ETV Bharat / state

விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்: ஆட்சியர் முறையாக செயல்படவில்லை என புகார்

author img

By

Published : Apr 1, 2023, 4:38 PM IST

திருநெல்வேலியில் காவல்துறையினரால் விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்டதாக எழுந்துள்ள புகாரில், மாவட்ட ஆட்சியர் முறையாக செயல்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Hendry deben
ஹென்றி டிபென்

திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியாக பணியாற்றியவர் பல்பீர் சிங். இவர் குற்றச்செயல்களில் ஈடுபடும் விசாரணை கைதிகளின் பற்களை கட்டிங் பிளேயரால் பிடுங்கியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட நபர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. இதைத் தொடர்ந்து காத்திருப்போர் பட்டியலுக்கு பல்வீர் சிங் மாற்றப்பட்ட நிலையில், உதவி ஆட்சியர் சபீர் தலைமையிலான குழுவை நியமித்து விசாரணை நடத்த நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் காவல் சித்திரவதைக்கு எதிரான மக்கள் கூட்டு இயக்கம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் சமூக அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குநர் ஹென்றி டிபென், "அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் நடைபெற்ற சம்பவத்தில் நெல்லை மாவட்ட ஆட்சியர் விசாரணை அதிகாரியாக இருக்க வேண்டும். அதற்கு மாற்றாக சேரன்மகாதேவி சார் ஆட்சியரை நியமித்தது தவறு. மாவட்ட கண்காணிப்பு குழுவின் தலைவரான மாவட்ட ஆட்சியர் அவரது பொறுப்புகளை உணர்ந்து செயல்பட்டிருக்க வேண்டும்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் அனைத்து பகுதிகளும் பதிவு செய்யப்படும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டிருக்க வேண்டும். அதனுடைய பதிவுகள் 18 மாதங்கள் பாதுகாப்பாக இருக்குமாறு செய்திருக்க வேண்டும். இதனை கண்காணிக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் உண்டு. எனவே அவர்களும் இதனை முறையாக கண்காணிக்கவில்லை.

அம்பாசமுத்திரம் காவல் கோட்டத்துக்கு உட்பட்ட காவல் நிலையங்களில், பற்கள் பிடுங்கியதாக கூறப்படும் நிகழ்வில் பாதிக்கப்பட்டோர் சேரன்மகாதேவி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் போது, அதனை முறையாக குற்றவியல் நீதிமன்ற நடுவர் கண்காணிக்கவில்லை. ஒருவரை நீதிமன்ற காவலுக்கு அழைத்துச் செல்லும் போது இலவச சட்ட உரிமை ஆணையத்தின் சார்பாக வழக்கறிஞர்கள் இருந்திருக்க வேண்டும். அதுவும் இங்கு முறையாக பின்பற்றப்படவில்லை.

மேலும் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறையின் உளவு பிரிவுகளும் சரியாக செயல்படாமல் இந்த தகவல்களை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் இருந்ததற்கு, அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இருக்கும் அனைத்து உளவு பிரிவு அதிகாரிகளையும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். பதவியில் இருப்பவர்களுக்கு தூபம் போடுவதற்காகவே அவர்கள் பணிகளை செய்து கொண்டிருக்கிறார்கள். மாவட்ட, மாநில அதிகாரிகளுக்கு இவர்கள் தவறான தகவல்களை கொடுத்து அரசை தவறான வழியில் திசை திருப்ப முயற்சிக்கிறார்கள்" என்றார்.

இதையும் படிங்க: பைக் டாக்சி ஓட்டுநரை சரமாரியாக அடித்த ஆட்டோ ஓட்டுநர்.. சென்னை கோயம்பேட்டில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.