ETV Bharat / state

நெல்லையில் தந்தையை கவனிக்காத மகன்கள் கைது: கலெக்டர் செய்த விசேஷ நடவடிக்கை!

author img

By

Published : Mar 27, 2023, 6:37 PM IST

தந்தையை கவனிக்காத மகன்களை, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் காவல்துறைக்கு பரிந்துரைத்தார். அதன்பேரில், போலீசார், இருவரையும் அதிரடியாக கைது செய்தனர்.

நெல்லையில், தந்தையை கவனிக்கத் தவறிய மகன்கள் கைதாகி 3 மாதம் சிறை
நெல்லையில், தந்தையை கவனிக்கத் தவறிய மகன்கள் கைதாகி 3 மாதம் சிறை

நெல்லை: திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம், குறிச்சி சொக்கநாத சாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர், சுந்தரம். இவருக்கு முத்துகிருஷ்ணன், முத்து மணிகண்டன், செண்பகநாதன், செந்தில் முருகன் ஆகிய நான்கு மகன்கள் உள்ளனர். சுந்தரம் தனியார் பீடி நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.

இந்த நிலையில் சுந்தரத்தின் நான்கு மகன்களும் அவரது தந்தையை கவனிக்காமல் விட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சுந்தரம், 'தமிழ்நாடு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டம் 2007'ன் கீழ் தனது மகன்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

அதன் பெயரில் அவரின் மனுவை விசாரித்த மாவட்ட ஆட்சியர், சுந்தரத்தின் மகன்கள் நான்கு பேரும் மாதந்தோறும் 15ஆம் தேதிக்குள் சுந்தரத்தின் வங்கிக்கணக்கில் 2500 ரூபாய் ஜீவனாம்ச தொகையாகச் செலுத்த உத்தரவிட்டுள்ளார். ஆனால், முத்துகிருஷ்ணன் மற்றும் முத்துமணிகண்டன் ஆகிய இருவரும் மட்டுமே மாதந்தோறும் ஆட்சியர் உத்தரவுப்படி தனது தந்தை சுந்தரத்திற்கு 2500 ரூபாய் ஜீவனாம்ச தொகையாக கொடுத்து வந்துள்ளனர்.

மீதமுள்ள செந்தில் முருகன் மற்றும் செண்பகநாதன் ஆகிய இருவரும் மாவட்ட ஆட்சியர் உத்தரவை மதிக்காமல் ஜீவனாம்சத் தொகை கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சுந்தரம் மாவட்ட ஆட்சியரிடம் மேல்முறையீடு செய்துள்ளார். எனவே, நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், அந்த மனு மீது கூடுதல் விசாரணை நடத்தியுள்ளார்.

மேலும் மாவட்ட ஆட்சியர், தனது உத்தரவை மதிக்காமல் தந்தைக்கு ஜீவனாம்ச தொகை வழங்க மறுத்த செந்தில் முருகன் மற்றும் செண்பகநாதன் ஆகிய இருவர் மீதும் தமிழ்நாடு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டத்தின்(2007) கீழ் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

அதன் பெயரில் தற்போது நெல்லை, மேலப்பாளையம் காவல் நிலைய போலீசார், தந்தைக்கு ஜீவனாம்சம் வழங்காத செந்தில் முருகன் மற்றும் செண்பகநாதன் இருவரையும் அதிரடியாக கைது செய்தனர். மேற்கண்ட சட்டப்படி இருவருக்கும் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபகாலமாக பெற்றோர்களைப் பிள்ளைகள் கவனிக்காததால், வயதான காலத்தில் பல பெற்றோர்கள் முதியோர் காப்பகங்களில் சேர்க்கப்படும் நிலை அதிகரித்து வருகிறது. பெரும்பாலான பெற்றோர்கள் தனது மகன்கள் என்ன கொடுமை செய்தாலும் பெற்ற கடமைக்காக அதை வெளியில் சொல்லாமல் இருப்பதைக் கண்டுள்ளோம்.

இதுபோன்ற சூழ்நிலையில் பெற்றோர்களைக் கவனிக்காத மகன்களைத் தண்டிக்கும் சட்டம் இருப்பதை அறிந்து, அந்தச் சட்டத்தின் கீழ் போராடிய நெல்லை சுந்தரத்தின் செயல் மகன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: கருவில் இருக்கும் குழந்தை பாலினம் அறிய வீட்டில் மெஷின்.. தருமபுரியில் மீண்டும் பகீர் சம்பவம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.