ETV Bharat / state

வேலையில்லாததால் இளைஞர்கள் கஞ்சா விற்கின்றனர் - கி.வீரமணி

author img

By

Published : Feb 25, 2023, 12:07 PM IST

Updated : Feb 25, 2023, 12:58 PM IST

வேலையில்லாததால் தான் இளைஞர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாகத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

வேலையில்லாததால் இளைஞர்கள் கஞ்சா விற்கின்றனர் - கி.வீரமணி

திருநெல்வேலி: திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் சமூக பாதுகாப்பு மற்றும் திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயண பொதுக்கூட்டம் தமிழ்நாடு முழுவதும் நாளொன்றிற்கு 2 மாவட்டங்கள் வீதம் நடத்தபட்டு வருகிறது. கடந்த 3-ஆம் தேதி ஈரோட்டில் தொடங்கிய தொடர்பயணம் வரும் 10-ஆம் தேதி கடலூரில் நிறைவு பெறுகிறது. இதன் ஒருபகுதியாக இன்று (பிப்.25) நெல்லை தச்சநல்லூர் சாவடி திடலில் நடந்த கூட்டத்தில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி பேசினார்.

அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டின் ஆட்சியை போல் இந்தியாவில் வேறெங்கும் ஆட்சி நடக்க வில்லை என அனைத்து மாநில மக்களும் பொறாமை கொள்கின்றனர். திமுக ஆட்சியை நேரடியாக எதிர்க்க முடியாதவர்கள் மறைமுகமாக பல வியூகங்களை உருவாக்குவதாக குற்றம் சாட்டினார். மனிதனுக்கு சுதந்திரம் மட்டும் முக்கியமல்ல; சமத்தவமும் சகோதரத்துவமும் மிக முக்கியமானது என்றும் அதைத்தான் தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி என்பதாகவும் கூறினார். சாதி என்ற வர்ணாஸ்ரம அமைப்பை வைத்துக்கொண்டு சிலர் செயல்படுவதாகவும், காதலர்கள் தினத்திற்கு போட்டியாக பசுமாட்டை அரவணைக்க செல்லுபவர்கள் மனிதனை அரவணைக்க மறுக்கின்றனர்” எனச் சாடினார்.

'ஒரே ரேசன் அட்டை, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே தேர்தல், ஒரே நாடு' என சொல்லும் பாஜக மோடி ஆட்சியில் சொல்வது இந்திய பன்முகத்தன்மைக்கு எதிரானது. அனைத்திலும் 'ஒரே' என சொல்லும் அவர்கள் 'ஒரே ஜாதி' என சொல்ல மறுப்பது ஏன்? என்று கேள்வியெழுப்பினார். நாட்டில் சுதந்திரம் இருந்தால் மட்டும் போதாது, சமத்துவம் வரவேண்டும் எனவும் மக்களை மனித நேயத்துடன் நடத்தவேண்டும் என்பதும் அனைவருக்கும் அனைத்தும் என்பதே 'திராவிடமாடல்' ஆட்சி தத்துவம் என்று தெரிவித்தார்.

இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும் மாநிலம் தமிழ்நாடு தான் என்றும் 50% பெண்களுக்கான இடஒதுக்கீட்டை கேட்காமலே கொடுத்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்றும் புகழாரம் சூட்டினார். அந்த 50% இட ஒதுக்கீட்டை மசோதா நாடாளுமன்றத்தில் இயற்றவிடாமல் தடுத்ததாகவும், 90 ஆண்டுகளுக்கு முன்னாள் பெரியாரால் திராவிட இயக்கத்தில் போடபட்ட தீர்மானங்களே இன்றைய சட்டங்களாக இயற்றப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

'பெண்களை பெற்றோம் கஷ்டபடுகிறோம்' என்ற நிலையை மாற்ற உயர்கல்வி படிக்கும் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 திராவிட மாடல் ஆட்சியால் வழங்கப்பட்டதாகவும், வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் கடுமையான நிதி நெருக்கடியிலும் குழந்தைக்கு 'காலை சிற்றுண்டி திட்டம்' செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் அதிகமான கடனை வாங்கி கட்ட வேண்டிய வட்டியையும் அதிகமாக்கி எல்லா துறைகளிலும் தற்போது போராட வேண்டிய நிலை வருகிறது என்றார்.

