ETV Bharat / state

"திராவிடத்தை யாராலும் அழிக்க முடியாது" - வைகோ சபதம்!

author img

By

Published : Jul 31, 2023, 1:29 PM IST

தமிழ்நாட்டில் திமுக, திராவிட மாடல் ஆட்சியை சிறப்பாக நடத்தி வருகிறது. திராவிடத்தை யாராலும் அழிக்க முடியாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

MDMK vaiko
வைகோ

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேச்சு

திருநெல்வேலி: பேரறிஞர் அண்ணாவின் 115 ஆவது பிறந்தநாள் திறந்தவெளி மாநாடு மதுரையில் செப்டம்பர் 15 ஆம் தேதி நடக்க உள்ளது. இது தொடர்பாக நெல்லை பாளையங்கோட்டையில் மதிமுக மண்டல அளவிலான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் கே எம் ஏ நிஜாம் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில், "தமிழ்நாட்டிற்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய ஸ்டெர்லைட், கூடங்குளம், முல்லைப் பெரியாறு பிரச்சினை ஆகியவற்றை எதிர்த்து போராடி நீதிமன்ற வரை சென்று வெற்றி பெற்ற இயக்கம் மதிமுக. திமுக தலைமையில் தான் தமிழகத்தில் ஆட்சி இருக்க வேண்டும். திராவிட மாடல் ஆட்சி நீடிக்க வேண்டும். ஏனென்றால் இன்று சனாதன இந்தியாவை உருவாக்குவோம் என்று ஆளுநர் ரவி அகந்தையோடு துணிச்சலோடு பேசி வருகிறார்.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்றவர்கள் பேசும் இடங்கள் எல்லாம் தமிழ் குறித்து பேசி மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள். ஆபத்து நம்மை நெருங்கி வருகிறது. திராவிட மாடலுக்கு எதிராக ஆரிய மாடல் ஆட்சியை கொண்டுவர தமிழ்நாடு ஆளுநர் மத்திய அரசின் ஏஜெண்டாக எடுபிடியாக செயல்பட்டு வருகிறார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, நடேசனார், அண்ணா வழியில் கலைஞர் ஆகியோர் தமிழர்களையும் திராவிடக் கொள்கைகளையும் பாதுகாத்தனர்.

ஆனால் இன்று திராவிட கொள்கையை அழிக்க நினைக்கிறார்கள். திராவிடம் என்பது வரலாறு, திராவிடம் என்பது கொள்கை அது ஒரு தத்துவம், திராவிடம் என்பது தமிழர்கள் சரித்திரம், இதை யாராலும் அழிக்க முடியாது. இதனை பாதுகாக்கவே மதிமுக திமுகவுடன் கை கோர்த்து உள்ளது. தமிழ்நாட்டில் திமுக திராவிட மாடல் ஆட்சியை சிறப்பாக நடத்தி வருகிறது. இது போன்ற ஆட்சியை நடத்த முடியவில்லை என்று இந்தியாவில் மற்ற மாநிலங்கள் துடிதுடித்து வருகின்றன.

மணிப்பூரில் குக்கி இன பெண்கள் பாலியல் ரீதியாக வன்புணர்வு செய்யப்பட்டு உள்ளனர். ஆனால் இதுவரை இது குறித்து மத்திய அரசு வாய் திறக்கவில்லை. இரண்டு இனத்திற்கு இடையே கலவரத்தை மூட்டி விட்டு வடக்கு பகுதியில் பாஜக காலூன்ற துடிக்கிறது. இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் பாதுகாப்பாக உள்ளது. இதற்கு திராவிட மாடல் ஆட்சியும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் காரணம்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டிற்கும் - மலேசியாவிற்கும் வேளாண்மை மூலம் உறவு பாலம்: துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.