ETV Bharat / state

நெல்லை மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி - மாநகராட்சி ஆணையர் அளித்த விளக்கம் என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 12, 2024, 11:40 AM IST

Updated : Jan 12, 2024, 11:51 AM IST

Tirunelveli Corporation: திருநெல்வேலி மாநகராட்சியில் மேயருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு மற்றும் விவாதம் தொடர்பான கூட்டத்தில் யாரும் கலந்து கொள்ளாத நிலையில், தீர்மானம் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

meeting began on the no confidence motion against Tirunelveli Mayor
நெல்லை மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சியில் மேயர் சரவணனுக்கும், திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், மேயர் சரவணனுக்கு எதிராக திமுக மற்றும் கூட்டணி கவுன்சிலர்கள் 44 பேர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.

இந்த தீர்மானத்தின் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு இன்று (ஜன.12) நடைபெறும் என ஏற்கனவே மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் அறிவித்திருந்தார். முன்னதாக, வாக்கெடுப்பில் திமுக கவுன்சிலர்கள் கலந்து கொண்டால், ஆளுங்கட்சிக்கு பெரும் அவப்பெயர் ஏற்படும் என்பதால், தீர்மானத்தைக் கொண்டு வந்த கவுன்சிலர்களை திமுக தலைமை சமாதானப்படுத்தியது.

குறிப்பாக, அமைச்சர் தங்கம் தென்னரசு திருநெல்வேலிக்கு வருகை தந்து கவுன்சிலர்களை சரி கட்டினார். மேலும், கட்சியின் தலைமையை மீறி கூட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்பிருக்கும் என்பதால், முன்னெச்சரிக்கையாக திமுக கவுன்சிலர்கள் அனைவரையும் இன்பச் சுற்றுலா அழைத்துச் சென்றதாக கூறப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு மற்றும் விவாதம் நடைபெறும் என மாநகராட்சி அறிவித்தது. அதன்படி, தற்போது மேயருக்கு எதிராக ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு கூட்டம் தொடங்கியது.

மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் கூட்டம் நடைபெறும் அரங்கிற்குச் சென்றார். அதேநேரம், தற்போது வரை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள ஒரு கவுன்சிலர்கள் கூட இங்கு வரவில்லை. நெல்லை மாநகராட்சியைப் பொறுத்தவரை, மொத்தம் 55 வார்டுகள் உள்ள நிலையில், இதில் 45 வார்டுகளில் திமுகவைச் சேர்ந்த உறுப்பினர்களும், மீதமுள்ள 10 வார்டுகளில் அதிமுக, காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் உள்ளனர்.

இருப்பினும், எதிர்கட்சியான அதிமுக கவுன்சிலர்கள் 4 பேரில், ஒருவர் கூட தற்போது வரை வாக்கெடுப்பிற்கு வரவில்லை. இவ்வாறு நடைபெற்ற தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பில் ஒரு கவுன்சிலர்கள் கூட கலந்து கொள்ளாததால், தீர்மானம் கைவிடப்பட்டு விட்டதாக மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் அறிவித்துள்ளார். முன்னதாக, பாதுகாப்பிற்காக நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: விஜயகாந்தின் சமூக வலைத்தளப் பக்கத்தின் பெயர் மாற்றம்!

Last Updated : Jan 12, 2024, 11:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.