ETV Bharat / state

ஐயப்பனுக்கு 2 மனைவிகளா? - தென்னாட்டு மக்களின் பங்குனி உத்திர கதை தெரியுமா?

author img

By

Published : Apr 3, 2023, 9:40 PM IST

Updated : Apr 4, 2023, 10:00 AM IST

குலதெய்வ வழிபாடு என்பது பலருக்கு மறந்து விட்ட நிலையில், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மூதாதையர் வாழ்ந்த இடங்களைத் தேடி வழிபடும் நாளாக பங்குனி உத்திர நாள் உள்ளது. மதுரைக்கு தெற்கே அரசு விடுமுறை விடும் அளவுக்கு பெருநாளாக மாறியுள்ளது, இந்த நாள்..

panguni festival special story
panguni festival special story

தென்னாட்டு மக்களின் பங்குனி உத்திர கதை தெரியுமா?

திருநெல்வேலி: தென் மாவட்ட மக்களுக்குண்டான தனித்துவமான வழிபாட்டு முறைகளில் ஒன்றுதான் பங்குனி உத்திரம் சாத்தன் வழிபாடு. சாஸ்தா, சாத்தன், சாத்தா என மக்கள் தங்களுக்குத் தெரிந்த பெயர்களைக் கூறினாலும் பொதுவாகவே முன்னோர் வழிபாட்டின் எச்சமாகவே தென் தமிழகத்தில் இது கருதப்படுகிறது. முன்னோர் வழிபாடு என்று கூறினாலும், ஒரே கோயிலில் பல்வேறு சாதி பிரிவினரும் வழிபாடு நடத்துவார்கள்.

வழிபாட்டின் மையத் தெய்வம் ஐயப்பன்: பெரும்பாலும் அனைத்து சாஸ்தா கோயில்களிலும் தர்ம சாஸ்தா என அழைக்கப்படும் ஐயப்பனைக் காணலாம், சபரிமலையில் உள்ள ஐயப்பன் பிரம்மச்சாரி கடவுளாக வணங்கப்பட்டாலும் பெரும்பாலும் குலதெய்வ கோயில்களில் ஐயப்பன் பூர்ணகலா, புஷ்கலா என இரு மனைவிகளோடு காணப்படுகிறார். இதற்கு பின்னணியிலும் பல கதைகள் உள்ளன.

"ஆழி" எனப்படும் பூத வடிவிலான பிரமாண்ட சிலையும் பெரும்பாலான கோயில்களில் காணக்கிடைக்கும். இது பல்வேறு இனக்குழுக்களுக்காக தனித்தனி பீடங்கள் வழிபாட்டு இடமாக இருக்கும். ஒரே சாதியினருக்கு இரு வேறு பீடங்களும், வழிபாட்டுத்தலங்களாக இருப்பதைக் காணமுடியும். ஒரே பீடத்தை வழிபடுபவர்கள் ''சொக்காரர்கள்'' என தென்மாவட்டங்களில் அழைக்கப்படும் பங்காளிகளாக இருப்பார்கள், இவர்களின் மூதாதையர்களைத் தேடிப்பார்த்தால் ஏதோ ஒரு தலைமுறையில் இவர்களின் முன்னோர்கள் அண்ணன், தம்பிகளாக இருந்திருப்பார்கள். இதனால் ஒரே பீடத்தை வழிபடும் குடும்பங்களில் திருமணம் நடைபெறுவது இல்லை.

azhi statue
ஆழி சிலை

90 வயதைத்தாண்டிய தென் மாவட்ட பெரியவர்களின் நினைவுகளில் அக்காலத்திய சாத்தன் வழிபாடு இன்றும் நீங்காத நினைவாக இருக்கும். சாத்தன் கோயில்கள் பெரும்பாலும் காட்டுப்பகுதிகளிலும் நதிக்கரைகளிலும் இருக்கும். இங்கிருந்து கிளம்பி பஞ்சம் பிழைக்க நகர்ப்புறங்களுக்கு நகர்ந்தவர்கள் தான் சாத்தனை ஆண்டுதோறும் தேடிச்சென்று வழிபாடு நடத்துகின்றனர். சொரிமுத்து ஐயனார், அருஞ்சுனை காத்த ஐயனார், கற்குவேல் ஐயனார், நெல்லாலே பொங்கலிட்ட நெட்டுவான் கோட்டை சாஸ்தா என ஒவ்வொரு சாஸ்தாவின் கோயிலுக்குப் பின்னாலும் அதற்கேயுரிய வரலாற்றுக் கதைகள் உள்ளன.

