ETV Bharat / state

சென்னையின் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையிலிருந்து நீர் திறப்பு!

author img

By

Published : Sep 23, 2020, 6:39 PM IST

சென்னை: சென்னையின் குடிநீர் தேவைக்காக ஆண்டுதோறும் திறந்துவிடப்படும் அளவைவிட கூடுதலான அளவில் இந்தாண்டு தண்ணீர் திறந்துவிடப்படும் என ஆந்திர மாநில பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் ஹரி நாராயண ரெட்டி தெரிவித்துள்ளார்.

ஹரி நாராயண ரெட்டி பேட்டி  கிருஷ்ணா நீர்  ஆந்திர மாநில பொதுப்பணித்துறை  hari narayana  andra hari narayana
சென்னையின் குடிநீர் தேவைக்காக ஆந்திரா கண்டலேறு அணையிலிருந்து நீர் திறப்பு

சென்னை மக்களின் குடிநீருக்கு ஆதாரமாக உள்ள நீர்த்தேக்கம் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு ஆண்டுதோறும் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து எட்டு டிஎம்சி தண்ணீர் வழங்கப்படும். இந்தாண்டு தற்போது பூண்டி ஏரியின் நீர்மட்டம் தரை தெரியுமளவுக்கு வெகுவாக குறைந்தது.

இதனால், சென்னை மக்களுக்கு குடிநீர் பிரச்னை ஏற்படும் எனத் தமிழ்நாடு அரசு ஆந்திர அரசைக் கேட்டுக்கொண்டதன் பேரில் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து கடந்த 18ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இந்தத் தண்ணீர் கடந்த 20ஆம் தேதி இரவு தமிழ்நாடு எல்லையான ஊத்துக்கோட்டை அருகேயுள்ள ஜீரோ பாயிண்ட் வந்தடைந்தது.

திருவள்ளூர் வட்டார செயற்பொறியாளர் மரியா ஹென்ரி ஜார்ஜ் பேட்டி

அதைத்தொடர்ந்து தற்போது பூண்டி ஏரிக்கு விநாடிக்கு 700 கனஅடி வீதம் கால்வாய் வழியாகத் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், ஆந்திர மாநில பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் ஹரி நாராயண ரெட்டி, திருவள்ளூர் வட்டார செயற்பொறியாளர் மரியா ஹென்ரி ஜார்ஜ், உதவிப் பொறியாளர் பிரகதீஷ் சதீஷ் ஆகியோர் சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம், தெலுங்கு கங்கை கால்வாய் ஆகிய இடங்களைப் பார்வையிட்டு ஆய்வுசெய்தனர்.

இது குறித்து ஆந்திர மாநில பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் ஹரி நாராயண ரெட்டி கூறும்போது, "ஆந்திர மாநிலத்தில் சோமசீலா கண்டலேறு அணையில் தற்போது, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து அதிகளவு தண்ணீர் வந்துள்ளது. தற்போது, கண்டலேறு அணையில், நான்கு டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது.

தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டதன்பேரில் முதலில் விநாடிக்கு 500 கனஅடியாக திறந்துவிடப்பட்டு, தற்போது 2 ஆயிரம் கனஅடியாக திறந்துவிடப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஆந்திர மாநிலத்திலிருந்து 8.05 டிஎம்சி தண்ணீர் வழங்கப்பட்டது. இந்தாண்டு அதைவிட கூடுதலாக வழங்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: மேகேதாட்டு திட்டத்திற்கு மத்திய அரசு முன்பே ஒப்புதல் வழங்கியதா? - பழ.நெடுமாறன் கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.