ETV Bharat / state

கோவையின் ரூட்டு தலைவி.. பேருந்து ஓட்டும் ஷர்மிளா!

author img

By

Published : Mar 31, 2023, 1:42 PM IST

Updated : Apr 4, 2023, 4:13 PM IST

கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநராகியிருக்கிறார் இருபத்து நான்கே வயதான ஷர்மிளா.. இவர் குறித்த ஒரு சிறப்பு செய்தித் தொகுப்பை காணலாம்.

Etv Bharat
Etv Bharat

கோவையின் ரூட்டு தலைவி
கோவையின் ரூட்டு தலைவி

கோயம்புத்தூர்: கோவை காந்திபுரம், சோமனூர் ரூட்டின் புதிய தலைவி ஷர்மிளாதான். பேருந்தை அனாயசமாக வளைத்து ஓட்டும் ஷர்மிளா ஆணுக்குப் பெண் எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார். பேருந்தை கடந்து வருவோரும், போவோரும் ஒரு நிமிடம் நின்று ஷர்மிளாவுக்கு வாழ்த்து சொல்லிவிட்டுத்தான் நகர்கின்றனர். காந்திபுரம் பேருந்து நிலையத்தின் புதிய ஸ்டார் ஆகிவிட்ட ஷர்மிளாவுடன் செல்பி எடுக்கவும் கூட்டம் அலைமோதுகிறது.

இது தொடர்பாக ஷர்மிளாவை நேரில் சந்தித்தார் ஈடிவி பாரத் செய்தியாளர் ஸ்ரீனிசுப்பிரமணியன், உற்சாகமாக பேசத்துவங்கிய அவர், ஆட்டோ ஓட்டுநரான தனது தந்தை மகேஷ் தான் தனக்கு ஊக்கம் அளித்தார் என கூறுகிறார். தனது தந்தை ஓட்டும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆட்டோவை ஓட்டிப்பார்த்த ஷர்மிளா, தந்தைக்கு துணையாகவும் ஆட்டோ ஓட்டியிருக்கிறார்.

பேருந்து ஓட்டுநராக வேண்டும் என்பதை தன்னுடைய கனவாக கொண்ட ஷர்மிளா, கனரக வாகனங்கள் ஓட்டுவதற்கான முறையான பயிற்சி பெற்று உரிமமும் பெற்றுள்ளார். ஆண்கள் மட்டுமே அதிகம் இருக்கும் கனரக வாகன ஓட்டுநர் பணியில் தனக்கான முத்திரையைப் பதிக்க வேண்டும் என்கிறார், ஷர்மிளா.

''டிரைவர் என்றாலே சமூகத்தில் பலரும் முகச் சுழிப்புடன் தான் பார்ப்பார்கள், ஆனால் எனக்கு எந்த வேலையை எல்லோரும் குறைவாக பார்த்தார்களோ அதன் மீதுதான் ஆர்வம் அதிகரித்தது'' என்கிறார் முகம் மிளிர. ''ஏழாவது வகுப்பு படிக்கும் போதிலிருந்தே எனக்கு டிரைவிங் மீது ஆர்வம் வந்துவிட்டது. வீட்டிலும், உனக்கு எதில் விருப்பமோ அதை செய் எனக் கூறிவிட்டாதால் கனவுக்கு கிரீன் சிக்னல் கிடைத்தது.

இப்போதான் பேருந்தை கையில் எடுத்திருக்கிறேன், ஆனால் 2019 முதலே கோவையில் ஆட்டோ ஓட்டி வந்தேன்'' என்கிறார் ஷர்மிளா. நான் கனரக வாகன உரிமம் பெறுவதற்கும் என் அப்பா தான் முழு காரணம் எனக் கூறும் ஷர்மிளா, ''நீ சாதிக்கனும்னு முடிவு பண்ணிட்டனா சாதிச்சிரு; கோயம்புத்தூர்ல என் பொண்ணு தான் முதல் பெண் பஸ் டிரைவர்னு நான் பெருமையா சொல்லிக்குவேன்’’ என கூறினார் என்கிறார்.

"ஆயிரம் பேர் ஆயிரம் விதமா பேசினாலும், இந்த காக்கி சட்டையை போட்டதுக்குப் பிறகு முடியாததுனு எதுவுமே இல்லை"னு காலரை தூக்கிவிட்டு சொல்கிறார், ஷர்மிளா. பேருந்து பயிற்சிக்கு செல்ல ஆரம்பித்தபோது நகைப்புடன் ஏளனமாக பார்த்தவர்கள் எல்லாம் இன்று வியப்பாக பார்க்கிறார்கள். ஓட்டுநர் பயிற்சி முடித்ததும் அரசு வேலைக்காக காத்திருக்காமல், விவி டிரான்ஸ்போர்ட் என்ற தனியார் நிறுவனம் அளித்த வாய்ப்பை பயன்படுத்தி களத்தில் இறங்கிவிட்டார், ஷர்மிளா.

ஷர்மிளா இயக்கும் பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவி ஒருவர் கூறுகையில், ''வழக்கமாக ஆண்கள் மட்டுமே பேருந்து இயக்குவது பார்த்துள்ளேன் தற்போது முதல் முதலின் இளம் பெண் ஓட்டுவது ஆச்சரியம் அளிக்கிறது'' என்றார். அதே வேளையில் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக சர்மிளா திகழ்கிறார். மேலும் ஆண் ஓட்டுனர்களிடம் பேச தயக்கம் இருக்கும்; பெண் ஓட்டுனரிடம் எளிதில் அணுகி தங்களுடைய நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ளலாம் எனத் தெரிவித்தார். இப்போது கோவையின் டாக் ஆப் தி டவுன் ஆகியிருக்கும் ஷர்மிளாவின் கனவுகள் ஈடேற வாழ்த்துகிறது, ஈடிவி பாரத் தமிழ்நாடு.

இதையும் படிங்க: குரூப் 4 தேர்வில் ஒரே சென்டரில் 2000 பேர் தேர்ச்சி சர்ச்சை - தென்காசி ஆகாஷ் அகாடமி விளக்கம் என்ன?

Last Updated :Apr 4, 2023, 4:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.