ஐயப்பன், ஐயனார், பேச்சி, சொரிமுத்து ஐயன், சுடலை மாடன் , இசக்கி, புலையன், கொம்பு மாடன், பன்றி மாடன், காளி என இந்த குலதெய்வப்பட்டியலில் முருகனும் இடம்பெறுவதைப் பல கோயில்களில் காண முடியும். ஆண்டுதோறும் பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் நடைபெறும் பங்குனி உத்திரத்திருவிழாவில் குல தெய்வங்களை தேடிச்சென்று இராத்தங்கி வழிபட்டு திரும்புவார்கள்.

தெய்வங்களுக்கான படையலில் கொழுக்கட்டை, சர்க்கரை பொங்கல், போன்ற சைவப்படையலோடு சில கோயில்களில் வழிபாட்டு முறைகளுக்கேற்ப ஆடு, கோழிகளை பலியிட்டும் படையலிடுவார்கள். வரலாற்று எழுத்தாளரும் பொருநை நாகரிகம் குறித்த ஆராய்ச்சியாளருமான முத்தாலங்குறிச்சி காமராசுவை ஈடிவி பாரத் நெல்லை செய்தியாளர் மணிகண்டன் அணுகிய போது, ''சங்க இலக்கியங்களிலேயே சாஸ்தா வழிபாடு இருந்ததாக குறிப்பிடுகிறார். 2ஆயிரம் ஆண்டுகளாக வழிபாடு நடக்கும் சாஸ்தா கோயில்களும் தமிழ்நாட்டில் உண்டு" என்கிறார் .

எல்லோருக்கும் குலதெய்வம் சொரிமுத்து ஐயன்: இது குறித்து மேலும் விளக்கிய அவர்,"குலதெய்வ வழிபாடு இரண்டு வகை. ஒன்று அய்யனார் வழிபாடு. மற்றொன்று முன்னோர்கள் வழிபாடு. குலதெய்வம் தெரியாதவர்களுக்கு பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோயில் தான் மூலஸ்தனம். அதுபோன்ற சிறப்பு வாய்ந்த கோயில்கள் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ளன. தென் தமிழ்நாட்டு குலதெய்வங்களின் பெயர்கள் அழகுத் தமிழில் இருக்கும்

அறிவியல் ரீதியாக நம் நாட்டின் நாகரிகம் பொருநை நதி எனும் தாமிரபரணிக்கரையில் இருந்து தான் தோன்றியதாக வரலாறு. தமிழ் ஓலைச்சுவடிகளைத் தேடி தமிழ்த்தாத்தா உ.வே.சுவாமிநாதய்யர் தென்தமிழகம் வந்தபோது பொருநை நதிக்கரையில் தான் அதிக ஓலைச்சுவடிகள் கிடைத்துள்ளன. ஆக இது தமிழ் நாகரிகம் வளர்ந்த இடம். அதனால் தான் இங்கு குலதெய்வ வழிபாடு நடக்கிறது. முதலில் இயற்கையினை வணங்கிய மக்கள் பின்னர் முன்னோர்களை வணங்கினர். வட பகுதிகளிலும் இந்த வழிபாடு உண்டு. ஆனால், பெயர் உருப்பெயர்ந்துள்ளது'' என்றார்.

