ETV Bharat / state

வனத்துறையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் - தேனி விவசாயி உயிரிழந்த சம்பவத்தில் புகார்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 8, 2023, 1:45 PM IST

Updated : Dec 8, 2023, 5:12 PM IST

Theni farmer shot dead: தேனியில் வனத்துறையினரால் சுடப்பட்டு விவசாயி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அவரது உறவினர்கள் மாவட்ட கண்காணிப்பாளரிடம் நேற்று (டிச.07) புகார் அளித்துள்ளனர்.

theni-forest-shoot-issue-daughter-request-sp
theni-forest-shoot-issue-daughter-request-sp

வழக்கறிஞர் சங்கிலி பேட்டி

தேனி: கம்பம் அருகே குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சேர்ந்த விவசாயி ஈஸ்வரனை, கடந்த அக்டோபர் 28ஆம் தேதி மேகமலை வனப்பகுதிக்கு உட்பட்ட வண்ணாத்திபாறை வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து விலங்குகளை வேட்டையாட முயன்றதாகக் கூறி, வனத்துறையினர் பிடிக்க முயன்றனர்.

அப்போது வன அலுவலர்களைக் கத்தியைக் காட்டி மிரட்டியதாகக் கூறி, வனத்துறையினர் ஈஸ்வரனைத் துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே ஈஸ்வரன் உயிரிழந்தார். இச்சம்பவம் தேனி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து உயிரிழந்த ஈஸ்வரனின் குடும்பத்தினர், வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் கோரிக்கை விடுத்து மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், நேற்றைய முன்தினம் (டிச.06) வழங்கிய உத்தரவில், வனத்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் இருப்பதாக கூறியுள்ளது.

இதனையடுத்து ஈஸ்வரனின் மகள் வினோதினி மற்றும் அவரது உறவினர்கள், நீதிமன்ற உத்தரவினை சுட்டிக்காட்டி, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், வனத்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் நேற்று (டிச.07) புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து வினோதினி தரப்பு வழக்கறிஞர் சங்கிலி கூறுகையில், “வனத்துறையினரால் சுடப்பட்டு உயிரிழந்த ஈஸ்வரன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அவரது மகள் வினோதினி அளித்த புகார் மீது, தேனி மாவட்ட காவல்துறை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனையடுத்து, வினோதினி மதுரை நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்து இருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், நேற்று வழங்கிய உத்தரவில் ஈஸ்வரனை ஆதாரமில்லமல் வனத்துறையினர் சுட்டுக்கொலை செய்து இருக்கின்றார்கள், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது எனத் தெளிவான ஒரு உத்தரவை வழங்கி இருக்கிறார்கள்.

இதனை மேற்கோள்காட்டி, மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்க வந்துள்ளோம். இனியும் காலதாமதபடுத்தாமல் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 7 வனத்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னையில் வெள்ள நீரில் கலந்த கச்சா எண்ணெய் கழிவுகள்.. பசுமைத் தீர்ப்பாயம் வழக்குப்பதிவு!

Last Updated : Dec 8, 2023, 5:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.