ETV Bharat / state

புரெவி புயல் முன்னெச்சரிக்கை : அணைகளை கண்காணிக்கக் குழு

author img

By

Published : Dec 1, 2020, 4:02 PM IST

திருநெல்வேலி : புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்திற்கு 57 பேரிடர் மீட்பு வீரர்கள் வந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

puravi-
puravi-

தமிழ்நாட்டில் கடந்த வாரம் உருவாகிய ’நிவர்’ புயலைத் தொடர்ந்து தற்போது வங்ககடலில் ’புரெவி’ புயல் உருவாகியுள்ளது. இந்தப் புயல் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளைக் கண்காணிக்கும் விதமாக சிறப்பு கண்காணிப்புக் குழுகள் அமைப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அதிதீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக மாவட்டத்தில் உள்ள ஆறு அணைகளையும் பாதுகாப்பு கருதி கண்காணிக்க சிறப்பு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் நகர்ப்புறங்களில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்குவதைக் கண்காணிக்கவும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் ஏழு கடலோரப் பகுதிகள் உள்ளன. அங்கு சிறப்பு உயரடுக்கு முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் மாவட்டம் முழுவதும் 87 தாழ்வான இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கு தண்ணீர் தேங்காதபடி நடவடிக்கை எடுக்கவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் பத்திரிகையாளர்கள் சந்திப்பு

மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்துக் குளங்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான அணைகளில் தண்ணீர் முழு கொள்ளளவை எட்டவில்லை. அதனால் தற்போதைக்கு பெரிய அளவில் ஆபத்து எதுவும் இல்லை.

தலா 20 பேர் கொண்ட இரண்டு தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். 17 பேர் கொண்ட மற்றொரு குழுவினரும் நெல்லைக்கு வர உள்ளனர். அதேபோல் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவில் இருந்து 60 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் என அனைத்துத் துறை அலுவலர்களும் எச்சரிக்கையுடன் உள்ளனர்.

திருநெல்வேலியைப் பொறுத்தவரை நாட்டுப் படகுகளில் சென்று தான் மீன் பிடிக்கின்றனர். அதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லவில்லை. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வழக்கமாகக் கடைபிடிக்கப்படும் பாதுகாப்பு வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அடுத்த மூன்று நாள்களுக்கு தாமிரபரணி ஆற்றில் யாரும் குளிக்கக்கூடாது. இதைக் கண்காணிக்க குழு அமைத்துள்ளோம். மொத்தம் ஏழு உயரடுக்கு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தாலுகாவிலும் ஒரு துணை ஆட்சியர் நியமிக்கப்பட்டு மீட்புப் பணியில் தயார் நிலையில் உள்ளோம்” என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.