ETV Bharat / state

பற்களைப் பிடுங்கிய ஏஎஸ்பி விவகாரம்: விசாரணை அதிகாரி கலெக்டருடன் திடீர் சந்திப்பு!

author img

By

Published : Mar 28, 2023, 6:45 PM IST

கைதிகளிடம் மிக கொடூரமாக நடந்து கொண்டதாக எழுந்த புகாரில் அம்பாசமுத்திரம் காவல் சரகத்தில் ஏஎஸ்பி பல்வீர் சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு, அவர் மீதான புகார் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Etv Bharat
Etv Bharat

பற்களைப் பிடுங்கிய ஏஎஸ்பி விவகாரம்: விசாரணை அதிகாரி கலெக்டருடன் திடீர் சந்திப்பு!

நெல்லை: அம்பாசமுத்திரம் காவல் சரகத்தில் ஏஎஸ்பி ஆக இருந்த போலீஸ் அதிகாரி பல்வீர் சிங் குற்ற வழக்குகளுக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்படும் கைதிகளிடம், மிக கொடூரமாக நடந்து கொண்டதாகப் புகார் எழுந்தது. குறிப்பாக கணவன் மனைவி சண்டை, சிசிடிவி கேமராவை உடைப்பது போன்ற சிறிய வழக்குகளுக்காக அழைத்து வரப்படும் கைதிகளின் பற்களை பிடுங்குவதாக பாதிக்கப்பட்ட நபர்கள் தரப்பில் குற்றச்சாட்டு கூறப்பட்டது.

மேலும் கைதிகளின் வாயில் ஜல்லிக் கற்களைப் போட்டு, கடிக்கச் சொல்லி சித்திரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் இது குறித்து கூறும் வீடியோ வைரலானது. இதனைத் தொடர்ந்து, ஏஎஸ்பி மீதான புகார் குறித்து விசாரிப்பதற்காக சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலமை விசாரணை அதிகாரியாக நியமித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

தொடர்ந்து ஏஎஸ்பி பல்வீர் சிங்கை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று இது குறித்த விசாரணையை சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் தொடங்கினார். மேலும் குறிப்பிட்ட தேதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை தரும்படி சார் ஆட்சியர் காவல்துறையிடம் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து நேற்று மாலை பாதிக்கப்பட்ட லட்சுமி சங்கர் என்ற நபர், சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அதே சமயம், லட்சுமி சங்கரை டிஎஸ்பி பரனாபாஸ் தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்போடு அழைத்து வந்தனர்.

இதனால் ஏஎஸ்பி பல்வீர்சிங்கை காப்பாற்றும் நோக்கத்தோடு காவல்துறை அதிகாரிகள் செயல்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் முறையான விசாரணை நடைபெறுமா என்று பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கேள்வி எழுந்தது. இதுபோன்ற சூழ்நிலையில் விசாரணை அதிகாரி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சட்டம் ஒழுங்கு கூட்டத்தில் பங்கேற்றார்.

தொடர்ந்து அவர் மற்றும் நெல்லை எஸ்.பி. சரவணன் ஆகியோர், நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனை அவரது அறையில் சந்தித்துப் பேசினர். அப்போது ஏஎஸ்பி மீதான புகார் குறித்த விசாரணையின் நிலை குறித்து ஆட்சியரிடம் சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.

மேலும் விசாரணை தொடர்பான சில ஆவணங்களையும் மாவட்ட ஆட்சியரிடம் காண்பித்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்ததாகத் தெரிகிறது. தொடர்ந்து சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் ஆலோசனை முடித்துக்கொண்டு, மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனுடன் அவரது காரில் சென்றார். இதன் மூலம் ஏஎஸ்பி பல்வீர் சிங் மீதான விசாரணை சூடுபிடிக்க தொடங்கியது.

நெல்லை மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு போலீஸ் கொடூர தாக்குதலால் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்நிலையில் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி கைதிகளை கொடுமைப்படுத்திய விவகாரம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: விசாரணைக்கு ஆஜரான கைதிகளுக்கு போலீசார் மிரட்டல்? - நெல்லை பல்(பல்)வீர் சிங் விவகாரத்தில் பரபரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.