்ளே வெட்டப்பட்டுள்ள சமணப் படுகைகள் இதற்கும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தையதாக அறியமுடிகிறது.

சமணக் குகையின் வெளிப்புறத் தரைத்தளத்தில் உள்ள பாறையில், மருந்து அரைக்கும் குழி ஒன்றும் உள்ளது. இக்குகையின் மேல்தளமாக உள்ள பாறைக்கு மேற்புறமாக மூன்று கற்படுகைகள் உள்ளன. இவை மெலிதான செதுக்கல் கொண்டுள்ளன.

அய்யம்பாளையம் சமணர் குகையில் ஆறு படுகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில், தற்போது கண்டுபிடிக்கப்பட்ட சமணர் படுகைகளுடன் சேர்ந்து மொத்தம் 12 சமணர் படுகைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை

தமிழ்நாட்டிலேயே திருவண்ணாமலை மாவட்டத்தில்தான் சமணர் அடையாளங்கள் அதிகளவு காணப்படுவது சிறப்பாகும். அக்காலத்தில் சமணத் துறவிகளை மன்னர்கள் மதித்து வந்துள்ளனர். இத்தகைய சிறப்புவாய்ந்த சமணக் குகையின் கட்டடச் சுவர்கள் சிதைந்துள்ளன. எனவே, அதனைச் சீரமைத்துப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தனர்.

இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்குத் தடுப்பூசி - தொடங்கிவைத்த ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.