ETV Bharat / state

ஆட்சியர் அலுவலகத்தில் கைக்குழந்தையுடன் இளம்பெண் தீக்குளிக்க முயற்சி

author img

By

Published : Sep 14, 2020, 5:00 PM IST

தேனி: கணவரின் மரணத்தில் உரிய விசாரணை நடத்தவில்லை எனக்கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயற்சி செய்த இளம்பெண்ணை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

Theni women sucide attempt
Theni women sucide attempt

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் இன்று (செப்.14) புகார் மனு அளிக்கவந்தனர். இதற்காக வருகைதருபவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவல் துறையினர் சோதனை செய்து உள்ளே செல்வதற்கு அனுமதிக்கின்றனர்.

இந்நிலையில் ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், கைக்குழந்தையுடன் வந்திருந்த இளம்பெண் ஒருவரை சோதனை செய்ததில். தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்திருப்பதை கண்டுபிடித்து அவரைத் தடுத்து நிறுத்தினர்.

பின்னர் தேனி நகர் காவல் ஆய்வாளர் விக்டோரியா லூர்து மேரி நடத்திய முதற்கட்ட விசாரணையில், இவர் தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவரது மனைவி ஜெயமணி (20) என்பது தெரியவந்தது.

தற்போது இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது. கூலி வேலை செய்துவந்த தனது கணவர் ராமசாமியை கடந்த சில மாதங்களுக்கு முன் சூதாட்டத்தில் ஏற்பட்ட தகராறில் அவருடன் இருந்தவர்கள் சிலர் அடித்ததால் இறந்துவிட்டார்.

இது தொடர்பாக காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாருக்கு உரிய விசாரணை நடத்தவில்லை எனத் தெரிவித்தார். மேலும் கைக்குழந்தையுடன் சிரமத்தில் வாழ்ந்துவரும் தனக்கு நிவாரண உதவிகள் ஏதும் கிடைக்காததால் விரக்தியில் இன்று (செப்.14) ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்ததாகத் தெரிவித்தார்.

இதனையடுத்து தற்கொலை முயற்சி செய்த இளம்பெண் மேல் விசாரணைக்காக தேனி காவல் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார். ஆட்சியர் அலுவலகத்தில் கைக்குழந்தையுடன் இளம்பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.