ETV Bharat / state

பல்வீர் சிங் விவகாரத்தில் சம்மன் கிடைக்கப்பெறாதவர்களும் விசாரணைக்கு ஆஜராகலாம்!

author img

By

Published : Mar 30, 2023, 9:11 PM IST

நெல்லை மாவட்டத்தில் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் மேலும் ஒரு திருப்பமாக சம்மன் கிடைக்க பெறாத நபர்களும் ஏப்ரல் பத்தாம் தேதி வரை விசாரணைக்கு ஆஜராகலாம் என மாவட்ட சார் ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

திருநெல்வேலி
பல்வீர் சிங் விவகாரத்தில் சம்மன் கிடைக்க பெறாத நபர்களும் விசாரணைக்கு ஆஜராகலாம்

பல்வீர் சிங் விவகாரத்தில் சம்மன் கிடைக்க பெறாத நபர்களும் விசாரணைக்கு ஆஜராகலாம்

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதிகளில் காவல் நிலையங்களுக்கு விசாரணைக்கு அழைத்து வரப்படும் கைதிகளின் பல்லை உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங், கொடூரமாக பிடுங்குவதாக எழுந்தப் புகாரில் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் விசாரணை நடத்தி வருகிறார். ஏஎஸ்பி பல்வீர் சிங் கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட நபர்களின் பல்லை பிடுங்கியதாக நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பினர் குற்றம்சாட்டியிருந்தனர்.

அதேசமயம் விசாரணை அதிகாரியான சார் ஆட்சியர் குறிப்பிட்ட சில நபர்களுக்கு மட்டுமே சம்மன் அனுப்பியதாகத் தெரிகிறது. அதன்படி ஏற்கனவே சம்மன் கிடைக்கப்பெற்ற லட்சுமி சங்கர், சூர்யா, சுபாஷ் ஆகிய மூன்று பேர் நேற்று வரை விசாரணைக்கு ஆஜராகி இருந்தனர். இதில் சுபாஷ் மட்டுமே போலீஸ் அதிகாரி, தனது பல்லை பிடுங்கிதாக வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார். அதே சமயம் சூர்யா அது போன்ற சம்பவமே நடைபெறவில்லை என்றும்; கீழே விழுந்ததில் தான் பல் உடைந்தது என்றும் தெரிவித்தார்.

அதேபோல் சுபாஷ் உடன் வந்திருந்த செல்லப்பா, மாரியப்பன், ரூபன், இசக்கிமுத்து மற்றொரு மாரியப்பன், வேதநாராயணன் ஆகிய ஆறு பேருக்கும் சம்மன் அனுப்பாத காரணத்தால் சார் ஆட்சியர், அவர்களிடம் விசாரணை நடத்தாமல் திருப்பி அனுப்பினார். இதனால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் இந்த விவகாரத்தில் போலீஸ் அதிகாரி பல்வீர் சிங்கை காப்பாற்றும் நோக்கத்திலேயே பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சம்மன் அனுப்புவதில் சார் ஆட்சியர் தாமதம் ஏற்படுத்துவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து சம்மன் அனுப்பாத நபர்களும் விசாரணைக்கு ஆஜராகலாம் என்று இன்று சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் தெரிவித்திருந்தார். மேலும் இதுதொடர்பாக நோட்டீஸ் ஒட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அலுவலகத்தின் வாசலில் வைக்கப்பட்டுள்ள தகவல் பலகையில் இது தொடர்பான நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

இதில் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் குற்றவழக்கில் தொடர்புடைய நபர்களிடம் காவல்துறை துன்புறுத்தியதாக சமூக வலைதளங்களில் வரப்பட்ட புகாரின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில், சார் ஆட்சியர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி, சம்பவத்தில் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது சாட்சியம் தெரிவிக்க விரும்பினால் வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதிக்குள் அலுவலக நாட்களில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை சார் ஆட்சியர் முன்பு ஆஜராகி எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பல் பிடுங்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பல நபர்கள் காவல்துறையால் மிரட்டப்படுவதாகவும்; எனவே உண்மையாக பாதிக்கப்பட்ட நபர்களை விசாரணையில் சேர்த்துக் கொள்ளாமல் சார் ஆட்சியர் பாரபட்சம் காட்டுவதாகவும் புகார் எழுந்த நிலையில், தற்போது சம்மன் கிடைக்கப்பெறாவிட்டாலும் பாதிக்கப்பட்ட நபர்கள் நேரடியாக வந்து விசாரணைக்கு ஆஜராகலாம் என சார் ஆட்சியர் உத்தரவிட்டிருப்பது இந்த சம்பவத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து மேலும் பல நபர்கள் சார் ஆட்சியரிடம் விசாரணைக்கு ஆஜராகலாம் எனத் தெரிகிறது.

இதையும் படிங்க: அங்காடி ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் விழுப்புரத்தில் முழு கடையடைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.