ETV Bharat / state

"2026-ல் தமிழகத்தின் தேடலே"... காமராஜர் பிறந்தநாள் போஸ்டரில் நடிகர் விஜய்!

author img

By

Published : Jul 11, 2023, 11:10 AM IST

நெல்லையில் ‘2026இல் தமிழகத்தின் தேடலே’ என நடிகர் விஜய்யை குறிப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள காமராஜரின் 121வது பிறந்தநாள் போஸ்டர்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

kamarajar birthday poster
காமராஜர் பிறந்தநாள் போஸ்டரில் நடிகர் விஜய்

காமராஜர் பிறந்தநாள் போஸ்டரில் நடிகர் விஜய்

திருநெல்வேலி: வருகிற ஜூலை 15ஆம் தேதி மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 121வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் காமராஜர் பிறந்தநாளை பிரமாண்டமான முறையில் கொண்டாட ஏற்பாடுகள் ஆராவாரமாக நடந்து வருகிறது.

அதனையொட்டி நெல்லை மாநகர் பகுதியில் விஜய் மக்கள் இயக்கம் பாளையங்கோட்டை பகுதி இளைஞரணி சார்பில், ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் அதிர வைக்கும் அரசியல் வசனங்கள் இடம் பெற்றிருக்கிறது.

அதாவது அதில், "1954இல் தமிழகம் கண்டெடுத்த தங்கம் அய்யா காமராசர் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம். 2026இல் தமிழகத்தின் தேடல்" என நடிகர் விஜய்யை குறிப்பிட்டுள்ள போஸ்டர் மிக பிரமாண்டமான முறையில் நெல்லை வண்ணாரப்பேட்டை, முருகன் குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் ஓட்டப்பட்டுள்ளது.

ஏற்கனவே நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்ற தொகுதி வாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பரிசு அளிக்கும் விழாவில் பெரியார், அம்பேத்கர் மற்றும் காமராஜர் போன்ற தலைவர்களைப் பற்றி படியுங்கள் என நடிகர் விஜய் மாணவர்கள் மத்தியில் தெரிவித்தார்.

அதேபோல் ஏற்கனவே அம்பேத்கர் பிறந்தநாளை விஜய் மக்கள் இயக்கம் சார்பில், அதன் நிர்வாகிகள் மற்றும் விஜய் ரசிகர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது அம்பேத்கரின் பிறந்த தினத்தை ஒட்டி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களிலும் அரசியல் வசனங்கள் இடம் பெற்றிருந்தது. அடுத்தடுத்து தலைவர்களுடன் ஒப்பிட்டு விஜய்யை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருவது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக தமிழ்நாட்டில் திருமணம், காதுகுத்து உள்ளிட்ட வீட்டு விஷேசங்களில் நடிகர்களின் போட்டோக்கள் இடம் பெறுவது வழக்கம். ஆனால், ஒரு அரசியல் தலைவர் பிறந்தநாள் போஸ்டரில் நடிகர் போட்டோ வருவது இதுவே முதல் முறை எனவும், தற்போது பிறந்தநாள் காமராஜருக்கா அல்லது நடிகர் விஜய்க்கா என்று கூட தெரியாத அளவிற்கு அந்த போஸ்டரில் விஜய் போட்டோ இடம் பெற்றுள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கல்வி விருது விழாவில் உங்கள் ஓட்டை பணத்துக்காக வீணடிக்க வேண்டாமென நடிகர் விஜய் பேசியிருந்தார். அதை வைத்து அவர் அரசியலுக்கு வந்து விட்டதாக சில அரசியல் பிரமுகர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், நெல்லை மாநகரில் இது போன்ற அரசியல் வசனங்களுடன் நடிகர் விஜய்யை குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மீண்டும் ராஜ்யசபா எம்பி பதவிக்கு வேட்புமனுத் தாக்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.