ETV Bharat / state

மாண்டஸ் புயல் எச்சரிக்கை: திருவள்ளூரில் புயல் கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிப்பு!

author img

By

Published : Dec 8, 2022, 9:54 PM IST

Updated : Dec 8, 2022, 10:38 PM IST

திருவள்ளூரில் மாண்டஸ் புயல் தொடர்பான புகார்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

திருவள்ளூரில் புயல் கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிப்பு
திருவள்ளூரில் புயல் கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் மாண்டஸ் புயலை எதிர்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் ஆல்பின் ஜான் வர்கீஸ், ”மாண்டஸ் புயலை எதிர்கொள்ள வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல் துறை நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் துறை பொதுப்பணித்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்படையக்கூடிய கும்மிடிப்பூண்டி, பொன்னேரி பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மீனவர்கள் கடலுக்குள் செல்லக்கூடாது என எச்சரிக்கை, நேற்றைய தினத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் புயலின் தாக்கம் அதிகமாக இருக்கக்கூடும் என அறிந்து காவல்துறை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் மிகவும் அதிகமாக பாதிப்பு ஏற்படும் பகுதிகள் 8, அதிக அளவில் பாதிப்பு ஏற்படும் பகுதிகள் 39, மிதமாக பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகள் 44, குறைவாக பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகள் 42, என மொத்தம் 133 மழையால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது.

மேற்படி பகுதிகளுக்கு பல்வேறு துறைகள் அடங்கிய 64 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். முன்னெச்சரிக்கை குழுவில் ஒன்பது உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழுவும், தேடுதல் மற்றும் மீட்புக் குழுவில் 12 உறுப்பினர்கள் கொண்ட ஆறு குழுவும், வெளியேற்றுதல் குழுவில் மூன்று உறுப்பினர்கள் கொண்ட குழுவும், தற்காலிக தங்குமிடம் குழுவில் 27 உறுப்பினர்கள் கொண்ட ஒன்பது குலுக்கல் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையிலிருந்து 41 நபர்கள் தயார் நிலையில் உள்ளனர். இவர்கள் மிகவும் அதிகமாக பாதிப்பு ஏற்பட்டப் பகுதிகளில் மீட்புப் பணிகள் மேற்கொள்ள ஈடுபடுத்தப்படுவார்கள். பொது மக்களைப் பாதுகாக்க, தங்க வைக்க புயல் பாதுகாப்பு மையங்கள் வைரவன் குப்பம் மற்றும் காட்டுப்பள்ளி ஆகிய இரண்டு இடங்களிலும், பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் திருப்பாலைவனம், ஆண்டார் மடம், பள்ளிபாளையம், ஏலாவூர் போன்ற இடங்களில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளன.

இதுமட்டும் அல்லாமல் 660 தற்காலிக தங்குமிடங்கள் தயார் நிலையில் உள்ளன. கால்நடை பராமரிப்புத் துறை வாயிலாக கால்நடைகளைக் காப்பாற்ற 64 தற்காலிக தங்குமிடம் மற்றும் 144 முதல் நிலை பொறுப்பாளர்கள் பயிற்சி அளிக்கப்பட்ட நபர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

சுகாதாரத் துறை வாயிலாக 42 மருத்துவக் குழுக்கல் மற்றும் அரசு மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் வசதி தயார் நிலையில் உள்ளன. மாவட்டத்தில் 74 ஆயிரத்து 680 மணல் மூட்டைகளும் 4,945 சவுக்கு மரக்கம்பங்களும், 35 ஜேசிபி இயந்திரங்கள், 43 மின் அறுவை ரம்பங்கள், 111 கயிறுகள், 372 படகுகள், 86 அதிநவீன நீர் உறிஞ்சும் இயந்திரம், 28 ஜெனரேட்டர்கள், 32 நீர் இறைக்கும் பம்புகள், 242 மின்கம்பங்கள் மற்றும் 3,500 மின் மாற்றிகள் போன்றவை தயார் நிலையில் உள்ளன.

பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் அரசினால் அறிவிக்கப்படும் வெல்லும் மற்றும் புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை செய்திகளை அறிந்து அதன்படி செயல்பட கேட்டுக் கொள்ளப்படுகிறது. மாவட்டத்தில் பொதுமக்கள் பெருமழை தொடர்பாக தங்கள் புகார்களை தெரிவிக்க 24 மணி நேரமும் இயங்கும் மாவட்ட பேரிடர் தடுப்பு கட்டுப்பாட்டு அறைக்கான கட்டணமில்லா தொலைபேசி என் 1077.

மாவட்ட ஆட்சியர் ஆல்பின் ஜான் வர்கீஸ் அளித்த பேட்டி

கட்டுப்பாட்டு அறை 044-27664177, 04427666746 எனும் எண்களைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். வாட்ஸ்அப் எண்ணான 9444317862 எனும் எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்’’ என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: மாண்டஸ் புயல்; கடைப்பிடிக்க வேண்டியவை என்னென்ன?

Last Updated : Dec 8, 2022, 10:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.