பாளையங்கோட்டை தூய சவேரியர் கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் துறை தலைவர் ஜோசப் அந்தோணி ராஜிடம் பேசினோம். இது குறித்து ஆவலுடன் விளக்கிய அவர், "தமிழர் பண்பாட்டில் எல்லோரும் இன்று நாம் பேசும் திராவிடக் கொள்கை அடிப்படையில் இறந்தோரை வழிபடுவது அடிப்படையான விஷயம். ஒரு சின்ன இனக்குழுக்களாக மக்கள் வாழ்ந்தபோது அதில் வாழ்ந்து இறந்த முன்னோர்களை வழிபட்டனர். அடுத்த கட்டமாக அவர்களால் பயன்பெற்ற பிற குழுக்களும் வழிபடும்போது இந்த வழிபாடு அடுத்த கட்டத்துக்கு நகர்கிறது. அடுத்த குழுவினர் வழிபடும்போது, அது குலதெய்வ வழிபாடாக கணக்கிடப்படுகிறது.

அதனால் தான் ஒரே குல தெய்வத்தைப் பல இனக்குழுவைச் சேர்ந்த மக்கள் வழிபடுவதைப் பார்க்க முடிகிறது. நாங்கள் இதுகுறித்து பல ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறோம். எப்போது மனிதன் குழுக்களாக வாழ்ந்தானோ, அப்போதே குழுத் தலைவன் இறக்கும்போது அவரை வழிபட்டு அவன் நம்மோடவே இருக்கிறான். நமக்கு அவர் உதவி செய்கிறார் என்பதற்கான மனவலிமையை கொடுப்பதற்கும் இந்த குலதெய்வ வழிபாடு பயன்படுகிறது.

முஸ்லீம், கிறிஸ்தவத்திலும் முன்னோர் வழிபாடு: சமயம் உருவாகும்போது அது எல்லாவற்றையும் தனதாக்கும் முயற்சியை எடுத்து வரும். உதாரணமாக வெளிநாட்டில் இருந்து வந்த சமயங்கள் கூட, நிறைய நமக்கான வழிபாட்டு முறைகளை உள்வாங்கி தான் வந்தன. சமயம் எப்போதும் ஒற்றைப்படுத்தும் நோக்காக எடுத்துக்கொள்ளும். எனவே இதற்கு விரிவான ஆய்வு தேவை. சமயம் என்பது பின்னாடி வந்தது. இந்து சமயம் மட்டுமல்ல, கிறிஸ்தவ சமயம், இஸ்லாமிய சமயத்திலும் குலதெய்வ வழிபாடு இருக்கிறது.

இஸ்லாமியத்தில் தர்காவுக்கும் மசூதிக்கும் வேறுபாடு உள்ளது. தர்கா என்பது இறந்தவர்கள் சமாதியை வைத்திருந்து அது பின்னாளில் வழிபாட்டுக்குரியதாக உருவெடுக்கும். இதே போன்று கிறிஸ்தவத்தில், முதலில் வெறும் கல்லறையாக இருக்கும். பின்னர் அவர்கள் குடும்பம் விரிவடையும்போதுபோது அது மாறும்" எனக் குறிப்பிட்டார்.

இதுகுறித்து குலதெய்வ வழிபாட்டில் ஈடுபடும் நெல்லை சிந்துப்பூந்துறையைச் சேர்ந்த சிவசுப்ரமணி கூறும்போது, "பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோயில் தான் எங்களுக்கு குலதெய்வம். நாங்கள் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழாவுக்கு குடும்பத்தோடு அங்கு சென்று இரண்டு நாள் தங்கியிருந்து வழிபடுவோம். ஒருவன் குலத்தை காக்க வேண்டும் என்றால், அது குலதெய்வத்தால் தான் முடியும். எனவே குலதெய்வ வழிபாடு அனைவரும் செய்ய வேண்டும்'' என்றார்

இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திரத் திருவிழா வரும் ஏப்.5ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தென் மாவட்டங்களில் அரசு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் பங்குனி உத்திரம் மற்றும் குலதெய்வ வழிபாடு குறித்த, ஆய்வாளர்களின் இந்த கருத்து மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

இதையும் படிங்க: கோவையின் ரூட்டு தலைவி.. பேருந்து ஓட்டும் ஷர்மிளா!

Last Updated : Apr 4, 2023, 10:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.