ETV Bharat / state

தி.மலை கோயில் அர்ச்சகர்கள் பணி நியமனத்துக்கு அனுமதி!

author img

By

Published : Mar 5, 2021, 8:01 PM IST

சென்னை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு அர்ச்சகர்கள் நியமனத்துக்கான தேர்வு நடவடிக்கைகளைத் தொடர, இந்து சமய அறநிலையத் துறைக்கு அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

MHC
MHC

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் அர்ச்சகம், ஸ்தானிகம், பரிசாரகம், பரிவராகம், மெய்காவல் ஆகிய ஐந்து பணிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, கோயில் இணை ஆணையர் கடந்த ஜனவரி 21ஆம் தேதி பத்திரிகையில் விளம்பரம் வெளியிட்டார்.

அதில், விண்ணப்பிப்பவர் தமிழ் தெரிந்தவராக இருக்க வேண்டும், 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும், வேத பாடசாலைகளில் வேத ஆகம படிப்பு முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தகுதிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

அர்ச்சகர்கள் நியமன, அறிவிப்பை ரத்து செய்யக் கோரியும், திருவண்ணாமலையைச் சேர்ந்த சிவாச்சாரியார் செந்தில்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், அருணாச்சலேஸ்வரர் கோயில் அர்ச்சகர்கள், குருக்கள் பணிக்குத் தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன எனவும், ஆகம விதிகளின்படி, ஆதி சைவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமே நியமிக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சமய தீட்சை, விஷேச தீட்சை, நிர்வாண தீட்சை, அர்ச்சகர் அபிஷேக தீட்சைகளை பெற்றவரையே கோயிலின் அர்ச்சகராக நியமிக்க முடியும் எனவும், தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள தகுதிகள், கோயிலின் மரபுகளுக்கு முரணாக உள்ளதாகவும் மனுவில் புகார் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கானது நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத் துறை சார்பில் முன்னிலையான வழக்கறிஞர், அர்ச்சகர் பதவிக்கு விண்ணப்பிக்காத நிலையில், இந்த வழக்கைத் தொடர மனுதாரருக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை என்றும், ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டுவிட்டதாகவும், மொத்தம் 322 பேர் விண்ணப்பித்துள்ளனர் எனவும், ஆகம விதிகளில் அனுபவம் உள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி, மனுதாரருக்கு இந்த வழக்கு தொடர அடிப்படை உரிமை இல்லை எனக் கூறி அவரது கோரிக்கையை நிராகரித்தார். அர்ச்சகர்கள் பணி நியமனம் என்பது மத பழக்க வழக்கங்களையும் கோயில் நடைமுறைகளையும் பின்பற்றியிருக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், கோயில் மரபு, நடைமுறைகளைக் கண்டிப்புடன் பின்பற்றி தேர்வு நடவடிக்கைகளைத் தொடரலாம் என அறநிலையத் துறைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்துவைத்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.