ETV Bharat / state

''வாராரு வாராரு அழகர் வாராரு..'' - வைகை அணையில் இருந்து நீர் திறப்பு!

author img

By

Published : Apr 30, 2023, 3:35 PM IST

மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்விற்காக, தேனி வைகை அணையில் இருந்து விநாடிக்கு 750 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

‘வாராரு வாராரு அழகர் வாராரு..’ - வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
‘வாராரு வாராரு அழகர் வாராரு..’ - வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

தேனி: உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பார்க்கக் கூடிய கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு, வருகிற மே 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மேலும், மதுரை மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரைக்கு வர இருப்பதால், காவல் துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்விற்காக, இன்று (ஏப்ரல் 30) முதல் ஆறு நாட்களுக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. இதற்காக மொத்தம் 6 நாட்களில் 216 மில்லியன் கன அடி தண்ணீர், தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து திறக்கப்படுகிறது.

முன்னதாக இன்று மாலை முதல் திறக்கப்பட இருந்த வைகை தண்ணீர், வைகை ஆற்றுப் பகுதிகளில் மழை பெய்துள்ளதால் நீர் வேகமாகச் செல்லும் வகையில் முன்பாகவே வைகை பொதுப்பணித் துறையினர் மூலம் திறக்கப்பட்டுள்ளது. அணையில் உள்ள ஏழு சிறிய மதகுகள் வழியாக திறக்கப்பட்டுள்ள தண்ணீர், 3 நாட்களில் மதுரை வைகை ஆற்றைச் சென்றடையும் என்று பொதுப்பணித் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், தற்போதைய நிலவரப்படி மொத்தம் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 53.97 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 14 கன அடி ஆக உள்ளது. அதேபோல், அணையில் நீர் இருப்பு 2 ஆயிரத்து 512 மில்லியன் கன அடியாக உள்ளது.

இதையும் படிங்க: chithirai thiruvizha: சித்திரைத் திருவிழா 7-ம் நாளில் யாளி வாகனத்தில் காட்சியளித்த மீனாட்சியம்மன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.