1 லட்சத்து 163 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடப்பதில் தமிழ்நாடு தான் முதலிடம் என்றும் தமிழ்நாடு குழந்தைகள் முன்னுக்கு வருவதை தடுக்கவே 'நீட் தேர்வு' (NEET Exam) கொண்டு வரப்பட்டதாகவும், புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் 'குல கல்வி திட்டம்' கொண்டு வரப்படுதாகவும் குற்றம்சாட்டினார். தமிழ்நாடு ஆளுநர் அவரது வேலையைவிட்டு சனாதன பிரச்சாரத்தை செய்து வருவதாகவும்; ஆன்லைன் சூதாட்டம் என்பது மகாபாரத கலாச்சாரம் என்றும் சாடினார். விஞ்ஞானம் வளர்ந்த நிலையிலும் சூதாட்டம் என்ற கொடுமை உள்ளதாகவும் இந்த ஆன்லைன் சூதாட்டம் என்ற கொடுமையை தடுக்கவே, பல போராட்டம் நடத்தியதன் விளைவாக அதிமுக ஆட்சியில் அவசர கதியில் சட்டம் நிறைவேற்றபட்டதாகவும் கூறினார்.

தற்போது திமுக ஆட்சியில் குழு அமைத்து சட்டம் இயற்றியும் அதற்கு ஆளுநர் ஒப்புதல் ஆளுநர் தரவில்லை. இதற்கு காரணம், திராவிடமாடல் ஆட்சி மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுக்கக்கூடாது எனப் போட்டி அரசாங்கம் நடத்தப்படுவதாக குற்றம்சாட்டினார். தமிழ்நாட்டில் என்ன செய்தாலும் காலூன்ற முடியாது என பாஜக குறுக்கு வழியில் ஆளுநரை வைத்து வேலை செய்வதாகவும், அனைத்திற்கும் ஆளுநர் தாராளமாக கருத்து சொல்லட்டும் அண்ணாமலை போல், பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவர் அருகே அமர்ந்துகொண்டு கருத்து சொல்லட்டும் என்று தெரிவித்தார்.

காரல்மார்க்ஸ், டார்வின் ஆகியோர் பற்றி தெரியாமல் ஆளுநர் பேசுவதாகவும்; பல இடையூறுகள் செய்தால், ஆத்திரபட்டு கலவரம் செய்வார்கள் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என ஆட்சியை கவிழ்கலாம் என நினைக்கிறார்கள் என்றும் விமர்சனம் செய்தார்.

மேலும் பேசிய அவர், மக்கள் என்ற பாறையால் கட்டபட்டதே திராவிடமாடல் ஆட்சியே தவிர, அது மணல் மீது கட்டப்பட்ட கோட்டையல்ல என்றும் வளர்ச்சி வளர்ச்சி என வாயால் பேசியவர்கள் மத்தியில் செயலால் அனைத்தையும் செய்துகாட்டுவது தான் திராவிட மாடல் ஆட்சி என்றும் கூறினார். 'சேது சமுத்திர திட்டம்' நிறைவேற்றப்பட்டால் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கும் பெயர் வந்துவிடும் என்ற காரணத்தினாலேயே, 'ராமர் பாலம்' என்ற வார்த்தையை முன்வைத்து சுப்பிரமணிய சுவாமி போன்றோர் நீதிமன்றத்தில் தடை ஆணையை பெற்றதாகவும் தெரிவித்தார்.

'சேது சமுத்திர திட்டம் தடைபட்டதால் தான், வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வேலை இல்லா இளைஞர்களை வைத்து கஞ்சா கடத்தல் அதிகரித்துள்ளது' என்று குற்றம்சாட்டினார். ராமர் சேதுவை தேசிய அடையாளமாக அறிவிக்க முடியுமா? என பாஜக உறுப்பினர் கேட்டதற்கு ராமர் பாலத்திற்கு ஆதாரம் இல்லை என பாராளுமன்றத்தில் அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துவிட்டதாகவும், சேது சமுத்திரத்தில் அமைக்கும் கால்வாய், 'தமிழன் கால்வாய்' ஆக அமையும் அந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் இதனால், நாட்டின் பொருளாதாரம் உயர்ந்து நாட்டிற்கு பாதுகாப்பாக அமையும் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கழிவறையில் பெண்களை வீடியோ எடுத்த ஊழியர் கைது.. சென்னையில் பகீர் சம்பவம்!

Last Updated : Feb 25, 2023, 12:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.