ETV Bharat / state

நெல்லையில் கூர்நோக்கு இல்ல பாதுகாவலரை தாக்கிவிட்டு 12 சிறார்கள் தப்பியோட்டம்!

author img

By

Published : Apr 10, 2023, 10:39 AM IST

Updated : Apr 10, 2023, 11:41 AM IST

பாளையங்கோட்டை அரசு கூர்நோக்கு இல்லத்தில் பாதுகாவலரை தாக்கி விட்டு 12 சிறுவர்கள் தப்பி ஓடினர். ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இரு சிறுவர்கள் பிடிபட்ட நிலையில், மீதமுள்ள 10 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Prison
Prison

நெல்லை : பாளையங்கோட்டை அரசு கூர்நோக்கு இல்லத்தில் பாதுகாவலரை தாக்கி விட்டு தப்பியோடிய 12 சிறார்களை போலீசார் தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை புதிய பேருந்து நிலையத்திற்கு அருகே சமூக பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் அரசினர் கூர்நோக்கு இல்லம் செயல்படுகிறது.

இங்கு திருநெல்வேலி தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 20 சிறார்கள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 9 ஆம் தேதி, இரவு வேளை உணவுக்கு பின் கூர்நோக்கு இல்லத்தில் இருந்த சிறுவர்களில் 12 பேர் திடீரென கூர்நோக்கு இல்லத்தின் பாதுகாவலரை தாக்கிவிட்டு தப்பி ஓடினர்.

இந்த சம்பவம் தொடர்பாக கூர்நோக்கு இல்ல பாதுகாவலர், பெருமாள்புரம் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்து உள்ளார். இதனைத் தொடர்ந்து நெல்லை மாநகர காவல் துறை ஆணையாளர் ராஜேந்திரன், நெல்லை மாநகர கிழக்கு காவல்துறை துணை ஆணையர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் நெல்லை எம்ஜிஆர் பேருந்து நிலையம், பாளையங்கோட்டை பேருந்து நிலையம், சந்திப்பு ரயில் நிலையம், மார்க்கெட் என மக்கள் கூடும் பகுதிகளில் சிறுவர்கள் தப்பி ஓடி உள்ளார்களா என தேடும் பணியில் நெல்லை மாநகர காவல் துறையினர் ஈடுபட்டு உள்ளனர். இதற்கிடையே கடந்த இரு நாட்களுக்கு முன் தேசிய குழந்தைகள் ஆணைய உறுப்பினர் ஆனந்த், நெல்லை அரசினர் கூர்நோக்கு இல்லத்தை ஆய்வு செய்து சிறுவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் கூர்நோக்கு இல்லத்தில் உள்ள சிறுவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இருப்பதாகவும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து இருந்தார்.

இந்நிலையில் ஆய்வு செய்த மறுநாளே அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 12 சிறுவர்கள் தப்பி ஓடிய சம்பவம் மாநகர காவல் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கூர்நோக்கு இல்லத்தில் உள்ள கண்காணிப்பாளர் ஜெய்சங்கர் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அருள் செல்வி உள்பட அதிகாரிகள், கூர்நோக்கு இல்லத்தின் வாசலில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் மாநகர முக்கிய சந்திப்புகளில் உள்ள சிசிடிவிகளை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிச் சென்ற இரண்டு சிறார்களை போலீசார் பிடித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் சுற்றித் திரிந்த இரு சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். தப்பிச் சென்ற மீதமுள்ள 10 பேரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

இதையும் படிங்க : "சட்டசபைக்கு நான்தான் தலைவர், அதற்கு பெயர் தான் அவை முன்னவர்" - அமைச்சர் துரைமுருகன் பெருமிதம்

Last Updated : Apr 10, 2023, 11:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.