ETV Bharat / state

புகார் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறை: ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒருவர் தீக்குளிக்க முயற்சி!

author img

By

Published : Sep 26, 2020, 6:44 AM IST

திருநெல்வேலி: நில ஆக்கிரமிப்பு புகார் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறையினால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஒருவர் தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.

ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒருவர் தீக்குளிக்க முயற்சி
ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒருவர் தீக்குளிக்க முயற்சி

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக விக்கிரமசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரது குடும்பத்தினர் பெண்கள், குழந்தைகள் உள்பட 20க்கும் மேற்பட்டோர் மனு அளிப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். அப்போது திடீரென கணேசன் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைக் கவனித்த காவல் துறை அவரை தடுத்து நிறுத்தினர்.

பின்னர் கணேசனிடம் விசாரித்தபோது, “விக்கிரமசிங்கபுரம் பகுதியில் எனது தந்தை சுப்பிரமணியம் பெயரில் நான்கு ஏக்கர் நிலம் இருக்கிறது. அதில் இரண்டு ஏக்கர் நிலத்தை கடந்த 1984ஆம் ஆண்டு காளத்தியா பிள்ளை என்பவருக்கு கிரையம் கொடுத்துள்ளார். மீதமுள்ள இரண்டு ஏக்கர் நிலத்தில் நாங்கள் கல்லறை தோட்டம் ஆகவும் விவசாயத்திற்கும் பராமரித்து வருகிறோம். நிலத்தில் 1967 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை நிலத்தின் உரிமையாளரான எனது தந்தை உள்பட 7 பேர் சமாதி உள்ளது.

மாதம்தோறும் சமாதியில் வழிபட்டு வருகிறோம். இந்த சூழ்நிலையில் எங்கள் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ண காந்த தேவர் குடும்பத்தைச் சேர்ந்த சிவராஜ் பாண்டியன், இந்த நிலத்தை ஆக்கிரமித்து மரங்களை வெட்டுவது, அத்துமீறி கல்லறையை சேதப்படுத்துதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தார்கள். தட்டி கேட்டபோது சாதி ரீதியாக எங்களை தரக்குறைவாகப் பேசினார்கள். இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் நீதிமன்றம் செல்லும்படி அறிவுரை வழங்கினார்.

நீதிமன்றத்தில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது. ஆனால், மீண்டும் சிவராஜ் பாண்டியன் நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றதால் இது குறித்து அம்பாசமுத்திரம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரான்சிஸ்சிடம் முறையிட்டோம். ஆனால், அவர் எங்களுக்கு ஆதரவளிக்காமல் சிவராஜ் பாண்டியனுக்கு ஆதரவாக செயல்பட்டு, எங்களை மிரட்டினார். நீதிமன்ற தீர்ப்பு வழங்கிய நகலை கொடுத்தபோது, அதை துணை காவல் கண்காணிப்பாளர் குப்பையில் தூக்கி வீசி விட்டார்.

மேலும், என்னை யாராவது எதிர்த்து பேசினால் சாத்தான்குளம் சம்பவம் போலவே உங்களுக்கு நேரிடும் என்று மிரட்டி விட்டுச் சென்றார். தற்போது, இரண்டு வாரங்களாக எங்கள் நிலத்திலுள்ள சமாதியை இடிக்கும்படி துணை காவல் கண்காணிப்பாளர் எங்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார். எனவே சிவராஜ் பாண்டியனிடமிருந்தும் துணை காவல் கண்காணிப்பாளரிடமிருந்தும் எங்கள் முன்னோர் சமாதியையும் நிலத்தையும் மீட்டுத் தர வேண்டும்” என்று கூறினார். இதையடுத்து பாளையங்கோட்டை காவல் துறையினர், கணேசனை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: திருநங்கைகள் மூலம் குற்றச்செயல்களை தடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.