ETV Bharat / state

ரூ.100 கோடி மதிப்பிலான பத்திரப்பதிவு மோசடி - நயினார் பாலாஜியின் பத்திரப்பதிவு ரத்து

author img

By

Published : Jul 20, 2023, 11:57 AM IST

100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ளதாக நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி மீது அறப்போர் இயக்கம் பரபரப்பு குற்றம் சாட்டிய நிலையில், மோசடியாக பதிவு செய்துள்ளதாகக் கூறி அந்த பத்திரப்பதிவை மண்டல துணை பத்திரப்பதிவு துறை தலைவர் அதிரடியாக ரத்து செய்துள்ளார்.

ரூ100 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடி செய்த நயினார் பாலாஜி
ரூ100 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடி செய்த நயினார் பாலாஜி

திருநெல்வேலி: மதுரையைச் சேர்ந்த இளையராஜா என்பவர் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிலத்தை மோசடி செய்ததாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இதனிடையே பாஜக சட்டமன்ற குழுத் தலைவரும், திருநெல்வேலி தொகுதி எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரனின் மகன் ஸ்ரீ நயினார் பாலாஜியுடன் இணைந்து இளையராஜா மீண்டும் ஒரு மிகப்பெரிய பத்திரப்பதிவு மோசடி ஒன்றை செய்யும் வேலையில் களமிறங்கியதாக புகார் எழுந்து உள்ளது.

அதாவது விருகம்பாக்கத்தில் 1.3 ஏக்கர் நிலம் ஏற்கனவே பல சர்ச்சைக்குள் சிக்கி உள்ளது. பலர் இது தங்களுடையது என்று அதற்கு உரிமை கோரினர். 2006ஆம் ஆண்டு சரஸ்வதி என்பவருடைய பெயரில் பட்டா உள்ளது என்றும் அவர் விருகம்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சுந்தரமகாலிங்கம், வசந்தா என்றவருக்கு விற்று உள்ளார். பின்னர் சுந்தரமகாலிங்கம், வசந்தா ஆகியவர்களின் பெயரில் இந்த நிலத்திற்கான பட்டா மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இதன் பின்னர் 2008ஆம் ஆண்டு கௌரி அம்மாள் மற்றும் சிலர் இதே நிலத்தில் பாகப்பிரிவினை பத்திரத்தை பதிவு செய்து உள்ளார்கள். இதை எதிர்த்து சுந்தரமகாலிங்கம், வசந்தா சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தற்போது வரை இந்த வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது.

இந்த 1.3 ஏக்கர் நிலத்தை மோசடியாக பதிய திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் சம்பந்தமே இல்லாத மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிலத்தை அபகரித்த இளையராஜாவும், பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனின் மகன் ஸ்ரீ நயினார் பாலாஜி ஆகிய இருவரும் இணைந்து ஒரு மோசடி ஒப்பந்தத்தை கடந்த 2022ஆம் வருடம் ஜூலை 23ஆம் பதிவு செய்து உள்ளனர்.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள உதயத்தூர் கிராமத்தில் இருக்கும் ஒரு சில சொத்துக்களையும், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள சொத்துக்களையும் சேர்த்து போலியான முறையில் பத்திரப்பதிவை அப்போது ராதாபுரம் சார்பதிவாளராக இருந்த சரவண மாரியப்பன் பதிவு செய்துள்ளார். சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், இந்த நிலத்தை கையகப்படுத்த உள்ளது என்பதையும் கணக்கில் அவர் கொள்ளவில்லை.

மேலும், இந்த ஒப்பந்தத்தில் நயினார் பாலாஜி 46 கோடி ரூபாய்க்கு இந்த நிலத்தை வாங்க சம்மதம் என்று முன் பணமாக 2.50 கோடி ரூபாய் கொடுத்து உள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிலத்தை மோசடி பதிவு செய்த இளையராஜா, நான்தான் இந்த நிலத்திற்கு பொது அதிகாரம் பெற்ற ஏஜெண்ட் என்றும், இந்த நிலம் குலாப் தாஸ் நாராயண் தாஸ் என்பவரின் பேரன் ஜெயந்திர ஓராவுக்கு சொந்தமானது என்றும் கூறி இந்த 1.3 ஏக்கர் நிலத்தை திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜி ஆகிய இருவரும் இணைந்து மோசடியாக ஒப்பந்த பத்திரப்பதிவு செய்து உள்ளதாகத் தெரிகிறது.

இதனையடுத்து அறப்போர் இயக்கம் இந்த விஷயத்தை வெளிக் கொண்டு வந்தது. இதனையடுத்து நெல்லை பத்திரிகையாளர் மன்றத்தில் கடந்த வருடம் நயினார் நாகேந்திரனின் மகன் ஸ்ரீ நயினார் பாலாஜி இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது எந்த வித முறைகேட்டிலும் தான் ஈடுபட்டு பத்திரப்பதிவு செய்யவில்லை என்றும், தன் மீது அவதூறு தெரிவித்த அறப்போர் இயக்கத்தின் மீது வழக்கு தொடர போகிறேன் என்றும் தெரிவித்தார்.

முக்கியமாக இதில் குலாப்தாஸ் நாராயணதாஸ் 1946இல் மகாராஷ்டிராவில் இறந்ததாக ஒரு இறப்புச் சான்றிதழை இளையராஜா வைத்துள்ளார். ஆனால், மற்றொரு புறம் இவர் 1944இல் சென்னையில் இறந்ததாக வேறு ஒரு இறப்புச் சான்றிதழும் சென்னை மாநகராட்சி இணையதளத்தில் உள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து ஸ்ரீ நயினார் பாலாஜி மற்றும் இளையராஜா ஆகியோர் மோசடி செய்தது தெளிவாகி உள்ளது.

எனவேதான் தற்போது அந்த நிலத்துக்கான பத்திரப்பதிவை மண்டல பத்திரப்பதிவுத்துறை துணைத் தலைவர் அதிரடியாக ரத்து செய்துள்ளார். நயினார் நாகேந்திரனின் மகன் ஸ்ரீ நயினார் பாலாஜி பாரதிய ஜனதா கட்சியில் மாநில இளைஞரணி துணை தலைவராக இருந்து வருகிறார். எனவே, இந்த மோசடியில் ஈடுபட்ட இளையராஜா, நயினார் பாலாஜி மற்றும் அதிகாரிகள் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க அறப்போர் இயக்கம் கோரிக்கை வைத்துள்ளது.

இதையும் படிங்க: கோயில் சொத்துகள் மீட்கப்பட வேண்டும்: இந்து அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.