ETV Bharat / state

ராஜ உடையில் காட்சியளித்த சிங்கம்பட்டி ஜமீன்; நெல்லை சொரிமுத்து அய்யனார் கோயில் விழாவின் சுவாரஸ்யம்!

author img

By

Published : Aug 17, 2023, 4:55 PM IST

திருநெல்வேலி காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழாவில் பக்தர்கள் பொங்கலிட்டு வழிபட்டதுடன், உடலில் சங்கலியால் அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பாபநாசம் அருகே உள்ள காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழா
பாபநாசம் அருகே உள்ள காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழா

பாபநாசம் அருகே உள்ள காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழா

திருநெல்வேலி: பாபநாசம் அருகே உள்ள காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. பக்தர்கள் பொங்கலிட்டு வழிபட்டதுடன், உடலில் சங்கலியால் அடித்து நேர்த்திக்கடனும் செலுத்தினர். விழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பிரசித்திபெற்ற காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில் அமைந்து உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 6 ஆம் தேதி கால் நாட்டுடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

விழாவின் சிகர நிகழ்வான ஆடி அமாவாசை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மேலும் அமாவாசையை முன்னிட்டு கோயிலில் சொரிமுத்து அய்யனார் என்று அழைக்கப்படும் மகாலிங்க சுவாமி, சங்கிலி பூதத்தார் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதிகாலை முதலே பக்தர்கள் தாமிரபரணியில் நீராடி பொங்கலிட்டு வழிபடத் தொடங்கினர். காலை தொடங்கிய பொங்கலிடும் நிகழ்ச்சி மாலை வரை தொடர்ந்து நடைபெற்றது.

மதியம் சுமார் 12 மணிக்கு தீர்த்தவாரியும், 1 மணிக்கு சங்கிலி பூதத்தாருக்கு சிறப்பு படையலும் நடைபெற்றது. தளவாய் மாடசாமி மற்றும் பட்டவராயன் சுவாமி கோயிலில் பக்தர்கள் சங்கிலியால் தங்கள் மீது அடித்து வேண்டுதல்களை நிறைவேற்றினர். இது போன்று பட்டவராயன் சுவாமிக்கு செரும்பு வழங்கி நேர்த்திக் கடன் செய்தனர். இரவில் கோயில் வளாகத்தில் மூன்று இடங்களில் பூக்குழி திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

10 நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பூக்குழி இறங்கி சுவாமி தரிசனம் செய்தனர். இந்த கோயிலை சிங்கம்பட்டி ஜமீன் குடும்பத்தினர் நிர்வகித்து வந்தனர். ஜமீன் குடும்பத்தின் கடைசி வாரிசான ஜமீன் முருகேச தீர்த்தபதி அமாவாசை திருவிழாவின் போது இரவில் ராஜ அலங்காரத்தில் தர்பாரில் வீற்றிருந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

ஆகையினால் அவரது புகைப்படம் ராஜ அலங்காரத்துடன் தர்பாரில் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. விழாவினையொட்டி நெல்லை மட்டும் அல்லாது பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் சொரிமுத்து அய்யனார் கோயிலில் குவிந்துள்ளனர். மேலும் கோயிலைச் சுற்றிய வனப்பகுதியில் குடில் அமைத்து குடும்பம் குடும்பமாக தங்கியுள்ளனர்.

மேலும் கோயிலுக்கு செல்ல தனியார் வாகனங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் 200 அரசு பேருந்துகள் பக்தர்கள் வசதிக்காக இயக்கப்பட்டு வருகிறது. விழாவினையொட்டி கோயிலை சுற்றி வனத்துறை காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் இணைந்து சுமார் ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: Aadi Amavasai: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க தாமிரபரணியில் திரண்ட மக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.