ETV Bharat / state

கண்முன்னே உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் ஒருவர்... செய்வதறியாது தவிக்கும் மீட்புப்பணியினர்...

author img

By

Published : May 15, 2022, 4:46 PM IST

15 மணி நேரமாக கண்முன்னே ஊசலாடிக்கொண்டிருக்கும் இளைஞரின் உயிரை, மீட்க வழி தேடி செய்வதறியாது மீட்புப் பணியினர் தவித்துக்கொண்டுள்ளனர்.

Tirunelveli quarry accident  quarry accident  quarry accident update  நெல்லை கல்குவாரி விபத்து  கல்குவாரி விபத்து  கல்குவாரி விபத்து நிலவரம்  கல்குவாரி விபத்து கல நிலவரம்
கல்குவாரி விபத்து

திருநெல்வேலி: முன்னீர்பள்ளம் அருகே அடைமதிப்பான்குளம் கிராமத்தில் வெங்கடேஸ்வரா என்ற பெயரில் இயங்கி வரும் கல்குவாரியில், நேற்று (மே 14) நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் மிகப்பெரிய பாறை உருண்டு விழுந்ததில் விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் பள்ளத்தில் சிக்கிய ஹிட்டாச்சி ஆபரேட்டர்கள் முருகன், விஜய் ஆகியோர் மீட்புப் படையினரால் உயிருடன் இன்று (மே.15) மீட்கப்பட்டனர். மேலும் 4 பேரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சுமார் 300 அடி ஆழம் கொண்ட குவாரியில், வெடிகளால் தகர்க்கப்பட்ட கற்களை ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் லாரிகளில் ஏற்றும் பணிகள் நடைபெற்ற போது, நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் சரிந்து விழுந்ததால், அங்கு பணியில் இருந்த லாரி டிரைவர்கள் ராஜேந்திரன், செல்வகுமார், ஹிட்டாச்சி வாகன ஆபரேட்டர்கள் செல்வம், முருகன், விஜய் மற்றும் லாரி கிளீனர் முருகன் ஆகிய 6 பேர், கற்களின் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புப்படை வீரர்கள் மற்றும் காவல் துறையினர் விரைந்து வந்து மீட்புப் பணியை துரிதப்படுத்தினர். கடும் போராட்டத்திற்குப் பிறகு ஆறு பேரில் விஜய் மற்றும் முருகன் ஆகிய இருவர் மட்டும் இன்று (மே 15) காலை உயிருடன் மீட்டனர். இருப்பினும், சுற்றி உள்ள பாறைகளில் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டு வருவதால் கூடுதலாக வீரர்களை களமிறக்கி மீதமுள்ள நான்கு பேரை மீட்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

போதிய மீட்புக்கருவிகளும் இல்லாததால் தற்காலிகமாக மீட்புப்பணிகள் நிறுத்தப்பட்டன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் இருவரும் அங்கேயே முகாமிட்டு மீட்புப் பணிகளை பார்வையிட்டு வருகின்றனர். இந்த நிலையில் நான்கு பேரில் செல்வக்குமார் தவிர, மீதமுள்ள மூன்று பேரும் நேற்று இரவே இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

செல்வகுமார் கற்களுக்கு இடையே ஹிட்டாச்சி இயந்திரத்திற்குள் மாட்டிக்கொண்டு கடந்த 15 மணி நேரமாக தனது உயிரைக் காப்பாற்ற போராடி வருகிறார். அவர் கையை மேலே உயர்த்தி ’காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்’ என்று கூச்சலிடும் சத்தம் அங்கிருந்தவர்களை கண்கலங்கச் செய்துள்ளது.

அவரை மீட்க வேண்டும் என்றால் ஹிட்டாச்சி இயந்திரத்தை வெல்டிங் இயந்திரத்தைக்கொண்டு அறுத்து எடுத்த பிறகே மீட்க முடியும். ஆனால், அவர் மாட்டிக்கொண்ட இடத்தின் அருகே செல்வதற்கான வழிப்பாறைகள் சூழ்ந்து தடைபட்டுள்ளன. சுமார் 100 அடி உயரத்தில் இருந்து கயிறு கட்டி ஆட்களை இறக்கி தான் மீட்க வேண்டும்.

தொடர்ந்து பாறைகள் சரிவு ஏற்படுவதால் ஆட்களை கீழே இறக்கி மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் கண்முன்னே செல்வகுமாரின் உயிர் ஊசலாடிக் கொண்டிருப்பதை வேறு வழியில்லாமல் அனைவரும் வேடிக்கை பார்க்க வேண்டிய சூழல் நிலவி வருகிறது.

கல்குவாரி விபத்து; கண்முன்னே உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் ஒருவர்

அவரை மீட்க தேசிய பேரிடர் மீட்புக்குழு அரக்கோணத்தில் இருந்து விரைந்துள்ளது. இருப்பினும் அவர்கள் சாலை மார்க்கமாக வருவதால் பேரிடர் குழுவினர் இங்கு வந்து சேர இன்னும் பல மணி நேரம் ஆகும் எனத் தெரிகிறது. உயிருக்காகப் போராடி வரும் செல்வகுமாரை காப்பாற்ற முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: நெல்லை கல்குவாரி விபத்து: காயமுற்றவர்களுக்கு ஒரு லட்சம் நிவாரணம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.