ETV Bharat / state

திருத்தணி முருகன் கோயிலில் வரும் வியாழக்கிழமை முதல் ஆடிக்கிருத்திகை விழா தொடக்கம்!

author img

By

Published : Jul 19, 2022, 6:55 PM IST

திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழா தொடங்க உள்ள நிலையில் பக்தர்கள் வசதிக்காக செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே‌. சேகர்பாபு, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், ஆய்வு செய்து கலந்தாய்வு நடத்தியுள்ளார்கள்.

திருத்தணி முருகன் கோவிலில் வரும் வியாழக்கிழமை முதல் ஆடி கிருத்திகை விழா தொடக்கம்
திருத்தணி முருகன் கோவிலில் வரும் வியாழக்கிழமை முதல் ஆடி கிருத்திகை விழா தொடக்கம்

திருவள்ளூர்: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகத்திகழும் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயிலில் கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆடிக்கிருத்திகை விழா ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

வரும் வியாழக்கிழமை தொடங்கும் ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழா தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறயிருக்கிறது. இம்மாதம் 23ஆம் தேதி ஆடிக்கிருத்திகை அன்று மாலை சரவணப் பொய்கை திருக்குளத்தில் முதல் நாள் தெப்பத் திருவிழா தொடங்கி நடைபெற உள்ளது.

விழாவில் தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் திருத்தணி மலை கோயிலில் குவிந்து சுவாமி தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், கழிப்பிடம், தங்குமிடம் தற்காலிகப்பேருந்து நிலையங்கள் உட்பட அனைத்து வசதிகளும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், காவல் துறை, இந்து சமய அறநிலையத்துறையினர் இணைந்து செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று(ஜூலை19) காலை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் திருத்தணியில் சரவணப்பொய்கை திருக்குளத்தில் பக்தர்கள் வசதிக்காக செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து, திருப்படிகள் வழியாக மலைக்கோயிலுக்குச் சென்று மருத்துவ மையத்தை ஆய்வு செய்தனர். பின்னர் அலுவலர்களுடன் கலந்தாய்வு நடத்தினார்.

பின்னர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில்: ’திருத்தணி முருகன் கோயிலுக்கு காவடிகளுடன் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் விழா நடைபெறும் ஐந்து நாட்களும் 24 மணி நேரமும் முருகப்பெருமானை பக்தர்கள் தரிசித்து வழிபட ஏதுவாக கோயில் நடை திறந்திருக்கும். பக்தர்கள் கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி முகக்கவசம் அணிந்து கொண்டும் சமூக இடைவெளியுடன் முருகப்பெருமானுக்கு காவடிகள் செலுத்தி வழிபட வேண்டும்’ என கேட்டுக் கொண்டார்.

மேலும் பக்தர்கள் வசதிக்காக தற்காலிகப்பேருந்து நிலையங்கள், மருத்துவ முகாம்கள், குடிநீர், பொதுக் கழிப்பிடங்கள், இரவு நேரங்களில் அதிக வெளிச்சம் தரக்கூடிய விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்புப் பணியில் 1300-க்கும் மேற்பட்ட போலீசார் சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்‌.

சென்னையில் இருந்து விழா நடைபெறும் மூன்று நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கவும் தமிழ்நாடு, ஆந்திரப் பகுதிகளுக்கு கூடுதல் பேருந்து சேவைக்கும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்‌.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எம். பூபதி, திருத்தணி உதவி காவல் கண்காணிப்பாளர் சாய் பிரிணித், திருக்கோயில் துணை ஆணையர் விஜயா உட்பட பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

திருத்தணி முருகன் கோயிலில் வரும் வியாழக்கிழமை முதல் ஆடிக்கிருத்திகை விழா தொடக்கம்!

இதையும் படிங்க:காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - கழுகு பார்வை காட்சி...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.