ETV Bharat / state

வாக்கு எண்ணும் மையத்தில் காவல் பார்வையாளர்கள் திடீர் ஆய்வு!

author img

By

Published : Mar 21, 2021, 2:06 PM IST

நெல்லையில் வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் பொது மற்றும் காவல் பார்வையாளர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

காவல் பார்வையாளர்கள் திடீர் ஆய்வு
காவல் பார்வையாளர்கள் திடீர் ஆய்வு

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலானது வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளதால் அதற்கான வேட்பு மனுக்கள் பரிசீலனை நேற்று (மார்ச் 20) நடைபெற்றது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி ஆகிய ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 189 பேர் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்தனர். இதில் 82 நபர்களின் மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளது.

குறிப்பாக திருநெல்வேலி தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வேட்பாளராக களமிறக்கப்பட்ட பால்கண்ணனின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. அவருக்கு முன்மொழிந்த 10 நபர்களில் 2 நபர்களின் பெயர்கள் குளறுபடி இருப்பதால் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இருப்பினும் உள்நோக்கம் இருப்பதாக கூறி, வேட்பாளர் பால்கண்ணன், அவரது ஆதரவாளர்கள் நேற்று (மார்ச் 20) இரவு வரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கூடி நின்றதால் பரபரப்பு நிலவியது.

ஆய்வு பணியில் காவல் பார்வையாளர்கள்

இதுபோன்ற சூழலில் நெல்லை வாக்கு எண்ணும் மையத்தினை இன்று (மார்ச் 21) தேர்தல் பொது, காவல் பார்வையாளர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதாவது, 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் எண்ணப்படும் வாக்குகள் திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து எண்ணப்பட உள்ளன. ஏற்கனவே மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான விஷ்ணு, இந்த வாக்கு எண்ணும் மையத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதைத் தொடர்ந்து இன்று (மார்ச் 21) திருநெல்வேலி, பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி பொது பார்வையாளர் டாக்டர் சுப்ரதா குப்தா, அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி பொது பார்வையாளர் சுரேந்திரன் நாராயண் பாண்டே, நாங்குநேரி தொகுதி பார்வையாளர் நூன்சாவாரத்திருமலை நாயக், ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதி பொது பார்வையாளர் அலோகேஷ் பிரசாத் மற்றும் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் காவல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள சுதன் சுகுமார் ஐபிஎஸ் ஆகிய அலுவலர்கள், நெல்லை அரசு பொறியியல் மருத்துவக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்கு எண்ணும் பணிகளுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.

அப்போது மாவட்ட ஆட்சியர் விஷ்ணு முன்னேற்பாடுகள் குறித்து அலுவலர்களுக்கு விளக்கம் அளித்தார். தற்போது அங்கு பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. அந்த பணிகளை விரைந்து முடிப்பதுடன், பிரச்னைகள் எதுவும் ஏற்படாத வகையில் தடுப்புகளை நுணுக்கமாக அமைக்கவும் பார்வையாளர்கள் ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்.

மேலும் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் மொத்தம் 13 லட்சத்து 53 ஆயிரத்து 559 வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். இவர்களுக்காக மாவட்டம் முழுதும் 1924 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ’தமிழ்நாடு மாணவர்களுக்கு மாநிலத்திற்கு உள்ளே நீட் மையங்கள்’ - சு.வெங்கடேசன் கோரிக்கை ஏற்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.