ETV Bharat / state

தொழிலதிபர் சாவில் திருப்பம்: கள்ளக்காதலியே கொலை செய்தது அம்பலம்

author img

By

Published : Nov 26, 2022, 12:19 PM IST

குளத்தில் தொழிலதிபர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக, தகாத உறவில் இருந்த பெண் ஆண் நண்பருடன் இணைந்து தொழிலதிபரை கழுத்தை நெரித்து கொலை செய்தது அம்பலமாகி உள்ளது.

நெல்லை தொழிலதிபர் கொலை
நெல்லை தொழிலதிபர் கொலை

பேட்டை (நெல்லை): நெல்லை மாவட்டம் பேட்டை அபிஷேகப்பட்டியைச் சேர்ந்தவர் ஜேக்கப் ஆனந்தராஜ். கட்டுமான தொழில் அதிபரான இவர், கடந்த 22-ஆம் தேதி டவுண் பகுதியில் உள்ள பள்ளியில் இருந்து தனது பேத்தியை அழைத்துச் வருவதாக கூறிச் சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.

மறுநாள் ஜேக்கப் ஆனந்தராஜ் கடத்தப்பட்டதாக தொலைபேசியில் அழைத்த நபர் 10 லட்ச ரூபாய் கேட்டு அவரது குடும்பத்தினரை மிரட்டி உள்ளார். இதையடுத்து ஜேக்கப் ஆனந்தராஜின் மகள் அளித்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், பேட்டை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் உள்ள குளத்தில் உடல் ஊதிய நிலையில் ஜேக்கப் ஆனந்தராஜ் சடலமாக மீட்கப்பட்டார். கடத்தப்பட்டதாக கண்டறியப்பட்ட ஜேக்கப் ஆனந்தராஜ் சடலமாக கண்டெடுக்கப்பட்டதை அடுத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

வழக்கு குறித்து விசாரித்து வந்த போலீசார் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை தெரிவித்தனர். போலீசார் தரப்பு கூறுகையில், ஜேக்கப் ஆனந்தராஜ் நரசிங்கநல்லூரை சேர்ந்த தேவி என்பவருடன் தகாத உறவில் இருந்ததாகவும், அதேசமயம் தேவி, தனது கணவர் மற்றும் ஜேக்கப் ஆனந்தராஜ் ஆகியோரின் கண்களில் மண்ணை தூவி விட்டு தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த பிரின்ஸ் என்பவருடன் ரகசிய உறவு வைத்து இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

ரகசிய உறவுகள் குறித்து அறிந்த தேவியின் கணவர் பிரிந்து செல்லவே பிரின்ஸ் உடன் நரசிங்கநல்லூர் வீட்டில் தேவி குடும்பம் நடத்தி வந்ததாகவும், பிரின்ஸ் இல்லாத சமயத்தில் ஜேக்கப் ஆனந்தராஜுடனும் தேவி உறவு வைத்திருந்ததாகவும் தெரிவித்தனர்.

இந்நிலையில், சம்பவத்தன்று சர்ப்ரைசாக தேவி வீட்டிற்கு சென்ற ஜேக்கப் ஆனந்தராஜ் அங்கு பிரின்ஸ் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் ஜேக்கப் ஆனந்த்ராஜ் தன்னை வலுக்கட்டாயமாக ஆசைக்கு அழைப்பதாக தேவி கூறியதாகவும் அதனால் பிரின்ஸ் மற்றும் ஆனந்தராஜ் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இருதரப்பும் தேவிக்காக கடுமையாக மோதிக்கொண்ட நிலையில் ஒரு கட்டத்தில் தேவியும், பிரின்ஸ்சும் சேர்ந்து வீட்டில் கிடந்த பிளாஸ்டிக் கயிறால் ஜேக்கப் ஆனந்தராஜை கழுத்தை நெறித்து கொலை செய்ததாக போலீசார் கூறினர். பின்னர் சடலத்தை தூக்கி தேவியின் ஸ்கூட்டி பைக்கின் முன் பகுதியில் வைத்து கட்டி நள்ளிரவில் ஆள்நடமாட்டம் இல்லாத நேரமாக பார்த்து குளத்தில் வீசி சென்றது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

மேலும் போலீசாரை திசை திருப்ப மதுரைக்கு சென்ற பிரின்ஸ் அங்கிருந்தபடி ஜேக்கப் ஆனந்த்ராஜை கடத்தியதாக அவரது மகளிடம் மிரட்டியதாக போலீசார் தெரிவித்தனர். கொலை வழக்காக மாற்றி பதிவு செய்த போலீசார், பிரின்ஸ் மற்றும் தேவி ஆகியோரை கையும் களவுமாக கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தகாத உறவில் ஈடுபட்ட தொழிலதிபரை ஆண் நண்பர் உதவியுடன் பெண் கழுத்தை நெரித்து கொலை செய்து நாடகமாடிய சம்பவம் நெல்லை சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: பொருநை இலக்கியத் திருவிழா : நெல்லை நேருஜி கலையரங்கில் சிறப்பு ஏற்பாடு...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.