ETV Bharat / state

குஷ்பூவால் மனஉளைச்சல் : நெல்லைவாசிகள் பரபரப்பு புகார்

author img

By

Published : Jun 22, 2023, 3:13 PM IST

குஷ்பூ சமூக வலைத்தளங்களில் பெண்களை இழிவாக பேசியதாகக் கூறி, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திமுக பிரமுகர் புகார் அளித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

குஷ்பூவால் மனஉளைச்சல் : நெல்லைவாசிகள் பரபரப்பு புகார்

திருநெல்வேலி: தமிழக திரைத்துறையில் 1990 கால கட்டங்களில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவரான குஷ்பூ அரசியலில் கால் பதித்து பல்வேறு பதவிகளை அலங்கரித்து வருகிறார். திமுக, காங்கிரஸ் என கட்சி மாறிய குஷ்பூ தற்போது பாஜகவில் உள்ளார். மேலும் அவர் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார்.

சினிமா, அரசியல் என இரண்டிலும் சர்ச்சைக்கு பெயர் பெற்றவர், குஷ்பூ. இது போன்ற நிலையில் சமீபத்தில் குஷ்பூவின் டிவிட்டர் பக்கத்தில் ஜெயசங்கர் என்ற நபர், ''உங்கள் கணவர் சுந்தர் சியின் பணத்தைக் காப்பாற்றிக்கொள்ள தானே... நீங்கள் பாஜகவில் சேர்ந்துள்ளீர்கள்'' என கேட்டுள்ளார்.

அதைப் பார்த்து ஆத்திரமடைந்த குஷ்பூ அந்த நபருக்கு ட்விட்டரில் பதில் கொடுத்தார். அந்தப் பதில் பதிவில் குஷ்பூ, ''செருப்பாலே அடிப்பேன். உங்கள் வியாபாரத்தை காப்பாற்றிக்கொள்ள உங்கள் வீட்டுப் பெண்களை இப்படி பயன்படுத்துவீர்களா?'' என ஆவேசமுடன் பதில் கொடுத்தார். சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம் அனல் பறந்தது.

இதற்கிடையில் நடிகை குஷ்பூ குறித்து ஆபாசமாகப் பேசியதாக, திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை திமுக தலைமை, கட்சி பொறுப்பிலிருந்து நிரந்தரமாக நீக்கியதோடு, காவல்துறையும் அவரை சமீபத்தில் கைது செய்தது. எனவே, தமிழக அரசியலில் அடுத்தடுத்து பேசப்படும் பொருளாக குஷ்பூ விவகாரம் இருந்து வருகிறது.

இதுபோன்ற சூழ்நிலையில் சமூக வலைதளத்தில் பெண்களை இழிவுபடுத்திப் பேசிய குஷ்பூ மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பிரமுகரும் வழக்கறிஞருமான ராஜூ புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரில், "நான் ட்விட்டர் சமூக வலைதளத்தை பயன்படுத்தியபோது ஜெய்சங்கர் ஜெய்நாத் என்பவருக்கு பதில் அளிப்பதற்காக உங்கள் தொழிலை காப்பாற்றிக் கொள்ள நீங்கள் உங்கள் வீட்டுப் பெண்களை பயன்படுத்துவீர்களா? என்று அருவருக்கத்தக்க வகையில் குஷ்பூ பெண்களை சமூக வலைதளத்தில் இழிவுபடுத்தியுள்ளார்.

இதைப் பார்த்த எங்கள் வீட்டு பெண்கள் தாங்க முடியாத மன வேதனையும், அவமானமும் அடைந்துள்ளனர். எனவே, சமூக வலைத்தளங்களில் பெண்களை இழிவாகப் பேசியதற்கு குஷ்பூ மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி கைதைத் தொடர்ந்து தமிழகத்தில் சமூக வலைதளங்களில் அநாகரிகமாக நடந்து கொள்ளும் பாஜக பிரமுகர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இது போன்ற சூழ்நிலையில் பாஜகவைச் சேர்ந்த குஷ்பூ மீது திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக நிர்வாகி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 'அன்று ரஜினி, இன்று விஜய் பற்றி கேட்கிறீர்கள், இது தமிழ்நாட்டின் சாபக்கேடு' - திருமாவளவன் விமர்சனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.