ETV Bharat / state

தமிழ்நாட்டில் ரூ.4,250 கோடி கோயில் சொத்துகள் மீட்பு - அமைச்சர் சேகர்பாபு

author img

By

Published : Apr 30, 2023, 5:34 PM IST

தமிழ்நாட்டில் ரூ.4,250 கோடி மதிப்புள்ள கோயில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளதாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

minister Sekar babu
அமைச்சர் சேகர்பாபு

திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் சித்ரா பௌர்ணமி விழா வரும் 4ம் தேதி இரவு 11.59 மணிக்கு ஆரம்பித்து 5ம் தேதி இரவு 11.33 மணி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்வது குறித்து இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (ஏப்ரல் 30) ஆய்வு மேற்கொண்டார்.

கோயிலுக்குள் வரும் பக்தர்களின் வசதிக்காக எந்தெந்த இடங்களில் தடுப்புகள் அமைப்பது, பக்தர்கள் சிரமமின்றி விரைவில் சாமி தரிசனம் செய்ய என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து அண்ணாமலையார் கோயிலின் ராஜகோபுரம் எதிரே உள்ள சாலையோர கடைகளுக்கு புதிதாக கட்டடம் கட்டித்தர உள்ள இடத்தையும் ஆய்வு செய்தார். பின்னர் அம்மணி அம்மன் கோபுரம் எதிரே இடிக்கப்பட்ட அம்மணிஅம்மன் மடத்தை அமைச்சர்கள் சேகர்பாபு, எ.வ.வேலு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறுகையில், "அண்ணாமலையார் கோயிலுக்குச் சொந்தமான 23,000 சதுர அடி நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து தற்போது மீட்கப்பட்டுள்ளது. குறிப்பாக 100 கோடி ரூபாய் மதிப்புடைய இடத்தை மீட்டுள்ளோம். அம்மணிஅம்மன் மடத்திற்கு சொந்தமான அம்மணிஅம்மாள் கோயில் இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்படும். மீதமுள்ள இடம் பக்தர்கள் பயன்படக்கூடிய வகையில் மாற்றப்படும்.

சித்ரா பௌர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாரை தரிசனம் செய்து கிரிவலம் செல்ல இருப்பதால் பக்தர்களுக்குத் தேவையான அனைத்து விதமான வசதிகளையும், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு பெருந்திட்ட வரைவு உருவாக்குவதற்கும், அந்த பெருந்திட்ட வரைவு குறித்து இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளோம்.

திருப்பதி பெருமாள் கோயில் மலையில் அதிக நிலப்பரப்பில் அமைந்துள்ளது. ஆனால், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலைச் சுற்றி அதிகளவு குடியிருப்புகள் அமைந்துள்ளன. குடியிருப்புகள் தவிர்த்து மீதமுள்ள இடங்களில் திருப்பதிக்கு நிகராக, வருகின்ற பக்தர்களுக்கு என்னென்ன வசதிகள் செய்து தர முடியுமோ, அனைத்து வசதிகளையும் செய்து தர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நான்கு கோயில்களுக்கு சிறப்பு தரிசனம் செய்ய நேரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சிறப்பு தரிசனம் நேரம் குறித்து ஆய்வு செய்து திருப்பதிக்கு நிகராக மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்பது இந்து சமய அறநிலையத் துறையின் நோக்கமாக உள்ளது. கோயில் அறங்காவலர்கள் குழுவைப் பொறுத்தவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் அளித்துள்ளனர். அனைத்து விண்ணப்பங்களும் விசாரணை செய்யப்பட்டு அதன் மீது சிறப்புக் குழு ஒன்று அமைக்க உள்ளோம். அந்தக் குழு பரிசீலனையின்படி விரைவில் அறங்காவலர்கள் குழு நியமிக்கப்படும்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 4250 கோடி ரூபாய் மதிப்பில் கோயிலுக்குச் சொந்தமான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. கோயிலுக்குச் சொந்தமான சொத்துகள் மீட்பு வேட்டை தொடரும். குறிப்பாக இந்த ஆண்டு அம்மணி அம்மன் மடத்துக்குச் சொந்தமான இடத்தை மீட்டுள்ளோம். இதே போன்று சென்னையில் ஒரு இடம் மீட்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்கள் அனைத்திலும் பக்தர்கள் பயன்படுத்தும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.

அண்ணாமலையார் கோயிலுக்கு யானை இல்லாதது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "வனத்துறையிலிருந்து நேரடியாக யானையைப் பெற இயலாது. முன் அனுமதி பெற்று யானை வளர்ப்பவர்கள் முன்வந்து கோயிலுக்கு தானமாக வழங்கினால் யானை பெறப்படும்" என அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்தார்.

இதையும் படிங்க: முதலமைச்சர் கள ஆய்வு: மாவட்ட அதிகாரிகள் அதிரடி மாற்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.