ETV Bharat / state

கொடிக்கம்பம் வைத்ததில் அதிமுக - அமமுக இடையே பிரச்னை; அமமுகவினர் திடீர் சாலை மறியல்

author img

By

Published : Oct 5, 2020, 10:31 PM IST

தேனி: சின்னமனூர் அருகே கொடிக்கம்பம் வைத்ததில் அதிமுக – அமமுக கட்சியினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையால் அமைக்கப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, அமமுகவினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

 அதிமுக - அமமுக
அதிமுக - அமமுக

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ளது கன்னிசேர்வைபட்டி கிராமம். இங்கு கடந்த சில ஆண்டுகளுக்கு அதிமுக சார்பில் கொடிக்கம்பம் ஒன்று வைக்கப்பட்டது. இதனையடுத்து சில தினங்களுக்கு முன் அப்பகுதியைச் சேர்ந்த அதிமுகவினர், அமமுகவில் இணைந்ததால் அந்தக் கொடிக்கம்பம் தங்களுக்குச் சொந்தமானது என உரிமை கொண்டாடியுள்ளனர்.

இதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து தாய்க்கழகமான தங்களுக்குத் தான் கொடிக்கம்பம் சொந்தம் எனக் கூறிவந்த நிலையில், இரு தரப்பினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில் உத்தமபாளையம் வட்டாட்சியர் தலைமையில் இதுதொடர்பாக இன்று சமாதான பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இரு தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இதில் அமமுக சார்பில் தெற்கு மாவட்ட செயலாளர் முத்துச்சாமி, அதிமுக சார்பில் உத்தமபாளையம் ஒன்றிய செயலாளர் அழகுராஜா ஆகியோர் தலைமையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் கூடினர். ஆனால் அலுவல் காரணமாக வட்டாட்சியர் உதயராணி வரத் தாமதமானதால் அதிமுக – அமமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த அமமுகவினர் பேச்சுவார்த்தைக்கு அழைத்துவிட்டு அலுவலர்கள் தங்களை புறக்கணிப்பதாகக் கூறி உத்தமபாளையம் புறவழிச்சாலையில் திடீரென அமர்ந்து மறியிலில் ஈடுபட்டனர்.

மேலும் ஓபிஎஸ் ஒழிக என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போகக் கூறியும் செல்ல மறுத்ததால் வலுக்கட்டாயமாக அவர்களை அப்புறப்படுத்தினர்.

இதனால் அமமுக - காவல்துறையினரிடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து உத்தமபாளையம் வட்டாட்சியர் வந்ததும் தாலுகா அலுவலகத்தில் வைத்து இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் முடிவு ஏதும் எட்டப்படாததால் வரும் 10ஆம் தேதி அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.